பரிந்துரை அல்லாஹ்வுக்கே சொந்தம் :
1. அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா?
(நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்தாலுமா? பரிந்துரை எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (39:43,44)
2. அன்றியும். அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். (43:86)
3. அவர்களுக்கு, ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. (6:70)
4. (நபியே!) அண்மையில் வரும் (கியாமத்) நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக; இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக் குழிக்கு வரும் (அவ்) வேளையில் அநியாயக் காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ; அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான். (40:18)
5. இன்னும் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்குச் சிறிதும் பயன்படமுடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக; (அந்நாளில்) எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அதற்காக எந்த பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48,123)
6. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப் பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா? (32:4)
7. (மறுமையில்) அவனைத் தவிர அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. (6:51)
8. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (அல்லாஹ்வுக்கே) உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (2:255)
9. அவன் எவருக்கு அனுமதிக் கொடுக்கிறானோ அவருக்குத் தவிர அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது. (34:23)
10. அவனது அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சி பொருந்திய) அல்லாஹ்வே உங்களைப் படைத்து பரிபக்குவப் படுத்துபவன். (10:3)
பரிந்துரைக்க அனுமதிப் பெறுபவர்கள்.
11. இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த்தகைய)வருக்கின்றி – அவர் (நபி)கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ளச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள். (21:28)
12. அர்-ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்துக் கொண்டோரைத் தவிர – எவரும் பரிந்துரை செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள். (19 :87)
13. அந்நாளில் அர்-ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவரது பரிந்துரை (ஷஃபாஅத்து)யும் பயனளிக்காது. (20:109)
14. அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதிக் கொடுக்கிறானோ – அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்த பயனுமளிக்காது. (53:26)
15. …………எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்களாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதியுடன் பரிந்து பேசுவர்) (43 : 86)
பாவிகளின் கூற்றும் பிதற்றலும்
16. தங்களுக்கு (யாதொரு) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவர்களை (இணை வைப்போர்) வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள்;
இவர்கள் எங்களுக்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்பவர்கள் என்றும் கூறுகிறார்கள். (10:18)
17. அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). (39:3)
18. மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள். அப்போது அவர் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவதாக இராது; (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள். (30:12,13)
19. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்; உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமானமுள்ளவராக ஆக்கி வைத்தோம்; (அப்போது) இந்த குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்; ஆகவே எங்களுக்காகப் பரிந்து பேசவோர் (இன்று) எவருமில்லை; அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை. நாங்கள் (உலகத்துக்கு) திரும்பிச் செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின் (இறை விசுவாசி)களாகி விடுவோமே. (எனப் பரிதவித்து புலம்புவார்கள்) (26:97-102)
20. குற்றவாளிகளைக் குறித்து-
உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது? (என்று கேட்கப்படும்) அவர்கள் (பதில்) கூறுவார்கள் :
நாங்கள் தொழுகையாளிகளில் நின்றும் இருக்கவில்லை; மேலும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை; (வீணானவற்றில்) மூழ்கிக் கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்; இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்; உறுதியான (மரணம்) எங்களிடம் வரும் வரையில் (இவ்வாறாக இருந்தோம் எனக் கூறுவர்).
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது. (74:41-48)
21. (மறுமையில் அல்லாஹ் பாவிகளை நோக்கி)
நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுப்போன்று நீங்கள் (ஏதுமின்றி) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களது கூட்டாளிகள், (என்றும்) உங்களுக்கு பரிந்து பேசுபவர் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்தத் தொடர்பும் அறுந்து விட்டது; உங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன. (என்று கூறுவான்) (6:94)
22. நம்பிக்கைக் கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர்… நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்யுங்கள். (2:254)
23. அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்-ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால் இவர்கள் என்னை (அக்கெடுதியிலிருந்து) விடுவிக்கவும் முடியா! (36:23)
24. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கும் உண்டு; (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகம் உண்டு. (4:85)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக