12/20/2010

அளவற்ற அருளாளனும்....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).

ஆயத்துல் குர்ஸி:

"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:
أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

4. அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும், சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

5. ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).

6. ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:
'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. கல்வியைத் தேடல்:
"எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9. பெற்றோருக்கு நன்மை செய்தல்:
அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்து, பின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. நாவையும், மர்மப் பகுதியையும் பேணுதல்:
"எவர் இரு தாடைகளுக்கும், தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

11. முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
"முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

12. ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்:
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2ரக்அத்துகள்". (திர்மிதி)

13. அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்:
"அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

14. நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்:
"உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்? என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்? என அன்னார் வினவினார், அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என அன்னார் கேட்டபோது, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்? என அன்னார் கேட்டார், அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

15. இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:
"முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

16."லா இலாஹ இல்லல்லாஹ்" வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
"எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

17. எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
"நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும், தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள், மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:

மந்திரித்துப் பார்க்காதவர்கள், மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள், பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள், நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார், அதற்கு நபியவர்கள் "உக்காஷா"உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" (குர்ஆன் 8:107,108).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...