நாம் தொழும்போது, மறதியாக நிகழும் கூடுதல், குறையுதல் முதலியவற்றை நிவர்த்திச் செய்வதற்காக தொழுகையின் இறுதியில் செய்யப்படும் இரு ஸஜ்தாக்களாகும்.
”ஸுஜூதுஸ்ஸஹ்வு” எவ்வாறு செய்ய வேண்டும்?
ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்வதற்கு இரு முறைகள் உள்ளன.
1. தொழுகையின் இறுதியில் ஸலாம் கூறுவதற்கு முன் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறுதல்.
2. தொழுகையின் இறுதியில் ஒரு ஸலாம் கூறிவிட்டு பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு மீண்டும் ஸலாம் கூறுதல்.இவ்விரு முறைகளில் எதனையும் எடுத்து அமல் செய்து கொள்ளலாம். ”ஸுஜூதுஸ்ஸஹ்வு” செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள்:
1. முதல் இருப்பில் (நடு இருப்பில்) உட்காராமல் எழுந்துவிட்டால் (ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்) ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தாம் இரண்டாவது ரகாஅத்திலிருந்து உட்காரமல் எழுந்து விட்டார்கள். அவர்களுடன் (சேர்ந்து) மக்களும் எழும்பி விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்கும் தருவாயில், மக்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் தாம் ஸலாம் கொடுப்பதற்கு முன் தக்பீர் சொல்லி, 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறினார்கள். (இப்னுபுனஹனா(ரழி), பாடம்: ஸுஜூதுஸ்ஸஹ்வு, புகாரீ, முஸ்லிம்)
2) தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், எது சரியானது என்ற முடிவுக்கு வந்து, அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு பின்னர் அதற்காக ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்.
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் தோன்றிவிட்டால், எது சரியானது என்ற முடிவுக்கு வந்து, அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு, பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமஸ்ஊத்(ரழி), முஸ்லிம், அபூதவூத், நஸயீ, இப்னுமாஜா)
3. எது சரியானது? என்பதை தம்மால் ஊர்ஜிதம் செய்ய இயலாவிடில், சந்தேகத்தை அகற்றிவிட்டு, தமக்கு ஊர்ஜிதமானது எதுவோ அதன்படி அமல் செய்துவிட்டு, பின்னர் ”ஸுஜூதுஸ்ஸஹ்வு” செய்து கொள்ளவேண்டும்.
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு நாம் தொழுதது மூன்றா? அல்லது நான்கா? என்பது அவருக்குப் புலப்படவில்லை என்றால், உடனே அவர் சந்தேகத்தை அகற்றிவிட்டு, நமக்கு உறுதியானதன்படி, தொழுது முடித்து, பின்னர் தாம் ஸலாம் கூறுமுன், 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! அவர் 5 ரகாஅத்து தொழுதவராகி விட்டால், அவருடைய இவ்விரு ஸஜ்தாக்களும் ஒரு ரகாஅத்துடைய நிலையில் ஆகி (அவருடைய தொழுகை அவருக்கு இரட்டையாகி விடுகிறது) (அவ்வாறின்றி) அவர் முழுமையாக நான்கு ரகாஅத்துக்கள் தொழுதவராகி விட்டால், நாம் உபரியாகச் செய்துள்ள) 2 ஸஜ்தாக்களும் ஷைத்தானின் தோல்விக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்து விடுகின்றன. (அபூஸயீதில் குத்ரீ(ரழி), முஸ்லிம், அஹ்மத்)
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு, தாம் தொழுதது ஒரு ரகாஅத்தா, அல்லது இரண்டா? என்பது நமக்கு புலப்படாவிடில் (இந்நிலையில் அவர் ஒன்று தொழுதது தமக்கு உறுதியாயிருப்பதால்) அதை ஒன்றுதான் என்று ஊர்ஜிதம் செய்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறே தாம் தொழுதது இரண்டா, அல்லது மூன்றா? என்பது புரியாவிட்டால், (மேற்கண்டவாறு) 2 தான் என்று ஊர்ஜிதம் செய்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தாம் தொழுதது மூன்றா? அல்லது நான்கா? என்பது புரியாவிட்டால், மூன்றுதான் என்று ஊர்ஜிதம் செய்து அதன்படி அமல் செய்துவிட்டு, பின்னர் தாம் ஸலாம் கூறுவதற்கு முன் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்ளவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துர்ரஹ்மான் அவ்ஃப்(ரழி), திர்மிதீ)
இவ்வறிவிப்பு இதற்கு முன்னால் உள்ள அறிவிப்புக்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுகிறோம். ஏனெனில் முந்தைய அறிவிப்பில் தமக்கு சந்தேகமானதை விட்டுவிட்டு, உறுதியானதன்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் அதற்கேற்ப, உறுதியானது இன்னதென்பதை இவ்வாறு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் ஒன்றா, இரண்டா? அல்லது இரண்டா, மூன்றா, அல்லது மூன்றா, நான்கா? என்பனவற்றில் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டு சற்று தடுமாறும் நிலை ஏற்பட்டுவிட்டால், அதிகபட்சத்தை விட்டு விட்டு, குறைந்த பட்சத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அதன்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.
4. ஒருவருக்கு சந்தேகம் தமது தொழுகையின் மத்தியில் ஏற்படாமல், குறிப்பாக தொழுகையின் கடைசி இருப்பில் இருக்கும்போது தாம் எத்தனை ரகாஅத்துக்கள் தொழுதுள்ளோம் என்பதே புரியாதவராகி விட்டால், அதற்காக அவர் (கடைசி இருப்பில்) தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கொடுக்கவேண்டும்.
உங்களில் ஒருவர் தாம் தொழ ஆரம்பித்து விட்டால் ஷைத்தான் (அவரிடம்) வந்து, (பல சிந்தனைகளை உண்டு பண்ணிவிட்டு, அவரைக் குழப்புவான். (அதனால்) அவர் தாம் எவ்வளவு தொழுதுள்ளார் என்பதை புலப்படாதவராகிம் விடுவார். உங்களில் ஒருவருக்கு இந்நிலை ஏற்பட்டு விட்டால், உடனே அவர் தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹ{ரைரா(ரழி), பாடம்: ஸுஜூதுஸ்ஸஹ்வு, புகாரீ, முஸ்லிம்)
உங்களில் ஒருவருக்கு மறதி ஏற்பட்டு, தாம் அதிகமாக தொழுதுள்ளாரா? அல்லது குறைவாக தொழுதுள்ளாரா? என்பதும் புரியவில்லையாயின், அப்போது அவர் தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கூறுவாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (யஹ்யாபின் அபீகதீர்(ரழி), தாருகுத்னீ)
மேற்காணும் இரண்டு அறிவிப்புகளிலும் காணப்படும் பரிகாரமுறை அனைவருக்கும் பொதுவான முறை அல்ல என்பதை நினைவில் கொள்வோமாக! இது ஒருவருக்கு தமது தொழுகையின் மத்தியில் எல்லாம் ஏற்படாமல், தாம் தொழுது முடிக்கும் தருவாயில், தொழுகையின் கடைசி இருப்பில் உட்கார்ந்திருக்கும் போது திடீரென்று அவருக்குத் தோன்றும் சந்தேகமாகும். அதுவும் இதற்கு முன் உள்ள அறிவிப்புகளில் காணப்பட்டதைப் போன்றுள்ள சாதாரணமான சந்தேகம் அல்ல. அவற்றைப் பார்க்கினும் கடுமையான வகையில் பொதுவாக தாம் தொழுதவை இத்தனை ரகாஅத்துகள் தான் என்றோ, கூட்டித் தொழுதுள்ளோமா, அல்லது குறைத்துத தொழுதுள்ளோமா? என்பதை புரியாத நிலையில், (அதுவும் கடைசி இருப்பில் ஸலாம் கூறுவதற்கு தயார் நிலையில் இருக்கும்போது தோன்றும், மிகச் சிக்கலான சந்தேகமாகும். இத்தகைய சிக்கலான சந்தேகத்தை உடையவர் தான் மேற்காணும் இரண்டு ஹதீஸ்களிலும் கூறப்பட்டவாறு, தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கூறி தமது தொழுகையை நிறைவு செய்து கொள்ள வேண்டுமே அன்றி, வேறு எவரும் அவ்வாறு செய்து கொள்ளக் கூடாது.
5) ஒருவர் தாம் தொழ வேண்டிய ரகாஅத்துகளை விட ஒரு ரகாஅத் அதிகமாக தொழுது விட்டால் அப்போது அவர்கள், அப்படி என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நீங்கள் 5 ரகாஅத்துகள் தொழவைத்து விட்டீர்கள் என்று ஒருவர் கூறினார். உடனே தாம் ஸலாம் கூறிவிட்டு பின்னர் ஸஜ்தாக்கள் செய்தார்கள். பாடம்: ஸுஜூதுஸ்ஸஹ்வு. (இப்னுமஸ்ஊத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
இப்னு ஸிரீன் அவர்களிடத்தில் நபி(ஸல்) அவர்கள் ஸஹ்வுடைய ஸஜ்தாக்கள் செய்த பின்னர் மீண்டும் ஸலாம் கொடுத்தார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம், நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறினார்கள் என்று இம்ரான்பின் ஹுஸைன்(ரழி) அவர்கள் தமக்கு அறிவித்ததாக கூறினார்கள்.ஆகவே, புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் காணப்படும் இந்த ஸஹீஹான ஹதீஸின்படி நபி(ஸல்) அவர்களுக்கு, தாம் தொழுது முடித்த பின்னர், ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, அந்த ஸுஜூதுஸ்ஸஹ்வு அவர்கள் முதலில் ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு செய்வார்களேயானால், அவ்வாறு அவர்கள் ஸஜ்தாக்கள் செய்தவுடன் ஸலாம் கூறிவிடுவார்கள் என்று மட்டுமே உள்ளது. இவ்வறிவிப்பின்படி, முதலில் ஸலாம் கூறிவிட்டு பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்பவர் அவ்வாறு அவர் ஸஜ்தாக்கள் செய்து விட்டு, எழுந்து உட்கார்ந்தவுடன் ஸலாம் கூறி விடுவது ஆகுமானதாயிருப்பினும், அவர் ”அத்தஹிய்யாத்” ஓதிவிட்டு ஸலாம் கொடுப்பதே மேலானதாகும்.
ஏனெனில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு ஸலாம் கொடுக்க வேண்டும் என்பதாக இப்னுமஸ்ஊத்(ரழி), அவர்கள் வாயிலாக அபூதவூத், நஸயீ ஆகியவற்றிலும், முகீரா(ரழி) வாயிலாக பைஹகீயில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் பலகீனமானவையாயிருப்பினும், ”நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்த பின்னர், ”அத்தஹிய்யாத்” ஓதிய பின்னரே ஸலாம் கொடுப்பார்கள்” என்பதற்கான ஸஹீஹான அறிவிப்பொன்று இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாகவோ ”முஸன்னஃப் இப்னுஷைபா”வில் இடம் பெற்றிருப்பதாக ஹாபிழ் ஸலாஹுத்தீனில் அலாயீ(ரஹ்) அவர்கள் கூறுவதாக ஹாபிழ் இப்னு ஹஜ்ர்(ரஹ்) அவர்கள் தமது ஃபத்ஹுல்பாரீயில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாக ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் மறதியாக 5 ரகாஅத்து தொழ வைத்துவிட்ட போது, (தாம் கிப்லாவின் பக்கம்) திரும்பி 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கொடுத்தார்கள் என்றும் உள்ளது.
ஆகவே, நபி(ஸல்) அவர்கள் தாம் மறதியாக 5 ரகாஅத்து தொழ வைத்துவிட்ட நிலையில் ஸுஜூதுஸ்ஸஹ்வுக்குரிய இருமுறைகளில் ஒரு முறைப்படி ஒரு சந்தர்ப்பத்திலும், மற்றோர் முறைப்படி மறு சந்தர்ப்பத்திலும் செய்துள்ளார்கள் என்பதிலிருந்து, யாரும் இரு முறைகளில் ஒன்றின்படி அமல் செய்து கொள்ளலாம் என்பதைத் தெளிவாக அறிகிறோம். ஒருவர் தாம் தொழ வேண்டிய ரகாஅத்துகளில் மறதியாக ஒன்றையோ, அல்லது இரண்டையோ குறைத்துத் தொழுது விட்டால், அவற்றை நிறைவு செய்துவிட்டு, இறுதியில் ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் அஸ்ரு தொழ வைத்தார்கள் அப்போது 3வது ரகாஅத்தில் ஸலாம் கொடுத்துவிட்டு தமது வீட்டில் புகுந்து விட்டார்கள். உடனே கைதாராளம் வாய்ந்தகிர்பாக்(ரழி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! என்று அழைத்து அவர்களின் நடப்பை எடுத்துக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆவேசத்துடன் தமது மேல் ஆடையை இழுத்தவர்களாக வெளியில் வந்து, மக்களை நோக்கி இவர் கூறுவது உண்மையா? என்றார்கள். அனைவரும் ”ஆமாம்” என்றனர். உடனே ஒரு ரகாஅத்து தொழ வைத்துவிட்டு, பிறகு ஸலாம் கூறி, 2 ஸஜ்தாக்கள் செய்து பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். (இம்ரான்பின் ஹ{ஸைன்(ரழி), முஸ்லிம்)
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ரு தொழ வைக்கும்போது, இரண்டாவது ரகாஅத்தில் ஸலாம் கொடுத்து விட்டார்கள். அப்போது ”துல்யதைன்” என்று அழைக்கப்படும் ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா, அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு, அப்படி எல்லாம் எதுவும் நிகழவில்லை” என்றார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! ”அப்படி சில மட்டுமே நிகழ்ந்துள்ளன” என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி ”துல்யதைன்” கூறுவது உண்மைதானா? என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே! ‘ஆமாம்’ என்றனர். உடனே அவர்கள் தொழுகையில் விடுபட்டவற்றை நிறைவு செய்துவிட்டு, தாம் உட்கார்ந்த நிலையில் ஸலாம் கொடுத்த பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்தார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
7 தொழுகையில் மறதியாக இரண்டாவது ரகாஅத்தை விட்டும் எழும் ஒருவருக்கு நினைவு வந்து விட்டால், அவர் முழுமையாக எழாத நிலையில் இருந்தால், உடனே உட்கார்ந்து கொள்ளவேண்டும். முழுமையாக எழுந்து விட்டால் மீண்டும் உட்காராமல் தமது தொழுகையை நிறைவு செய்து விட்டு இறுதியில் ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு இமாம் இரண்டாவது ரகாஅத்தில் (உட்காராமல்) எழுவாரானால், தாம் முழுமையாக எழுவதற்கு முன் அவருக்கு ஞாபகம் வந்து விட்டால் உடனே அவர் உட்கார்ந்து கொள்ள வேண்டும். (அவ்வாறின்றி) அவர் முழுமையாக எழுந்து விட்டால் பிறகு உட்காருவது கூடாது. அதற்காக அவர் தமது (தொழுகையின் இறுதியில்) மறதிக்குரிய 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்ள வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முகீரத்துபின் ஷ{ஃபா(ரழி), அபூதவூத், இப்னுமாஜா)
இதன் அறிவிப்புத் தொடரில் ”ஜாபிருல்ஜுஅஃபீ” எனும் நம்பகமற்ற ஒருவர் இடம் பெற்றிருப்பதால் இதை பலகீனமான அறிவிப்பென்று கருதப்பட்டாலும், இப்ராஹீம்பின் தஹ்மான், கைஸுப்னிர்ரபீஃ ஆகிய இருவரும் ”தஹாவீஃபீஷர்ஹில் மஆனி” எனும் நூலில் (பாகம் 1, பக்கம் 255-ல்) காணப்படும் இந்த ஹதீஸின் நிலையை சரி கண்டு, இதை ஸஹீஹான அறிவிப்பென்று ஊர்ஜிதம் செய்துள்ளனர். (மிஷ்காத் தஹ்கீக் அல்பானீ பாகம் 1, பக்கம் 322) ஸுஜூதுஸ்ஸஹ்வு (மறதிக்கான ஸஜ்தாக்கள்) செய்வோரின் கவனத்திற்கு
1. இமாம் இரண்டாவது ரகாஅத்தில் உட்காராமல் மறதியாக எழுந்துவிட்டால் அவரைப் பின்பற்றித் தொழுவோரும் அவ்வாறே அவருடன் எழும்பி விட வேண்டும்.
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ளுஹர் தொழுகையில் இரண்டாவது ரகாஅத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். அப்போது அவர்களுடன் தொழுதோரும் எழுந்து விட்டார்கள். (ஹதீஸ் சுருக்கம்) (இப்னு புஹைனா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
2. இமாம் தமது மறதிக்காக ஸஹ்வுடைய ஸஜ்தாக்கள் செய்யும் போது பின்பற்றித் தொழுவோரும் அந்த ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.
”இமாம் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள்” என்று இமாமுடன் ஸஜ்தா செய்யும்படி பொதுவாகவே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (ஹுமைதீ(ரழி), பாடம்: இமாமத், முஸ்லிம்)
3. மறதிக்கான ஸஜ்தாக்கள் செய்யும்போது, ஸஜ்தா செய்வதற்காக தமது தலையைத் தாழ்த்தும் போதும், அதிலிருந்து தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூற வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நான்கு ரகாஅத்துகள் தொழ வேண்டியிருக்க, மறதியால் 2வது ரகாஅத்திலேயே ஸலாம் கூறிவிட்டார்கள். பிறகு விஷயம் தெரிந்தவுடன் விடுபட்ட 2 ரகாஅத்துகளையும் தொழுது விட்டு, ஸலாம் கொடுத்து, பிறகு தக்பீர் கூறி ஸஜ்தா செய்து, பிறகு தக்பீர் கூறி தலையை உயர்த்தி, பிறகு தக்பீர் கூறி மீண்டும் ஸஜ்தா செய்து, பிறகு தக்பீர் கூறி எழுந்து அமர்ந்தார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
4. ஒருவர் இமாமை அவர் ருகூஃவிலிருக்கும்போது பின்பற்றி, ருகூஃவுக்குச் சென்றுவிட்டார். அப்போது இமாம் தலையை உயர்த்தினார். இந்நிலையில் அவருக்கு தாம் இமாமுடன் ருகூஃவில் சேர்ந்துவிட்டோமா, இலலையா? என்று சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அப்போது அவர் தமக்கு சந்தேகமாயுள்ள அந்த ரகாஅத்தைக் கணக்கில் எடுக்காமல், தொழுதுவிட்டு ”மறதிக்கான 2 ஸஜ்தாக்கள்” செய்து கொள்ளவேண்டும்.
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு தாம் தொழுதவை மூன்றா அல்லது நான்கா? என்பது புலப்படவில்லை என்றால், உடனே சந்தேகத்தை அகற்றிவிட்டு தமக்கு உறுதியானதன்படி தொழுது முடித்துவிட்டு, பின்னர் தாம் ஸலாம் கூறும் முன் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! ”மறதிக்கான 2 ஸஜ்தாக்கள்” செய்து கொள்ள வேண்டும்.
தொழுகையில் தவறிழைக்கும் இமாமுக்கு அதை உணர்த்தும் முறை: ”உங்கள் தொழுகையில் உங்களுக்கு ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விட்டால், ஆண்கள் (ஜமாஅத்தாக தொழும்போது) ”தஸ்பீஹ்” சொல்வார்களாக! பெண்கள் ஒரு கையின் உள் பாகத்தால் மற்றொரு கையைத் தட்டுவார்களாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹ்லுபின் ஸஃது(ரழி), புகாரீ, முஸ்லீம்)
மேற்காணும் அறிவிப்பில் இமாம் ஏதேனும் தவறிழைக்கும்போது அதை அவருக்கு உணர்த்தக் கூடியவர் ஆணாகயிருப்பின் ”சுப்ஹானல்லாஹ்” என்று சப்தமாகக் கூறுவதன் மூலமாகவும், பெண்களாயிருப்பின் தஸ்பீஹ் எதுவும் கூறாமல், தமது ஒரு கையின் உட்புறத்தால் மற்றொரு கையைத் தட்டுவதன் மூலமாகவும் உணர்த்த வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.