4/23/2012

தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா?

இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.

கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.

“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.

“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.

ரமழானில் மட்டுமே நோற்க வேண்டிய நோன்பை, அந்த மாதத்தில் வைக்காதவர்கள் வேறு நாட்களில் நோற்கும்படி அல்லாஹ் அனுமதிக்கிறான். அதுபோல உரிய நேரத்தில் தொழப்படாத தொழுகைகளை வேறு நேரத்தில் தொழுது கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதம் எந்த விதத்திலும் சரியானதல்ல. நோன்பை வேறு மாதங்களில் நோற்கலாம் என்று கூறிய அல்லாஹ் தொழுகையை வேறு நேரத்தில் தொழலாம் என்று கூறுகின்றானா? என்றால் இல்லை. ஒரு இடத்திலும் கூறவில்லை.

மாறாக அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகிறான்:
”மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக தொழுகை உள்ளது”. (அல்குர்ஆன் 4:103)

தொழுகையை அதற்கென குறிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழுதாக வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டதால் நோன்புடன் தொழுகையை ஒப்பிட முடியாது.

இன்னொரு வேறுபாட்டையும் நாம் காண்போம்.
“”மாதவிடாய்க் காலங்களில் நாங்கள் விட்டு விட்ட நோன்புகளை “”களா” செய்யும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டிருந்தோம். ஆனால் அதே காலங்களில் விடுபட்ட தொழுகைகளை “”களா” செய்யும்படி நாங்கள் ஏவப்படவில்லை”. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம்.

“”களா” விஷயத்தில் நோன்பும், தொழுகையும் வெவ்வேறானவை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. நமது இஷ்டத்திற்கு காலம் கடத்திவிட்டு நாம் விரும்புகின்ற எந்த நேரத்திலாவது அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

இன்னொரு வேறுபாட்டைக் காண்போம்.
நோன்பு என்பது எல்லா மாந்தருக்கும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டிய கடமை.மாற்று முறை எதுவும் கிடையாது. அதனால் அதை நிறைவேற்ற இயலாத நோயாளிகளாக நோன்பை நோயுற்ற நாட்களில் நோற்க இயலாது போகலாம்.

ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அந்த நிலமை இல்லை. நின்று தொழ முடியவில்லை என்று காரணம் கூறி காலதாமதப் படுத்த முடியாது.

“எனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக (என்னால் தொழ முடியாமலிருப்பதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் “”நின்று தொழு” அதற்கு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு!” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரழி) நூல்கள்: புகாரி, அபூதாவூது, அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதீ, நஸாயீ.
எனவே இயலாமையைக் காரணம் கூறி தொழுகையை களாவாக ஆக்க முடியாது. பயணத்திலிருப்பவன் பட்டினியாகப் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் நோன் புக்குச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் தொழுகையைப் பொறுத்து அந்த அனுமதி கிடையாது.

நான்கு ரகாஅத் தொழுகைகளை இரண்டு ரகஅத்களாக குறைத்துக் கொள்ளத்தான் அனுமதிக்கின்றான் அல்லாஹ். (அல்குர்ஆன் 4:101)

ஆக நோன்புக்கு இருப்பது போன்ற “களா’ என்பது தொழுகைக்குக் கிடையாது என்பதை நாம் தெளிவாக உணரலாம். மனித வாழ்வில் ஏற்படுகின்ற எந்தப் பிரச்சனைக்காகவும் தொழுகையைப் பிற்படுத்த முடியாது. போர்க்களத்தில் கூட ஒரு பிரிவினர் போர் செய்யும் போது, இன்னொரு பிரிவினர் தொழ வேண்டும். பின்னர் இவர்கள் போர் செய்யும் போது அவர்கள் தொழ வேண்டும் என்பதைத் திருகுர்ஆனின் 4:102 வசனம் குறிப்பிடுகின்றது. “களா’ செய்ய அனுமதி இருக்குமானால் இந்த இக்கட்டான கட்டத்தில் களா செய்ய இஸ்லாம் அனுமதித்திருக்கும். ஆனால் இந்தக் கட்டத்திலும் “களா’வை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, ஓர் இடத்தில் நின்று தொழுதால் எதிரிகளால் ஏதேனும் ஆபத்து வந்து விடுமென்று அஞ்சினால் அப்போதும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. மாறாக நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழுதாக வேண்டும் என்பதை திருகுர்ஆனின் 2:239 வசனம் குறிப்பிடுகின்றது.

ஒளூ செய்வதற்குத் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை என்றும் காரணம் கூறி களாவாக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் கிடைக்காதவர்கள் “தயம்மம்’ செய்து தொழும்படி திருகுர்ஆனின் 4:43 வசனம் கட்டளை இடுகின்றது.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது எப்படியும் குறிப்பிட்ட தொழுகையை நிறைவேற்ற முடியாது போகும் என்றும் கூற முடியாது. லுஹரையும், அஸரையும் ஒரே நேரத்தில் மஃரிபையும், இஷாவையும் ஒரே நேரத்தில் களா இல்லாமலே தொழவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஆக எந்தக் காரணத்திற்காகவும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. அப்படிக் காலம் கடந்து தொழுவதால், அது அந்தத் தொழுகைக்கு எந்த விதத்திலும் ஈடாக முடியாது.

“எவனுக்கு அஸர் தொழுகை தவறி விட்டதோ அவனது பொருளும், குடும்பமும் தவறிவிட்டது போன்றதாகும்” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இதிலிருந்து தவறியது தவறியதுதான். அதைத் திரும்ப அடைய முடியாது என்று உணரலாம். இவ்வாறு களாவாக்குவது மிகப் பெரும் குற்றம்தான். அல்லாஹ் மிக அதிகமாக வற்புறுத்துகின்ற ஒரு கடமையை வீணடித்தவனாக அவன் ஆகின்றான்.

நீண்ட காலமாகவோ,அல்லது சில வேளைகளோ தொழுகையை விட்டவன் என்ன செய்யவேண்டும்? இதற்குப் பரிகாரமே கிடையாதா? அதையும் அல்லாஹ் அழகாகச் சொல்லித் தருகிறான்.

“அவர்களுக்குப் பின்னால் தொழுகையை பாழ்படுத்தி, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றியவர்கள் தோன்றினார்கள். அவர்கள் நரகில் போடப்படுவார்கள். (நடந்து விட்ட இந்த பாவத்துக்காக) திருந்தி மன்னிப்புக் கேட்டு நற்கருமங்களைப் புரிந்தவர்கள் தவிர (மற்றவர்கள் தான் நரகை அடைவர்) இவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 19:59,60)

இப்படித் தொழுகையைப் பாழ்படுத்தியவர்கள் இனிமேல் இப்படிப் பழாக்க மாட்டோம் என்று மனம் திருந்தி செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் அந்த மாபெரும் குறையை நிவர்த்தி செய்வதற்காக இயன்ற அளவு நபிலான வணக்கங்களில் ஈடுபடவேண்டும்.

ஆக தொழுகையைக் களாவாக ஆக்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. களாவாக ஆக்கி விட்டு வேறு நேரத்தில் தொழுவது அதற்கு ஈடாக ஆகவும் முடியாது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

“உமர்(ரழி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரழி) ஸல்மான் அல்பார்ஸி(ரழி) போன்ற நபிதோழர்களின் கருத்தும், முஹம்மது இப்னு ஸீரின்(ரஹ்) உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) போன்ற அறிஞர் களின் கருத்தும் இதுதானே” என்று இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: ஃபிக்ஹுஸுன்னா)

ஆரம்ப காலத்தில் களா செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் அவ்வாறு “களா’வாக ஆக்கி இருக்கின்றார்கள். பின்னர் அந்த அனுமதியை அல்லாஹ் ரத்துச் செய்துவிட்டான்.

அதற்கான ஆதாரம் வருமாறு:
“”அகழ்ப் போரின் போது, (அகழ்ப் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக) லுஹர், அஸர், மஃரிபு ஆகிய தொழுகைகளை உரிய நேரத்தில் நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் தொழவில்லை. இஷா நேரத்தில் வரிசைக் கிரமமாக பாங்கு, இகாமத்துடன் அந்தத் தொழுகைகளை நிறைவேற்றினார்கள்” இந்த நிகழ்ச்சி திருகுர்ஆனின் 2:239வது வசனம் இறங்குவதற்கு முன் நடந்ததாகும் என்று அபூஸயீது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஹதீஸின் கருத்து). நூல்கள்:அஹமது, நஸயீ.

“போர்க் காலங்களில் கூட உரிய நேரத்தில் தான் தொழ வேண்டும்” என்ற உத்தரவு வருவதற்கு முன்பு தான் இந்த நிலமை இருந்திருக்கின்றது என்பதை மேற்கூறிய ஹதீஸ் தெளிவாக்குகிறது.

இரண்டே இரண்டு காரணங்களினால் மட்டுமே, உரிய நேரம் தவறிய பிறகும் நிறைவேற்ற வேண்டும்.

“யாரேனும் மறதியின் காரணமாகவோ, அல்லது தூக்கத்தின் காரணமாகவோ, (உரிய நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, விழித்தவுடன் அதைத் தொழட்டும்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

(இதே கருத்துக் கொண்ட பல ஹதீஸ்கள், புகாரி, முஸ்லிம் அபூதாவூது, நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் காணப் படுகின்றன)

ஒருவன் தூங்கிவிட்டு தொழுகையின் நேரம் முடிந்த பிறகு எழுந்தான் என்றான், எழுந்த உடனே அதைத் தொழ வேண்டும். அது போல் மறதியின் காரணமாக ஒரு தொழுகையை நேரம் தவறவிட்டு விட்டால், நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுதிட வேண்டும் என்பதை நபி(ஸல்) தெளிவுபடுத்துகின்றார்கள். இந்த இரண்டு காரணங்கள் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் “களா’வாக ஆக்க முடியாது.

“நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் பயணத்தில் செல்லும்போது ஓரிடத்தில் உறங்கி விடுகிறார்கள். உறங்குவதற்கு முன் பிலால் (ரழி) அவர்களை மட்டும் விழித்திருக்கும்படியும், சுபஹு தொழுகைக்கு எழுப்பும்படியும் கூறுகிறார்கள். பிலால்(ரழி) அவர்களும் தன்னை அறியாது உறங்கி விடுகிறார்கள். சூரியன் நன்றாக உதித்த பின்னர் தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று வழக்கம்போல பாங்கு சொல்லி சுன்னத் தொழுது பின்னர் இகாமத் சொல்லி ஜமா அத்துடன் தொழுதிருக்கிறார்கள்” (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ கதாதா(ரழி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்

(நஸாயீயிலும் இதே கருத்து பதிவு செய்யப் பட்டுள்ளது)

தூக்கம் மறதியின் காரணமாக விட்டுவிட்ட தொழுகைகளைத் தாமதமின்றி விழித்தவுடன், நினைவு வந்தவுடன் தொழுதிட வேண்டும். உரிய நேரத்தில் தொழும்போது எப்படி பாங்கு, இகாமத், சுன்னத்களுடன் தொழ வேண்டுமோ அவ்வாறே அதனை நிறை வேற்றவும் வேண்டும். அந்தத் தொழுகைக் குரிய நேரம் அதுதான் என்றாகி விடும்போது, களா என்ற பிரச்சனையே இல்லை.

ஆக கடந்த காலங்களில் தொழுகைகளை விட்டது மிகப் பெரும் பாவம். இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக பெரும் பாவம். மிகப் பெரும் பாவத்திற்கு எப்படி உள்ளம் உருகி பாவமன்னிப்புக் கோர வேண்டுமோ அவ்வாறு பாவ மன்னிப்புக் கோருவதும், உபரியான வணக்கங்கள் புரிவதும் தான் அதற்குப் பரிகாரம். மேற்கூறிய இரண்டு காரணங்கள் தவிர வேறு காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்தக் கூடாது.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

thanks ; readislam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...