5/22/2015

ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!


“எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” (2:174)


ஆலிம்கள் உங்களுக்கு எதை மார்க்கமாய் போதிக்கிறார்கள்? சற்று சிந்தியுங்கள். அவர்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவதற்காக மார்க்கத்திற்கு எதிரானவையெல்லாம் மார்க்கமாய் போதிக்கின்றார்கள். அவைகளை இன்னமும் நீங்கள் உணராமல் இருக்கின்றீர்கள். நாங்கள் தன்னிச்சையாக ஆலிம்கள் விமர்சிப்பதாய் முகம் சுளிக்காதீர்கள். அல்லாஹ்(ஜல்) வின் கூற்றை கூர்ந்து கவனியுங்கள்.*
“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகின்றனர். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள்”. (9:34)
* மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அறிவில்லாமல் வீணானவற்றை விலைக்கு வாங்கி, அவற்றால் மக்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், பரிகாசமாக்கிக் கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தைகையோருக்கு மகத்தான வேதனையுண்டு”. (31:6)
ஆலிம்கள் தங்கள் வயிறுப் பிழைப்புக்காக மார்க்கத்தின் பெயரால் செய்துவரும் மோசடிகளை ஆலிம்களுக்கு வருமானம் தேடித்தரும் சில சடங்கு சம்பிரதாயங்கள், கீழேப் பட்டியலிடப்படுகிறது
.* மவ்லிதுகள் – இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முதல் பல்வேறு வலிமார்கள் பெயரால் ஓதப்படும் மவ்லிதுகள்.இறந்தவர்கள் பெயரால் 3ம் ஃபாத்திஹா, 7ம் ஃபாத்திஹா, 40 ம் நாள் பாத்திஹா, 6-ம் வருடப் பாத்திஹா என்று வருடம் தோறும் தொடரும் ஃபாத்திஹாக்கள் மற்றும் இறந்தவர்கள் பெயரால் நிகழ்த்தப்படும் அத்தனைச் சடங்கு சம்பிரதாயங்களும் ஃபீஸ்!*
மீலாத் மாநாடுகளில் உரையாற்றுவதற்கும், மார்க்கச் சிறப்பு சொற்பொழிவுகளும் ஃபீஸ்! (இதில் ஆலிம்களின் வழியை அப்படியே் பின்பற்றி ஆலிம்களல்லாதோரும் ஃபீஸ்
வாங்குதல்).* திருமண விழாவிற்காகப் போடப்படும் பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சிக்கு ஃபாத்திஹா ஓதிவிட்டு ஃபீஸ் வாங்குதல், மணமகனுக்கு மாலைச்சூட்டியவுடன் ஓதப்படும் பாத்திஹாவுக்கு ஃபீஸ்! நகர்வலம் பள்ளிவாசல் வந்தடைந்ததும் பள்ளியை முன்னோக்கி ஃபாத்திஹா ஓத ஃபீஸ்! இன்னும் ஊர்தோறும் மாறிக் கொண்டிருக்கும் புதுப்புது திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்திற்கும் ஃபீஸ்!
* சந்தனக்கூடு கூடாதென்று காரசாரமாய் பேசிவிட்டு – தாரைத்தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், வான வேடிக்கை, கரக ஆட்டம், மயில் டான்ஸ், பொய்க்கால் குதிரை, இத்தியாதி… இத்தியாதிகளோடு வலம் வரும் சந்தணக் கூடு பள்ளிவாசல் முன் நிற்கையில் அதற்கு துஆ ஓதி ஃபீஸ் பெறுதல்!
* புதுவீடு புகுதல், சுன்னத்(சுத்னா) வைபவம்! காதணி அணிவிக்கும் வைபவம்! இதுப் போன்ற நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஃபீஸ் பெறுதல்!
* பில்லி -சூன்யம் -தாயத்து -தட்டு -நூல் முடிதல் -தகடு தயாரித்தல் -பால் கிதாபு பார்த்தல் -பேய் ஓட்டுதல், அப்பப்பா…! இன்னும் எத்தனை எத்தனையோ….! அத்தனைக்கும் பீஸ்!
மனை முகூர்த்தம் -மாற்றுமத சடங்குகளைப் போல் ஃபாத்திஹா முலாம் பூசி அதற்கும் ஃபீஸ்!
இப்படியே பட்டியல் நீண்டு செல்லும். சேம்பிலுக்கு சிலவைகள் மட்டும் மேலேச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் முஸ்லிம் பொதுமக்களின் அறியாமையே! முஸ்லிம் பொதுமக்களின் அறியாமைத்தான் -ஆலிம்களின் மிகப் பெரிய மூலதனம்! அது மட்டுமல்ல, மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூதாதையர்கள் வழக்கங்களிலும் முஸ்லிம் பொதுமக்களுக்கிருக்கும் குருட்டு பக்தியுங்கூட.
ஓ! என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! இப்போது சிந்தியுங்கள். ஒருசில ரூபாய்களுக்கு வாங்கும் மட்பாண்டம் விஷயத்தில் கூட ஏமாறக் கூடாது என்று அவைகளைக் கொட்டிப் பார்த்துத் தட்டிப் பார்த்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாங்கும் நீங்கள் -மார்க்க விஷயத்தில் மட்டும் நீங்கள் கோட்டை விட்டு விடுகிறீர்கள். எளிதில் ஏமாந்து விடுகிறீர்கள். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முஸ்லிம் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மார்க்க ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுபவைகள் அனைத்தும் (என்று கூறாவிட்டாலும் மிகப்பெரும் பான்மையானவைகள்) சடங்கு சம்பிரதாயங்களே! சடங்கு சம்பிரதாயங்கள், மூட வழக்கங்கள் அனைத்தும் ஆலிம்களின் அங்கீகாரத்துடன் ஆலிம்களாலேயே அரங்கேற்றப்படுகிறது.
மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான – இறைவனுக்கு இணையா(ஷிர்க்கா)கும். குற்றத்திற்க்கிட்டுச் செல்லக் கூடிய இறை நிராகரி(குப்ர்)ப்பிற்க்கிட்டுச் செல்லக்கூடிய இறைமார்க்கம் இஸ்லாத்தின் அடித்தளங்களையே (குர்ஆன் – ஹதீது) தகர்த்தெறியக் கூடிய அனாச்சாரங்கள், மற்றும் மாற்று மதத்தவரின் சடங்கு சம்பிரதாயங்கள் சிற்சில மாறுதல்களுடன் மாற்றப்பட்ட நிலையில் மார்க்கமாய் மதிக்கப்படுகிறது.
சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் வயிறு வளர்ப்பவர்கள் ஆலிம்களாயிருந்தாலும் சரி, ஆலிம்களல்லாதவர்களாயிருந்தாலும் சரி, எல்லோரையும் குறிப்பாக புரோகிதத்தைத் தொழிலாய்க் கொண்டவர்களை மேற்காணும் இறைவாக்கு எச்சரிக்கிறது. இந்தப் புரோகிதத்துக்கு உறுதுணையாக இருக்கும் முஸ்லிம் பொதுமக்களே! சிந்தியுங்கள். முஸ்லிம் பொதுமக்களின் அனுசரனையே புரோகிதம் நின்று நிலைக்கக் காரணமாகிவிட்டது.
“மார்க்க முரணானவைகள் நடக்கக் காண்போர் இயன்றால் கரத்தால் தடுக்கட்டும். இல்லையென்றால் வாய்மொழியால் கண்டித்துத் திருத்தட்டும். அதுவும் முடியாதோர் மனத்தால் வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடை நிலை”. முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ)
சடங்கு சம்பிரதாயங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், அனாச்சாரங்களுக்கும் இஸ்லாத்தில் இம்மியும் இடமில்லை; இஸ்லாமிய அங்கீகாரமுமில்லை. இருப்பினும் இன்றளவும் இவைகள் சமூக நியதியாகிவிட்டன. இதன் மூலம் இறைமார்க்கம் அனுமதித்தவைகள் விலக்கப்பட்டும், விலக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு உறுதுணையாயிருப்பவர்கள் ஆலிம்கள்!
* “அவர்கள் தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் மஸீஹிப்னு மர்யத்தையும் அல்லாஹ்வை விட்டு (விட்டு) தங்கள் ரப்புகளாக ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அவனின்றி வேறு இறைவனில்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்”. (9:31)
இந்த இறைவாக்கு இறங்கியபோது கிருஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய அதி இப்னு ஹாத்தம்(ரழி) என்ற நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே! (ரப்புகளாக்கி விட்டதாக இறைவன் கூறுகின்றானே…!) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியதை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியதை ஹராம் என்றும் (ஆதாரம் இன்னதென்று ஆய்ந்தறியாமல் – கண்மூடித்தனமாய்) நீங்களும் நம்பினீர்கள். இல்லையா! (ஆம்) அது தான் அவர்களை ரப்புகளாக ஆக்கியது” என்று விளக்கம் தந்தார்கள். (அஹ்மத், திர்மிதீ)
முன்னுள்ள சமுதாயத்தவர்கள் செய்த தவறுகள் இந்தச் சமுதாயத்தவராலும் தொடரக் கூடாதென்கிற எச்சரிக்கையே மேற்காணும் இறைவாக்க. அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அளித்த விளக்கம்: மார்க்கம் இவ்வளவு தெளிவாக எச்சரித்தப் பின்னரும் ஆலிம்களின் புரோகிதத்துக்கும், முஸ்லிம் பொதுமக்கள் இயன்றளவும் உறுதுணையாயிருப்பது வேதனைக்குறியதல்லவா?
என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! நன்றாக, அழகாக, ஒருமுறைக்குப் பன்முறை சிந்தியுங்கள் சிந்தியுங்கள்! புரோகிதம், புரோகிதர்கள் இவ்விரண்டில் கெடுதிகளை விட்டும் மீட்சிப்பெற முன்வாருங்கள். அப்போதுத் தான் இஸ்லாம் நிலைநாட்டிய பிரிவுகளற்ற ஆலிம் அவாம் என்ற பேதமில்லாத, சமதர்ம, சமத்துவ, சகோரத்துவ, வாஞ்சை மிக்க சமுதாயத்தை நிறுவ முடியும்.
மார்க்கம் காட்டித் தந்துள்ள செயல்கள் அனைத்தும் சாதாரணச் சாமான்யரும் செய்வதற்கேதுவாய் மிகவும் எளிதாகவே இருக்கிறது. அவைகளை செய்ய வேண்டிய முறைகளை அறியாமலிருப்பதால் முஸ்லிம் பொதுமக்களுக்கு அவை பளூவாகத் தெரிகின்றன. முஸ்லிம் பொதுமக்கள் அனைவரும் அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வின் பெயரால் இம்மை மறுமையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றையே குறிக்கோளாக்கி, மார்க்க ரீதியில் செய்ய வேண்டிய வகைகளை அறிந்துக் கொண்டால் புரோகிதர்களும், புரோகிதமும் முற்றாய் ஒழித்துவிடும். அப்போது முஸ்லிம் பொது மக்கள் மார்க்கம் கட்டளையிடும் செயல்கள் எளிமையாக இருப்பதை எளிதில் உணர்வர்.
கூலிக்கு ஆள் பிடித்துத்தான் புரோகிதர்களைக் கொண்டு மட்டுமே செய்ய வேண்டிய அனைத்தும் மூடச்சடங்கு சம்பிரதாயங்களும், அனாச்சாரங்களுமேயாகும். அவைகள் மார்க்கத்திற்கு முரணானவைகள், அவைகளால் வயிறு வளர்ப்போர் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுமாறு முஸ்லிம் பொதுமக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...