12/29/2010

ஸிஹாஹ் ஸித்தா

ஹதீஸ் தொகுப்பு வரலாறு

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ அவர் மகத்தான பாக்கியத்தை அடைந்து விட்டார். (33.71,24:52.)

எவர் அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்படிகிறாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்தவர் ஆவார். (4:30)

இத்தூதருக்கு வழிப்படுங்கள் உங்கள் செயல்களை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள். (47:33)

மேற்கண்ட ஆணைக்கொப்ப ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமான ஹதீஸை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமென்பதை உணருகிறோம்.

அதனடிப்படையில் நபித் தோழர்களும், அவர்களுக்குப்பின் வந்தர்வகளும் ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைத் தொகுத்தளிக்க ஆரம்பித்தனர். அச்சு இயந்திரம் போன்ற வசதி இல்லாத அக்காலங்களில் அவை செவி வழி வந்த தொடர் செய்திகளாகவும், எழுத படிக்கத் தெரிந்தவர்கள் எழுதி வைத்த கைப் பிரதிகளாகவும் திகழ்ந்தன .

அந்த ஹதீஸ்களை அவர்களால் முடிந்தவரை மனனமும் செய்து வைத்திருந்தனர். இஸ்லாம் உலகலாவிய நிலையில் பரவிய போது இஸ்லாத்தில் இணைந்த அரபியல்லாதவர்கள் ஹதீஸின் முக்கியத்துவத்தை விளங்கி பெரும் நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.

இவ்விதம் பெரும் ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்படுவது ஹிஜ்ரீ 100 லிருந்து ஆரம்பமாயிற்று. ஆனால் ஹிஜ்ரீ 200 லிருந்து 300 வரையிலான காலத்தை ஹதீஸ் தொகுப்பின் பொற்காலம் எனலாம்.

இக்காலக்கட்டத்தில் பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள், உண்மையான ஆறு ஹதீஸ் நூல்களின் தொகுப்பு எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றது இந்த ஆறு ஹதீஸ் நூல்கள் சஹீஹுல் புகாரி, ஷஹீஹ் முஸ்லிம், ஸூனன் நஸயீ, ஸூனன் அபூதாவூத், ஸூனன் திர்மிதீ,ஸூனன் இப்னுமாஜா என வரிசைப் படுத்தப்படுகின்றது . இந்த ஆறு நூல்களும் ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டன .இந்நூல்களின் விபரம் வருமாறு.
பெயர்
1. புஹாரி(ரஹ்)

2. முஸ்லிம் (ரஹ்)

3. நஸயீ (ரஹ்)

4. அபூதாவூத் (ரஹ்)

5. திர்மிதீ

6. இப்னுமாஜ்ஜா

பிறப்பு -இறப்பு
194 - 256 ஹி

206 - 261 ஹி

214 - 303 ஹி

202 - 275 ஹி

209 - 279 ஹி

202 - 273 ஹி

ஊர் நாடு
புகாரா ரஷ்யா

நைஷாபூர் பாரசீகம்

ஈரான் (குராசான்)

ஸிஜிஸ்தான் இராக்

திர்மிதி குராசான்

கஸ்வின் அஜர்பைஜான்




இவை ஒவ்வொன்றும் சுமார் 4000-க்கும் மேற்ப்பட்ட ஹதீஸ்களைக் கொண்டவை. இந்நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்திலும்,இதற்கு முந்திய கால கட்டத்திலும், இவை போன்ற பல ஹதீஸ் நூல்கள் பற்பல ஹதீஸ் கலாவல்லுனர்களால் "முஸன்னஃப்" என்றும் "முஸ்னது" என்றும் தொகுக்கப்பட்டன .

இங்கு முஸன்னப் என்றால் என்ன? முஸ்னத் என்றால் என்ன? முஸன்னப் என்றால் மக்களின் கேள்வி ஞானத்திற்க் கொப்ப இஸ்லாமிய சட்ட அடிப்படையில் தலைப்பு களாகப் பிரித்து வேவ்வேறு ஸஹாபிகள், தாபியீன்கள் மூலம் கிடைத்த ஹதீஸ்களை ஒரே தலைப்பில் தொகுத்ததாகும். உதாரணம் தொழுகை என்ற தலைப்பை ஒழு, பாங்கு, இகாமத், ருகூஉ, ஸுஜுது போன்ற பல சிறு தலைப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பிலும் பற்பல ஸஹாபிகள், தாபியீன்கள் மூலம் கிடைத்த ஹதீஸ்களைத் தொகுத்தளித்தல்.

முஸ்னத் என்றால் தலைப்புகளின் அடிப்படையில் பிரிக்காமல் தொகுத்த ஹதீஸ் வல்லுனர் எந்தெந்த ஸஹாபி, தாபியீன் மூலம் கிடைத்தாக அறிவிக்கிறாரோ அந்த ஸஹாபி, தாபியீன்களின் அறிவிப்பாளர் (ஸனது) வரிசையில் தொகுத்ததாகும்.

மேலே குறிப்பிட்ட ஆறு ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்திலும், அதற்கு முந்திய காலத்திலும் வேறு பல ஹதீஸ் நூல்களும் தொகுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான சிலதை பார்ப்போம்.
பெயர்
1. முஅத்தா மாலிக்(ரஹ்)

2. முஸ்னது ஷாபிஈ (ரஹ்)

3. முஸ்னது அஹ்மது (ரஹ்)

4. முஸ்னது தவ்ரீ (ரஹ்)

5. முஸ்னது அவ்ஸஈ (ரஹ்)

6. முஸ்னது இப்னு முபாரக்

7. முஸ்னது முஹம்மதுபின் ஸலமா(ரஹ்)

8. முஸ்னது இப்னு உஜன்னா (ரஹ்)

9. முஸ்னது இப்னு முஅம்மர் (ரஹ்)

பிறப்பு-இறப்பு
92-179ஹி

150-204ஹி

164-241ஹி

97-161ஹி

--157ஹி

-181ஹி

-167ஹி

107-198ஹி

-191ஹி

ஊர் நாடு
மதீனா சவுதி

மக்கா சவுதி

பஸ்ரா ஈராக்

கூஃபா ஈரான்

ஷாம் ஈராக்

குராசான் ஈரான்

பஸ்ரா ஈராக்

கூஃபா ஈரான்

யமன் யமன்


இந்நூல்களில் முஅத்தா மாலிக் போன்ற ஓரிரு நூல்களைத் தவிர மற்ற அனைத்தும் முஸ்னதுகளாக (தலைப்புகளின் அடிப்படையில்) அமைந்தன. முஸ்னதுகளில் சாதரணமாக இஸ்லாமிய சட்டங்களை கண்டறிவது மிகவும் கடினம். ஒரு ஹதீஸை அறிவிப்பாளர் பெயர் தெரிந்த்தால் மட்டுமே அதனை பார்க்க முடியும்.

இமாம்களான அபூஹனீபா (ரஹ்),மாலிக்(ரஹ்), ஷாபிஈ(ரஹ்), ஹம்பலி(ரஹ்) போன்றோரில் இமாம் அபூஹனீபா(ரஹ்) எழுதிய ஹதீஸ் அல்லது மார்க்கச் சட்ட நூல்களில் இன்று எதுவும் தற்சமயம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் ஹனபி மத்ஹபு பெயரில் புழங்கி வரும் பிக்ஹு நூல்கள் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் எழுதப்பட்டவையல்ல. இமாமுல் அஃலம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ள அபூஹனீபா அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தொகுத்தளித்ததாகும். இந்நூல்களுக்கும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தங்களது சொந்த கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என எண்ணி இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரில் அறங்கேற்றியுள்ளனர் .

இமாம் ஷாபீஈ(ரஹ்) முஸ்னது ஷாபீஈ என்ற ஹதீஸ் தொகுப்பையும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) முஸ்னது அஹ்மது என்ற ஹதீஸ் தொகுப்பையும் எழுதினார்கள் .
ஆனால் இமாம் மாலிக்(ரஹ்) தனது தொகுப்பு முஅத்தா மாலிக் என்ற ஹதீஸ் தொகுப்பை முஸன்னஃபாக (பாடங்கள் தலைப்பிட்டு) கொடுத்தார். அதில் சுமார் 2000 ஹதீஸ்கள் உள்ளன. இந்நூல் ஸிஹாஹ் ஸித்தா எனப்படும்

ஆறு ஹதீஸ் நூல்கள் வருவதற்கு சுமார் 75 முதல் 100 வருடங்கள் முன்பாகவே மதினாவில் வாழ்ந்த மாலிக்(ரஹ்) ஹதீஸ் நூலாகவும், மார்க்கச் சட்ட நூலாகவும் தொகுத்தார்கள்.

ஹிஜ்ரீ 3ம் நூற்றாண்டிற்குள் பெரும் ஹதீஸ் தொகுப்புக்கள் பல வெளிவந்துவிட்டன. ஹதீஸ் தொகுப்புகளின் பொற்காலமான 3, 4, 5 வது நூற்றாண்டிலும் இப்னு மாஜ்ஜா இந்த தரமிக்க ஹதீஸ் தொகுப்புகளுடன் இணைக்கப்படவில்லை. ஆனால் பெரும் பான்மையானவர்கள் புஹாரி, முஸ்லிம் இவ்விரண்டயும் "ஸஹீஹைன்" (உண்மையான ஹ்தீஸ்களின் இருநூல்கள்) என்றும், மற்றவைகளை "ஸூனன்" என்றே அழைத்தனர் .

ஹிஜ்ரீ 5ம் நூற்றாண்டின் இறுதியில் அபுல்காஸிம் அலி இப்னு முஹம்மது இப்னு அஸாகிர் (இறப்பு 571ஹி) என்ற ஹதீஸ்கலா வல்லுனர் அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற நான்கு நூல்களிலிருந்து ஹதீஸ்களை தேர்தெடுத்து ஒரே நூலாக "அல்-அஷ்ராப் அலா மஃரிபத்துல் அத்ராஃப்" எனத் தொகுத்தார். அவரைத் தொடர்ந்து அப்துல் கனி பின் அப்துல் வாஹித் அல்-மக்தஸீ (இறப்பு 600ஹி) என்பவர் புஹாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற ஆறு தொகுப்புகளில் இடம் பெறும் அறிவிப்பாளர் களைப் பற்றி ஒரு ஆய்வு நூல் "அல்-கமால்" என்ற நூல் எழுதினார் .

இந்நூல் இவருக்குப்பின் வந்த பெரும் ஹதீஸ் கலாவல்லுனர்களான தஹபி, இப்னுகதீர், முஃகலாதி, இப்னு ஹஜர் போன்றோருக்கு சிறந்த உதவியாக இருந்தது. இவர்களும் இந்த ஆறு நூல்களின் தொகுப்புக்கு தனி பெயரைக் கொடுக்கவில்லை. ஆனால் இவர்களுக்குப்பின் வாழ்ந்த அல்-ஹாபில் அல்ஹஜ்ஜாஜ் அல்-மஜ்ஜி (இறப்பு 742ஹி) என்பவர் ஆறு நூல்களின் தொகுப்புக்கு "துஹ்பத்துல் அஷ்ராப் பீ மஃரிபத்துல் அத்ராப் என பெயர் நல்கினார். இது நாளடைவில் மக்களிடையே "ஸிஹாஹ் ஸித்தா" எனப் பெயர் பெறலாயிற்று .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...