12/22/2011

ஜமாஅத் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், “இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக!” என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

காலை அல்லது மாலை நேரங்களில் மஸ்ஜிதுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவதில் ஆர்வமுடையவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறியுள்ளார்கள்.

“எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.” பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுகளில் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். நியாயமான காரணமின்றி ஜமாஅத்தை விடுபவரை வீட்டுடன் சேர்த்து எரித்துவிட நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

“எவனுடைய கரத்தில் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நான் விறகுகளைக் கொண்டுவர உத்தரவிட்டு, பிறகு தொழுகைக்கான “அதான்’ சொல்ல ஏவி, பிறகு ஒரு மனிதரை இமாமாக நிற்க உத்தரவிட்டபின் நான் ஜமாஅத் தொழுகைக்கு வராதவர்களிடம் சென்று அவர்களை வீட்டுடன் சேர்த்து எரித்திட விரும்புகிறேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதற்குப் பிறகும் இமாம் ஸயீதுப்னுல் முஸய்யிப் (ரழி) போன்றவர்களைக் காண்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்கள் முப்பதாண்டு காலமாக மஸ்ஜிதில் எவருடைய பிடரியையும் பார்த்ததேயில்லை. அவர்கள் பாங்கு சொல்லப்படும் முன்பே முதல் வரிசையில் அமர்ந்திருப் பார்கள். இஸ்லாமிய வரலாறு ஸயீது (ரழி) போன்ற பல உதாரணங்களைக் கண்டிருக்கிறது. “அதான்’ சப்தத்தைக் கேட்டவுடன் நபித்தோழர்கள் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்ற, அவர்களது இல்லங்கள் வெகுதூரமாக இருந்தது அவர்களுக்கு தடையாக அமையவில்லை. அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள். அவர்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனிடம் நன்மையாகக் கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்திருந்ததால் மஸ்ஜிதிலிருந்து தங்களது இல்லங்கள் வெகு தொலைவிலிருப்பது குறித்து மகிழ்ச்சி யடைந்தார்கள்.

உபை இப்னு கஅப்(ரழி) அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், “நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!” என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: “நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தங்களது இல்லங்கள் மஸ்ஜிதிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதை எண்ணி பள்ளிக்கு அருகிலேயே தங்களது இல்லங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த வெகுமதியை வழங்கினார்கள். பள்ளியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அவர்களது செயலேட்டில் எழுதப்படும் என்பதையும், பள்ளியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட அதிகமான எட்டுக்கள் வீணடிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஸ்ஜிதுந் நபவியைச் சுற்றியிருந்த இடங்கள் காலியானபோது பனூ ஸலமா குலத்தவர்கள் தங்களது வீடுகளை மஸ்ஜிதுக்கு அருகில் மாற்றிக்கொள்ள விரும்பினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியவந்தபோது அவர்களிடம், “நீங்கள் மஸ்ஜிதுக்கு அருகில் வீடுகளை மாற்றிக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என கேள்விப்பட்டேனே” என்றார்கள். அவர்கள் “ஆம் இறைத்தூதரே! நாங்கள் விரும்பினோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “பனூ ஸலமாவே! உங்கள் (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படுகின்றன, (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படுகின்றன” என்று கூறினார்கள். பனூ ஸலமா குலத்தினர் “மஸ்ஜிதின் அருகே வீடுகளை மாற்றிக் கொள்வதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்று கூறிவிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இக்கருத்துள்ள ஹதீஸ் அனஸ் (ரழி) அவர்களின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டு ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

பஜ்ரு மற்றும் இஷா தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவைகளில் நபி (ஸல்) அவர்கள் இவ்விரு தொழுகையையும் ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர்கள் அடையும் மகத்தான நன்மைகளை விவரித்துள்ளார்கள். அதில் இரண்டை மட்டும் காண்போம்.

1) உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: “இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

2) அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மறுமை வாழ்வில் மகத்தான வெற்றியை அடைய ஆவல் கொண்ட இறையச்சமுள்ள முஸ்லிம் இரவு பகலில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நபில்கள் தொழுவதைத் தவறவிட மாட்டார். அதிகமாக நபில் தொழுவது அடியானை அல்லாஹ்வின் அருகில் இட்டுச் செல்கிறது. அந்த முஸ்லிமை உயர் அந்தஸ்துக்குக் கொண்டு சென்று இரட்சகனின் நேசத்தையும் திருப்பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது. அது உண்மையிலேயே மகத்துவமிக்க உன்னதமான அந்தஸ்தாகும். அந்த நிலையை அடைந்தவரை அல்லாஹ் தனது வல்லமையால் அருளுக்குரியவராக தேர்ந்தெடுக்கிறான். அவரது செவிப்புலனாக, அவரது பார்வையாக, அவரது கரமாக மாறி விடுகிறான். இதற்கு ஹதீஸ் குத்ஸி சான்றளிக்கிறது.

“எனது அடியான் நபில்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி)

ஒர் அடியானை அல்லாஹ் நேசித்தால் வானம், பூமியில் உள்ளவர்களும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். இதற்கு அபூஹுரைரா (ரழி) அவர்களின் அறிவிப்பு பொருத்தமாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் ஒர் அடியானை நேசித்தால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து “நான் இன்ன அடியானை நேசிக்கிறேன்; நீங்களும் நேசிக்க வேண்டும்” என்று கூறுகிறான். அவர் நேசிக்கிறார். பிறகு வானத்தில் உள்ளவர்களை அழைத்து “நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதரை நேசிக்கிறான்; நீங்களும் நேசம் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார். பின்பு அந்த அங்கீகாரம் பூமிக்கும் இறக்கப்படுகிறது. அவ்வாறே ஒர் அடியானை அல்லாஹ் வெறுத்தால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து “நான் இன்ன மனிதனை வெறுக்கிறேன்; நீங்களும் அவனை வெறுத்துவிடுங்கள்” என்று கூறுகிறான். அவர் வெறுப்பை வெளிப்படுத்துகிறார். பிறகு வானத்தில் உள்ளவர்களை அழைத்து “நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதனை வெறுக்கிறான்; நீங்களும் வெறுத்துவிடுங்கள்!” என்று கூறுகிறார். வானத்தில் உள்ளவர்களும் வெறுக்கிறார்கள். பிறகு அவன் மீதான வெறுப்பு பூமிக்கு இறக்கப்படுகிறது.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது பாதங்கள் வீங்குமளவு இரவு நேரங்களில் நின்று வணங்கினார்கள். அவர்களிடம் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அது குறித்து “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு தொழுகிறீர்கள்? உங்களது முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டானே” என்று கேட்டபோது “நான் நன்றியுள்ள அடியாராக ஆக வேண்டாமா?” என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் தனது தொழுகையை அழகிய முறையில் அதன் நிபந்தனைகளைப் பூரணப்படுத்தி நிறைவேற்ற ஆர்வம்கொள்ள வேண்டும். சிந்தனைகள் சிதறி மனம் குழம்பிய நிலையில் நிற்பது, உட்காருவது, அசைவது போன்ற செயல்கள் மட்டுமே தொழுகை அல்ல. முஸ்லிம் தொழுகையை முடித்தவுடன் உலகின் பொருளை அதிகமதிகம் தேடும் வேட்கையில் பள்ளியிலிருந்து விரண்டு வெளியேறிச் சென்றுவிடக்கூடாது. மாறாக, தொழுகைக்குப் பின் பரிசுத்த நபிமொழி வலியுறுத்தும் தஸ்பீஹ், திக்ரு மற்றும் பாவமன்னிப்புக் கோருவதில் ஈடுபடவேண்டும்.

தொழுகைக்குப் பின் இதயத்தின் ஆழத்தில் எழும் இறை அச்சத்துடன் இம்மை மறுமை நலன்களை அருளுமாறும் தனது செயல்களைச் சீராக்கும்படியும் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். அப்போதுதான் அந்தத் தொழுகை, ஆன்மா பரிசுத்தமாவதற்கும் இதயம் மென்மை பெறவும் காரணமாக அமையும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எனது கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது.” (ஸுனனுன் நஸய்யி)

இறையச்சமுள்ள தொழுகையாளிகள் அபயமளிக்கும் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் துன்பம் எற்பட்டால் திடுக்கிடவோ, நன்மைகளை அடைந்தால் தடுத்து வைத்துக் கொள்ளவோ மாட்டார்கள். இதையே பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

மெய்யாகவே மனிதன் பதட்டக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஏனென்றால் அவனை ஒரு தீங்கு அடைந்தால் (திடுக்கிட்டு) நடுங்குகிறான். அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ அதனை(ப் பிறருக்கும் பகிர்ந்தளிக்காது) தடுத்துக் கொள்கிறான். அயினும் தொழுகையாளிகளைத் தவிர. (அல்குர்அன் 70:19-22)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...