3/16/2018
தொழுகை நேரங்கள்
FRIDAY KUTHBA
3/15/2018
அன்னை சுமையா மதரஸா
3/05/2018
8/12/2015
பேச்சின் ஒழுங்குகள்
சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் ‘நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்’ என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.
விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.
மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.
ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.
நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்
நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.
இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் (33:70)
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். அல்குர்ஆன் (35:10)
ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2989)
நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள் ”அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ”எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். ”சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9996)
நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி (6023)
இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது. ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)., நூல்: புகாரி (5754)
தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.
சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ”பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். ”தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்” என்று கூறினோம். அதற்கு அவர்கள், ”அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி), நூல்: முஸ்லிம் (4020)
இஸ்லாம் காட்டும் பேச்சின் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து இம்மை மறுமை நன்மைகளை பெறுவோமாக!……………………….
6/21/2015
தீனியாத் வகுப்புகள்
நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
6/19/2015
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
6/11/2015
நோயாளியிடம் நலம் விசாரித்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் போதனைகள் இஸ்லாமிய சமூகத்தில் வெகு ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாழ்வில் ‘தான் நோய்வாய்ப்பட்டால் தனது சகோதரன் தன்னை நலம் விசாரிக்க வர வேண்டும், அது அவனது கடமை’ என்று எண்ணுமளவு இப்பண்பு வலுப்பெற்றுள்ளது. அதை மறந்துவிட்டால் அல்லது அதில் குறை ஏதும் செய்துவிட்டால் அவன் தனது சகோதரனின் கடமையை மறந்தவன். அல்லது சகோதரனின் கடமைகளில் குறை செய்தவனாகிறான். அவன் இஸ்லாமின் மேலான பார்வையில் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட பாவியாகிறான்.
நபி (ஸல்) அவர்கள், ”முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து” என கூறியபோது நபி (ஸல்) அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.” (ஸஹீஹுல் புகாரி)
ஒரு முஸ்லிம் தனது சகோதரனை நோய் விசாரித்தால் அவர் ஏதோவொரு கடமையைச் செய்து முடித்தோம் என்று எண்ணிவிடக் கூடாது. மாறாக, தனது செயலுக்காக அவர் ஆனந்தமடைய வேண்டும். பின்வரும் நபிமொழியின் கருத்தைக் கவனிக்கும்போது நலம் விசாரிப்பதன் மேன்மையை அறிந்துக் கொள்ளலாம்.
நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் ”ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.
”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.
”ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)
நோயாளியை நலம் விசாரிப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய நற்செயல்! பலவீனப்பட்ட நோயாளியான தமது சகோதரனின் விருப்பத்தை நிறைவு செய்வது எவ்வளவு உயர்ந்தது! நலம் விசாரிப்பவன் அந்த சந்தர்ப்பத்தில் மகத்துவமிக்க தனது இரட்சகனிடம் நிற்கிறான். அல்லாஹ் அவனது நற்செயலுக்கு சாட்சியாகி மாபெரும் கொடையை வாரி வழங்குகிறான். இதன்மூலம் நலம் விசாரிப்பதை பரக்கத்தானதாகவும் மிக உயர்ந்த செயலாகவும் அல்லாஹ் நிர்ணயித்து அதனை செய்யத் தூண்டுகிறான். இவ்வாறு நலம் விசாரிக்காதவன் எவ்வளவு பெரிய நஷ்டவாளி, மாபெரும் இழிவும் வேதனையும் அவனை மறுமையில் சூழ்ந்து கொள்கிறது. உலகப் படைப்புகள் அனைத்தின் முன்னிலையில் அவனிடம் ”ஆதமின் மகனே! நான் நோயுற்றபோது நலம் விசாரிக்க ஏன் வரவில்லை? எனது இன்ன அடியான் நோயுற்றபோது நீ நலம் விசாரிக்கவில்லை. அவனை நலம் விசாரித்திருந்தால் அங்கு என்னை நீ பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?” என்று அல்லாஹ் கூறுவது அவனுக்கு மாபெரும் கேவலமாகும். தனது சகோதரனை நலம் விசாரிக்காமல் தவறிழைத்த மனிதன் அடையப்போகும் சஞ்சலம், கைசேதம் பற்றி இப்போதே சிந்திப்போம். ஏனெனில் மறுமை நாள் வந்தபின் உலகிற்கு மீண்டு வரமுடியுமா?
இஸ்லாமிய சமூகத்தில் நோயாளி என்பவன் தனது துன்பத்திலும் சிரமத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையிலும் ‘தான் ஆதரவற்ற அனாதையல்ல, தன்னை இந்தச் சிரமத்திலிருந்து மீட்பதற்கு அல்லாஹ்வின் துணையுடன் உதவியாளர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு அவனது உள்ளத்தில் தோன்ற வேண்டும். இது மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இஸ்லாமின் உன்னதப் பண்பாகும். இது முஸ்லிம்களிடையே தவிர வேறெங்கும் காணமுடியாத அற்புதப் பண்பாகும். மேற்கத்திய நாடுகளில் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளும், திறமையான மருத்துவர்களும், உயர்ந்த மருந்துகளும் உள்ளன. எனினும் உறவினர்கள், நண்பர்களின் கனிவான அணுகுமுறை, ஆறுதலான வார்த்தைகள், மலர்ந்த புன்னகை, தூய்மையான பிரார்த்தனைகள் என்பது அந்த நேயாளிகளுக்கு மிகக் குறைவாகவே கிட்டுகின்றன. பொருளியலை அடிப்படையாகக் கொண்ட சிந்தனை மேற்கத்தியரை ஏமாற்றிவிட்டதுதான் இதற்குக் காரணமாகும். அது மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் அழித்து உலகில் பலன் கிடைக்காத நற்செயல்கள் செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்துவிட்டது. மனிதன் நோயாளியை சந்தித்து ஆறுதல் சொல்வதால் விளையும் நன்மைகளை உணரமாட்டான். ஒருவரை தான் சந்தித்து, அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமெனில் அவரிடமிருந்து தனக்கு உடனடியாகவோ, பிற்காலத்திலோ ஏதேனும் பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் அவனது அணுகுமுறை அமைந்திருக்கும். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு நோயாளியை சந்தித்து, ஆறுதல் கூற தூண்டுகோலாக அமைவதெல்லாம் இந்த நேரிய பாதையில் செல்பவர்களுக்கென அல்லாஹ் தயார் செய்துள்ள நன்மைகள்தான். இதற்கான சான்றுகள் ஏராளமானவை. இவை சகோதரத்துவ உணர்வை வளர்த்து நோயாளியை சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள், நோய் விசாரிப்பதால் நோயாளியின் மனதிலும் அவரது குடும்பத்தினரிடையேயும் மனிதநேயச் சிந்தனைகள் வளர்வதை அறிந்திருந்தார்கள். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளின் நலம் விசாரிப்பதில் ஒருபோதும் சடைந்ததில்லை. அவர்கள் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி பிரார்த்தனையும் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு பணிவிடை செய்து வந்த யூதச் சிறுவனைக் கூட நலம் விசாரிக்கச் சென்றதிலிருந்து நபி (ஸல்) அவர்களின் மேலான வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி (ஸல்) அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் ‘நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்’ என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ”நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!” என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், ”இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலும் அவரை இஸ்லாமின்பால் அழைக்கத் தவறவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்றது, அச்சிறுவர் மனதிலும் அவரது தந்தையின் மனதிலும் நபி (ஸல்) அவர்களின் கருணையையும், மேன்மையையும் ஆழப்பதியச் செய்தது. எனவே அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகை அவர்களுக்கு நேர்வழியை அருளியது. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறும்போது அவர்கள் அச்சிறுவரை நரகிலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் தான் எத்தகு மகத்தான மனிதர்! அவர்களது இறையழைப்புதான் எவ்வளவு விவேகமானது! நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளை நலம் விசாரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவமளித்ததுடன் அது விஷயத்தில் தங்களது தோழர்களுக்கு சில அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான் நோயாளியின் தலைமாட்டில் அமர்ந்து நலம் விசாரிப்பதும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ”உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.” (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒழுக்கங்களில் ஒன்றுதான் தங்களது வலது கரத்தால் நோயாளியை தடவிக் கொடுத்து, அவருக்காக துஆச் செய்வதும்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா” என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ”யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ”கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நோயாளிகளை நலம் விசாரிப்பதில் முஸ்லிம்கள், தலைமுறை தலைமுறையாக இப்புகழுக்குரிய நபிவழியைப் பின்பற்றி வருகிறார்கள். ஒருவருக்கொருவர் கருணையிலும் அன்பிலும் உதவி செய்து கொள்வதிலும் எடுத்துக்காட்டாகத் திகழும் இப்பண்பு முஸ்லிம்களின் தனித் தன்மையான அடையாளமாகவே நிலைபெற்றுத் திகழ்கிறது. இப்பண்பு வாழ்க்கை சுமையால் அழுந்திப்போன முதுகை நிமிர்த்துகிறது; கவலையில் வீழ்ந்தவனின் கண்ணீரைத் துடைக்கிறது; துன்பங்களால் சூழப்பட்டவனை விடுவிக்கிறது; நிராசையடைந்தவனுக்கு நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது; சகோதரத்துவ அன்பை உறுதிப்படுத்துகிறது; வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.
5/22/2015
ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!
ஆலிம்கள் உங்களுக்கு எதை மார்க்கமாய் போதிக்கிறார்கள்? சற்று சிந்தியுங்கள். அவர்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவதற்காக மார்க்கத்திற்கு எதிரானவையெல்லாம் மார்க்கமாய் போதிக்கின்றார்கள். அவைகளை இன்னமும் நீங்கள் உணராமல் இருக்கின்றீர்கள். நாங்கள் தன்னிச்சையாக ஆலிம்கள் விமர்சிப்பதாய் முகம் சுளிக்காதீர்கள். அல்லாஹ்(ஜல்) வின் கூற்றை கூர்ந்து கவனியுங்கள்.*
“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகின்றனர். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள்”. (9:34)
* மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அறிவில்லாமல் வீணானவற்றை விலைக்கு வாங்கி, அவற்றால் மக்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், பரிகாசமாக்கிக் கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தைகையோருக்கு மகத்தான வேதனையுண்டு”. (31:6)
ஆலிம்கள் தங்கள் வயிறுப் பிழைப்புக்காக மார்க்கத்தின் பெயரால் செய்துவரும் மோசடிகளை ஆலிம்களுக்கு வருமானம் தேடித்தரும் சில சடங்கு சம்பிரதாயங்கள், கீழேப் பட்டியலிடப்படுகிறது
.* மவ்லிதுகள் – இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முதல் பல்வேறு வலிமார்கள் பெயரால் ஓதப்படும் மவ்லிதுகள்.இறந்தவர்கள் பெயரால் 3ம் ஃபாத்திஹா, 7ம் ஃபாத்திஹா, 40 ம் நாள் பாத்திஹா, 6-ம் வருடப் பாத்திஹா என்று வருடம் தோறும் தொடரும் ஃபாத்திஹாக்கள் மற்றும் இறந்தவர்கள் பெயரால் நிகழ்த்தப்படும் அத்தனைச் சடங்கு சம்பிரதாயங்களும் ஃபீஸ்!*
மீலாத் மாநாடுகளில் உரையாற்றுவதற்கும், மார்க்கச் சிறப்பு சொற்பொழிவுகளும் ஃபீஸ்! (இதில் ஆலிம்களின் வழியை அப்படியே் பின்பற்றி ஆலிம்களல்லாதோரும் ஃபீஸ்
வாங்குதல்).* திருமண விழாவிற்காகப் போடப்படும் பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சிக்கு ஃபாத்திஹா ஓதிவிட்டு ஃபீஸ் வாங்குதல், மணமகனுக்கு மாலைச்சூட்டியவுடன் ஓதப்படும் பாத்திஹாவுக்கு ஃபீஸ்! நகர்வலம் பள்ளிவாசல் வந்தடைந்ததும் பள்ளியை முன்னோக்கி ஃபாத்திஹா ஓத ஃபீஸ்! இன்னும் ஊர்தோறும் மாறிக் கொண்டிருக்கும் புதுப்புது திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்திற்கும் ஃபீஸ்!
* சந்தனக்கூடு கூடாதென்று காரசாரமாய் பேசிவிட்டு – தாரைத்தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், வான வேடிக்கை, கரக ஆட்டம், மயில் டான்ஸ், பொய்க்கால் குதிரை, இத்தியாதி… இத்தியாதிகளோடு வலம் வரும் சந்தணக் கூடு பள்ளிவாசல் முன் நிற்கையில் அதற்கு துஆ ஓதி ஃபீஸ் பெறுதல்!
* புதுவீடு புகுதல், சுன்னத்(சுத்னா) வைபவம்! காதணி அணிவிக்கும் வைபவம்! இதுப் போன்ற நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஃபீஸ் பெறுதல்!
* பில்லி -சூன்யம் -தாயத்து -தட்டு -நூல் முடிதல் -தகடு தயாரித்தல் -பால் கிதாபு பார்த்தல் -பேய் ஓட்டுதல், அப்பப்பா…! இன்னும் எத்தனை எத்தனையோ….! அத்தனைக்கும் பீஸ்!
மனை முகூர்த்தம் -மாற்றுமத சடங்குகளைப் போல் ஃபாத்திஹா முலாம் பூசி அதற்கும் ஃபீஸ்!
இப்படியே பட்டியல் நீண்டு செல்லும். சேம்பிலுக்கு சிலவைகள் மட்டும் மேலேச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் முஸ்லிம் பொதுமக்களின் அறியாமையே! முஸ்லிம் பொதுமக்களின் அறியாமைத்தான் -ஆலிம்களின் மிகப் பெரிய மூலதனம்! அது மட்டுமல்ல, மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூதாதையர்கள் வழக்கங்களிலும் முஸ்லிம் பொதுமக்களுக்கிருக்கும் குருட்டு பக்தியுங்கூட.
ஓ! என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! இப்போது சிந்தியுங்கள். ஒருசில ரூபாய்களுக்கு வாங்கும் மட்பாண்டம் விஷயத்தில் கூட ஏமாறக் கூடாது என்று அவைகளைக் கொட்டிப் பார்த்துத் தட்டிப் பார்த்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாங்கும் நீங்கள் -மார்க்க விஷயத்தில் மட்டும் நீங்கள் கோட்டை விட்டு விடுகிறீர்கள். எளிதில் ஏமாந்து விடுகிறீர்கள். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முஸ்லிம் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மார்க்க ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுபவைகள் அனைத்தும் (என்று கூறாவிட்டாலும் மிகப்பெரும் பான்மையானவைகள்) சடங்கு சம்பிரதாயங்களே! சடங்கு சம்பிரதாயங்கள், மூட வழக்கங்கள் அனைத்தும் ஆலிம்களின் அங்கீகாரத்துடன் ஆலிம்களாலேயே அரங்கேற்றப்படுகிறது.
மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான – இறைவனுக்கு இணையா(ஷிர்க்கா)கும். குற்றத்திற்க்கிட்டுச் செல்லக் கூடிய இறை நிராகரி(குப்ர்)ப்பிற்க்கிட்டுச் செல்லக்கூடிய இறைமார்க்கம் இஸ்லாத்தின் அடித்தளங்களையே (குர்ஆன் – ஹதீது) தகர்த்தெறியக் கூடிய அனாச்சாரங்கள், மற்றும் மாற்று மதத்தவரின் சடங்கு சம்பிரதாயங்கள் சிற்சில மாறுதல்களுடன் மாற்றப்பட்ட நிலையில் மார்க்கமாய் மதிக்கப்படுகிறது.
சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் வயிறு வளர்ப்பவர்கள் ஆலிம்களாயிருந்தாலும் சரி, ஆலிம்களல்லாதவர்களாயிருந்தாலும் சரி, எல்லோரையும் குறிப்பாக புரோகிதத்தைத் தொழிலாய்க் கொண்டவர்களை மேற்காணும் இறைவாக்கு எச்சரிக்கிறது. இந்தப் புரோகிதத்துக்கு உறுதுணையாக இருக்கும் முஸ்லிம் பொதுமக்களே! சிந்தியுங்கள். முஸ்லிம் பொதுமக்களின் அனுசரனையே புரோகிதம் நின்று நிலைக்கக் காரணமாகிவிட்டது.
“மார்க்க முரணானவைகள் நடக்கக் காண்போர் இயன்றால் கரத்தால் தடுக்கட்டும். இல்லையென்றால் வாய்மொழியால் கண்டித்துத் திருத்தட்டும். அதுவும் முடியாதோர் மனத்தால் வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடை நிலை”. முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ)
சடங்கு சம்பிரதாயங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், அனாச்சாரங்களுக்கும் இஸ்லாத்தில் இம்மியும் இடமில்லை; இஸ்லாமிய அங்கீகாரமுமில்லை. இருப்பினும் இன்றளவும் இவைகள் சமூக நியதியாகிவிட்டன. இதன் மூலம் இறைமார்க்கம் அனுமதித்தவைகள் விலக்கப்பட்டும், விலக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு உறுதுணையாயிருப்பவர்கள் ஆலிம்கள்!
* “அவர்கள் தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் மஸீஹிப்னு மர்யத்தையும் அல்லாஹ்வை விட்டு (விட்டு) தங்கள் ரப்புகளாக ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அவனின்றி வேறு இறைவனில்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்”. (9:31)
இந்த இறைவாக்கு இறங்கியபோது கிருஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய அதி இப்னு ஹாத்தம்(ரழி) என்ற நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே! (ரப்புகளாக்கி விட்டதாக இறைவன் கூறுகின்றானே…!) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியதை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியதை ஹராம் என்றும் (ஆதாரம் இன்னதென்று ஆய்ந்தறியாமல் – கண்மூடித்தனமாய்) நீங்களும் நம்பினீர்கள். இல்லையா! (ஆம்) அது தான் அவர்களை ரப்புகளாக ஆக்கியது” என்று விளக்கம் தந்தார்கள். (அஹ்மத், திர்மிதீ)
முன்னுள்ள சமுதாயத்தவர்கள் செய்த தவறுகள் இந்தச் சமுதாயத்தவராலும் தொடரக் கூடாதென்கிற எச்சரிக்கையே மேற்காணும் இறைவாக்க. அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அளித்த விளக்கம்: மார்க்கம் இவ்வளவு தெளிவாக எச்சரித்தப் பின்னரும் ஆலிம்களின் புரோகிதத்துக்கும், முஸ்லிம் பொதுமக்கள் இயன்றளவும் உறுதுணையாயிருப்பது வேதனைக்குறியதல்லவா?
என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! நன்றாக, அழகாக, ஒருமுறைக்குப் பன்முறை சிந்தியுங்கள் சிந்தியுங்கள்! புரோகிதம், புரோகிதர்கள் இவ்விரண்டில் கெடுதிகளை விட்டும் மீட்சிப்பெற முன்வாருங்கள். அப்போதுத் தான் இஸ்லாம் நிலைநாட்டிய பிரிவுகளற்ற ஆலிம் அவாம் என்ற பேதமில்லாத, சமதர்ம, சமத்துவ, சகோரத்துவ, வாஞ்சை மிக்க சமுதாயத்தை நிறுவ முடியும்.
மார்க்கம் காட்டித் தந்துள்ள செயல்கள் அனைத்தும் சாதாரணச் சாமான்யரும் செய்வதற்கேதுவாய் மிகவும் எளிதாகவே இருக்கிறது. அவைகளை செய்ய வேண்டிய முறைகளை அறியாமலிருப்பதால் முஸ்லிம் பொதுமக்களுக்கு அவை பளூவாகத் தெரிகின்றன. முஸ்லிம் பொதுமக்கள் அனைவரும் அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வின் பெயரால் இம்மை மறுமையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றையே குறிக்கோளாக்கி, மார்க்க ரீதியில் செய்ய வேண்டிய வகைகளை அறிந்துக் கொண்டால் புரோகிதர்களும், புரோகிதமும் முற்றாய் ஒழித்துவிடும். அப்போது முஸ்லிம் பொது மக்கள் மார்க்கம் கட்டளையிடும் செயல்கள் எளிமையாக இருப்பதை எளிதில் உணர்வர்.
கூலிக்கு ஆள் பிடித்துத்தான் புரோகிதர்களைக் கொண்டு மட்டுமே செய்ய வேண்டிய அனைத்தும் மூடச்சடங்கு சம்பிரதாயங்களும், அனாச்சாரங்களுமேயாகும். அவைகள் மார்க்கத்திற்கு முரணானவைகள், அவைகளால் வயிறு வளர்ப்போர் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுமாறு முஸ்லிம் பொதுமக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
4/27/2015
4/24/2015
எனர்ஜிக்கு என்ன செய்யலாம்?
‘‘காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள கழிவுகள் சரியான முறையில் வெளியேறும். 30 நிமிட உடற்பயிற்சிகளை காலையில் செய்வது அவசியம். காலை உணவாக புரதம், நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஓட்ஸ், ராகி கஞ்சி, முளை கட்டிய பச்சைப் பயறு, சுண்டல், இட்லி, தோசை போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
மந்தமான உணர்வை ஏற்படுத்தும். காலையிலேயே அஜீரணத்தை ஏற்படுத்தி உங்களின் சுறுசுறுப்பான நாளை வீணாக்கிவிடும். பத்து மணிக்கு மேல் ஒரு கப் தயிரில் பழங்களை வெட்டிப்போட்டு ஐஸ்க்ரீம் போல சாப்பிடலாம் அல்லது ஒரு மில்க்ஷேக் அருந்தலாம். தயிரில் கால்சியமும், உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களும் இருப்பதால் உணவு செரிமானத்தை மேம்படுத்தும்.
மதியம் இரண்டு மணிக்குள் சமச்சீரான உணவுகளை மதிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதத்துக்கு இணையாக காய்கறி கூட்டு, பொரியல், அவியல் எடுத்துக்கொள்வது அவசியம். அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் அவித்த சிக்கன் அல்லது மட்டன் கறி இரு துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். மாலை நான்கு மணி அளவில் பாப்கார்ன், பொரி, அவித்த சுண்டல், ஸ்வீட்கார்ன் சூப், பழச்சாறு போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம். காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அருந்தக் கூடாது.
இரவில் எளிமையான உணவுகளான கோதுமை தோசை, அடை அவியல், இட்லி, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றை உண்ணலாம். இரவில் பொரித்த உணவுகளான புரோட்டா, சிக்கன் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இயற்கையான பழச்சாறுகளை மட்டுமே அருந்தவேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், துரித உணவுகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். குறைந்தது எட்டு மணி நேர தூக்கம் உடலுக்கு அவசியமானது. நேரம் தவறி சாப்பிடக் கூடாது. சுருக்கமாக சொன்னால் முறையான உணவும், போதுமான தூக்கமும், தேவையான அளவு உடற்பயிற்சியும் இருந்தால் எல்லா நாளும் சுறுசுறுப்பாக இயங்கும் இனிய நாளாக மாறிவிடும்...’’
3/30/2015
3/28/2015
இஸ்லாமிய வினாடி வினா?
2)குர் ஆனில் கவிஞர்கள் என்ற பெயரில் துவங்கும் அத்தியாயம் எது?
3)குர் ஆனில் பொன் அலங்காரம் என்ற பெயரில் துவங்கும் அத்தியாயம் எது?
4)அன்டை நாட்டு ராணியின் சிம்மாசனத்தை கொண்டு வந்து விடுகிறேன் என்று சொன்ன ஜின்னின் பெயர் என்ன?
5)பின் சுன்னத் இல்லாத தொழுகைகள் எது?
6)பாங்கு இகாமத் இல்லாத தொழுகைகள் எது?
7)ஸபா நாட்டு இளவரசி பல்கீஸ் ஆண்டை கோட்டை தற்போது எந்த நாட்டில் உள்ளது?
தினம் முன்று பேரீட்சை
ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.
அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும்.
100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...



























