நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்குமிடையில் எவ்விதத் திரையும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் பள்ளியிலும், கடைவீதியிலும், பிரயாணத்திலும் கலந்தே வாழ்ந்தார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்களை நேரடியாகவோ சந்தித்து உரையாடும் வாய்ப்பை நபி தோழர்கள் பெற்றிருந்தனர்.
நபி(ஸல்) அவர்களுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மிக உன்னிப்பாகவும், மிகக் கவனமாகவும் பேணி வந்தார்கள். அறியாமை என்னும் காரிருளில் கிடந்த அவர்களுக்கு எந்த நபியின் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அந்த நபியைத் தங்களின் இவ்வுலக மறுவுலக வாழ்க்கையின் வழிகாட்டியாகப் பெற்றதினால் தான் அவர்களின் சொல், செயலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். எந்த அளவிற்கு நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல்களைக் கண்காணித்து வந்தார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களின் அருகாமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காதபோது வேறு தோழர்களைத் தங்களுக்குப் பகரமாக ஆக்கி, நபி(ஸல்) அவர்களிடமிருந்து என்னென்ன சொல், செயல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்காணித்து அவற்றைப் பின்னர் தமக்குக் சொல்லுமாறு கூறுவார்கள்.
உமர்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள், “நானும் எனது அண்டை வீட்டில் வசித்து வந்த ஒரு அன்சாரித்தோழரும், ஒவ்வொருவரும் ஒரு நாள் வீதம் நபி(ஸல்) அவர்களுடைய அவைக்குச் சென்று அன்றைய தினம் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்தியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வோம்.” காரணம் நபி(ஸல்) அவர்களின் அவையிலுள்ள நிகழ்ச்சிகள் பூரணமாகத் தமக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு உமர்(ரழி) அவர்கள் செய்து வந்தார்கள் எனஅறிவிக்கப்படுகிறது. (நூல்: புகாரி)
நபி(ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதன் அவசியத்தையும், அவர்களின் கட்டளைகளை எடுத்து, அவர்கள் விலக்கியதை விட்டு விலகி நடந்து கொள்வதில் நபித் தோழர்களுக்கிருந்த அளவிட முடியாத ஆர்வத்தையும் தான் இது எடுத்துக் காட்டுகிறது. எனவே மதீனாவிலிருந்து மிக தூரத்திலுள்ள கிராம முஸ்லிம்கள் தங்கள் கிராமத்திலிருந்து சிலரை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அனுப்பி இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களைக் கற்றுத் திரும்பி வந்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள்.
நபி(ஸல்) அவர்களிடமிருந்து சில மார்க்கச் சட்டங்களைக் கேட்பதற்காக சஹாபாக்கள் நீண்ட தொலை தூரத்திலிருந்து பிரயாணம் செய்து நபி(ஸல்) அவர்களிடம் வருவார்கள்.
உக்பத் இப்னுல் ஹாரித் என்ற நபித்தோழர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். பல நாட்கள் சென்ற பின்னர் தானும் தனது மனைவியும் பால்குடி சகோதரர்கள் என்ற செய்தியை அவரது மனைவி தெரிவித்தார். இதனுடைய சட்டம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மக்காவிலிருந்து மதீனாவிற்கு பிரயாணம் செய்து வந்து நபி(ஸல்) அவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறினார். உடனே அந்த இடத்திலேயே நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பிரித்து வைத்தார்கள். அவரும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். (நூல் : புகாரி)
இவ்வாறு தங்களுக்குள் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக நபி(ஸல்) அவர்களைத் தேடி வருவது சஹாபாக்களுடைய வழக்கமாக இருந்தது.
கணவன் மனைவிக்கிடையிலுள்ள உறவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றிய மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்வதற்காக நபி(ஸல்) அவர்களிடத்தில் சென்று நபித் தோழர்களின் மனைவிமார்கள் விளக்கம் கேட்பது அவர்களது வழக்கமாக இருந்தது. சில சந்தர்ப்பங்களில் பெண்கள் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களைப் பற்றி சஹாபிப் பெண்கள் கேட்கும் போது, அது போன்ற விஷயங்களை தங்கள் மனைவியர் மூலம் விளக்கச் சொல்வார்கள். ஒரு தடவை ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுமானால் அவள் எப்படி சுத்தம் செய்ய வேண்டும்! என்று கேட்டார். அப்போது “கஸ்தூரி கலந்த பஞ்சை அந்த இடத்தில் வைத்து கழுக வேண்டும்” என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்தப் பெண், அதைக் கொண்டு எப்படி கழுகுவது? என்று கேட்டாள். முன்பு சொன்னது போன்றே திரும்பவும் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்தப் பெண் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உடனே நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடத்தில் அதை விளக்கிக் கொடுக்குமாறு சொன்னார்கள். அப்போது அப்பெண் விளங்கிக் கொள்ளும் முறையில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் விளக்கிக் கொடுத்தார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
இவ்வாறு நபித் தோழர்கள் தங்களின் ஒவ்வொரு பிரச்சினைக்குரிய தீர்வையும் நபி(ஸல்) அவர்களிடமிருந்தே நேரடியாகத் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக