2/06/2012

ரபீஉல் அவ்வல்

ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி صلى الله عليه وسلم அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.

மற்ற மதத்தவர்கள் எப்படி தங்கள் வேதங்களையும் மதச்சிறப்புகளையும் வேதாந்தமாகவும் வெற்று முழக்கங்களாகவும் ஆக்கி விட்டரனரோ அதே போல் முஸ்லிம்களும் இஸ்லாத்தின் தூய வாழ்க்கை நெறி முறைகளையும் வெற்று முழக்கங்களாகவும், பஜனை பாடுவதாகவும் ஆக்கிவிட்டார்கள் என்பதை இந்த மீலாது விழாக்களும் மவ்லூது சபைகளும் தெள்ளத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன. மாற்று மதத்தினரை அடி பிசகாமல் அப்படியே பின்பற்றி நடக்க ஆரம்பித்து விட்டனர் முஸ்லிம்களும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.

“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.

முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் இந்த மீலாது விழாக்களில் மாற்று மதத்தினரையும் அழைத்து அவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், நபி صلى الله عليه وسلم அவர்களைப் பற்றியும் ஏற்றிப் போற்றிப் பேசுவதை பெருமையாக எண்ணும் துரதிஷ்ட நிலையும் இன்று நாடு முழுதும் பரவிவிட்டது. நாங்கள் போடுவது வெற்றுக் கோஷங்கள்தான் -வீண் முழக்கங்கள்தான் என்பதை இது கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.

உள்ளும் புறமும் ஒருங்கே சீராகச் செயல்படும் உண்மையாளர்கள் ஒரு போதும் இவ்வாறு நடக்க முடியாது; பேச முடியாது. மேடைப் பேச்சு, கற்பனைப் பேச்சு, நயவஞ்சகப் பேச்சு என்பதுபோல் பீலாது மேடைகளையும் ஆக்கி வருகிறது இந்த முஸ்லிம் சமுதாயம். இது வேதனைக்குரிய விஷயமா இல்லையா?

அல்லாஹ்வும் அவனது ரஸூலும் காட்டித்தராது, மனித கற்பனைகளைக் கொண்டும், யூகங்களைக் கொண்டும் நல்லவைகயாகக் கருதப்பட்டு செயல்படுத்தும் காரியங்கள் அனைத்தும் இறுதியில் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவையாக அமையுமே அல்லாமல் சமுதாயத்திற்குப் பலன் தரும் செயல்களாக ஒரு போதும் அமையாது.

உண்மையில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது உறுதியான அன்புள்ளவர்கள், அவர்களை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இப்படிப்பட்ட வெற்றுச் சடங்குகளில் ஈடுபடமாட்டார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் மட்டும் மேடைகளை அமைத்துக் கற்பனைக் கவிதைகளான மவ்லூதுகளை ஓதுபவர்களாகவும் மீலாது மேடைகள் அமைத்து நுனி நாவில் புகழ் பாடுபவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.

நபி صلى الله عليه وسلم அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றை மார்க்கமாக ஒரு போதும் எடுத்துச் செயல்படுத்தமாட்டார்கள். மாறாக வருடம் 365 நாட்களும், நபி صلى الله عليه وسلم அவர்களைத் தமது வழிகாட்டியாக மனப்பூர்வமாக ஏற்று அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி, குர்ஆனைக் கொண்டும் மட்டும் நிலை நாட்டப்பட்டுள்ள காரியங்களை மட்டும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட உண்மை முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...