9/20/2013

ஜும்ஆத் தொழுகை


ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும். இது லுஹர் தொழுகைக்கு பதிலாக தொழப்படும் தொழுகையாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)

வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜும்ஆத் தொழுகையில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தக்க காரணமின்றி கலந்து கொள்ளத் தவறியவரை நபி (ஸல்) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

யாரையேனும் ஜும்ஆத் தொழுகை நடத்துமாறு நியமித்து விட்டு ஜும்ஆத் தொழுகைக்கு வராது வீட்டிலிருப்பரின் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்த வேண்டுமென நாடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி) நூற்கள்;: அஹ்மது, முஸ்லிம்)

ஜும்ஆவும் அதானும் ஜும்ஆவுக்கு ஒரே ஒரு பாங்கு தான் கூறவேண்டும். நபி(ஸல்) , அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோர் காலத்தில் ஒரே ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது. உத்மான் (ரலி) காலத்தில் ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டு வதற்காக கடைத்தெருவில் (அதான்) அழைப்பு விடுக்கப்பட்டது. அதான் என்பதற்கு பாங்கு என்று பொருளிருப்பது போன்றே பிரகடனம் செய்தல், அறிவித்தல் என்ற பொருளும் உண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 7:44, 9:3, 22:27) இங்கே கடைத்தெருவில் அதான் சொன்னதாக வருவதால் நிச்சயம் அறிவிப்பு என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இரு குத்பாக்கள் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள.; பின்னர் உட்கார்ந்து விட்டு மீண்டும் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இரு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். இரண்டுக்குமிடையே அமர்வார்கள். (அந்தச் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். மக்களுக்கு (நெறியூட்டும்) போதனை செய்வார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம் )
நாயகத் தோழர் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தியபோது சுருக்கமாகவும், இலக்கிய நயத்துடனும் சொற்பொழிவு ஆற்றினார்கள். அவர்கள் (மிம்பர்; மேடையிலிருந்து ) இறங்கியதும் தாங்கள் சுருக்கமாக சொற்பொழிவு நிகழ்த்தி;விட்டீர்களே! கொஞ்கம் விரிவாகச் செய்திருக்கக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், நீண்ட தொழுகையும் சுருக்கமான சொற்பொழிவும் (மயின்னத்துன் மின் ஃபிக்ஹிஹி) மனிதனின் அறிவுக்கு சான்றாகும். எனவே தொழுகையை நீட்டுங்கள்! சொற்பொழிவைச் சுருக்குங்கள்.
قال صلي الله عليه وسلم : ان في البيان لسحرا
(இன்னஃபில் பயானி லஸிஹ்ரா) நிச்சயமாக பயானில் (சொற்பொழிவில் பிறரை வயப்படுத்தும்) ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூவாயில், நூல்: முஸ்லிம்)
இந்த நபி மொழிகளிலிருந்து சொற்பொழிவின் நோக்கமே மக்களுக்கு போதனை செய்வதும் அவர்களின் உள்ளங்களை ஈர்ப்பதுமாகும். அவர்களுக்கு புரியாத மொழியில் நீண்ட உரை நிகழ்த்தி தூங்க வைப்பதல்ல என்பதை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம்.

குத்பா (சொற்பொழிவு) உரையைக் கேட்பது இரு ரகஅத்துகளுக்குப் பதிலாக ஓதப்படும் ஜும்ஆ குத்பாக்களை (சொற்பொழிவுகளை) கேட்பதும் அவசியமாகும். இதில் மார்க்க நெறிமுறைகளையும் அன்றாட வாழ்வில் ஏற்படும் மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும், ஐயங்களையும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதை மக்களுக்குப் புரியும் வகையில் ஆற்றப்பட வேண்டும். அந்த வகையில் ஜும்ஆ உரை அமையவேண்டும்.
புரியும் மொழியில் குத்பா உரை இன்று அதை ஒரு மந்திரமாக ஜபிக்கப்படுவதையும், சம்பிரதாயமாக ஓதப்படுவதையும்;, இராகமாகத் தாலாட்டுப் பாடுவதையும் பார்க்கிறோம். இந்தச் சொற்பொழிவு ஒவ்வொருவருக்கும் பயன்பட வேண்டுமாயின் அவரவர் மொழியிலேயே நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இரு குத்பாக்களுக்கு பதில் மூன்று குத்பாக்கள் நம்மில் சிலர் குத்பா பேருரையில் கலந்து கொள்ளாது வெறும் தொழுகையில் கலந்து கொள்ளும் அவல நிலையையும் இன்று சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. இதற்கு நம் நாட்டு சம்பிரதாய குத்பாக்களும் முக்கியக் காரணமாகும். சிலர் நாங்கள் அரபியில் தான் குத்பா உரை நிகழ்த்துவோம் எனக் கூறி குத்பாவுக்கு முன்னர் மேடையில் ஏறுமுன் தமிழில் ஒரு (குத்பா) உரை நிகழ்த்துவதையும் பார்க்கிறோம். இதையும் சேர்த்து மூன்று குத்பாக்களாகி விடுவதால் நபிகள் (ஸல்) ஆற்றிய இரு உரைகளுக்கு மாற்றமான (ஒரு பித்அத்) செயலாகி விடுகிறது.எனவே இதைத் தவிர்த்து மிம்பர் மேடையிலேயே இரு குத்பாக்களையும் அவரவர் மொழியில் ஆற்றப்படுவதற்கு ஆவன செய்யப்படவேண்டும்.
உரையை கவனமாகக் கேட்பது குத்பா உரையை மிகவும் கவனமாகக் கேட்கவேண்டும். அந்த வேளையில் பேசுவதும் வேறு சிந்தனைகளிலும் பராக்குகளிலும் ஈடுபடுவதை நபி(ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
யார் குத்பாவை கேட்கும்போது தரையில் கிடக்கும் பொடிக்கற்களை இங்குமங்கும் புரட்டிக்கொண்டிருக்கிறாரோ அவருக்கு ஜும்ஆவின் நன்மை வீணாகிவிட்டது என நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது உன் அருகில் இருப்பவனை நோக்கி பேசாமல் இரு என்று நீ கூறினால் நீயும் வீணான காரியத்தில் ஈடுபட்டவனாவாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம்)
நபி(ஸல்) மிம்பரில் (குத்பா உரை நிகழ்த்த) நின்று விட்டால் எங்கள் முகங்களை அவர்களை நோக்கி வைத்துக் கொள்வோம் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதிலிருந்தே ஜும்ஆ குத்பாவின் உரையின் முக்கியத்துவத்தை உணரலாம்.
ஜும்ஆவுக்கு குளித்து நறுமணம் பூசி வருவது உங்களில் ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளவும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னு மாஜா (1088), நஸயீ -1315) )
ஜும்ஆ நாளில் குளித்து இயன்றவரை தூய்மைப்படுத்தி பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி பள்ளிக்கு வந்து (அங்கே அமர்ந்திருப்பவர்களைப் ) பிரிக்கும் விதமாக அமராமல் விதிக்கப்பட்டதை தொழுது பின்னர் இமாம் சொற்பொழிவு நிகழ்த்த வந்ததும் மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் மறு ஜும்ஆவுக்குமிடையேயுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்பார்ஸி (ரலி) நூல்;: புகாரி, அஹ்மது)
ஜும்ஆ நாளன்று பருவமெய்திய ஒவ்வொருவரும் குளித்து மிஸ்வாக்குச்செய்து இயன்ற வரை நறுமணம் பூசிக் கொள்வது கடமையாகும் என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரலி), நூல்;: அபூதாவூது-371)
ஜும்ஆவுக்கு வருபவர் குளித்து மிஸ்வாக்குச் செய்து தூய்மையோடும் நறுமணம் பூசியும் வரவேண்டுமென்பதையும் மவுனமாக இருந்து குத்பாவை கருத்தூன்றிக் கேட்பதையும் இந்த நபி மொழிகள் வலியுறுத்துகின்றன.
ஜும்ஆவிற்கு முன்னரே செல்வது ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பைப் போன்று குளித்து அதன்பிறகு (பள்ளிக்குச் செல்லுபவர் ஒரு ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறத்துப்பலியிட்டவராவார். இரண்டாவது வேளையில் செல்வோர் ஒரு மாட்டை அறுத்துப்பலியிட்டவராவார். மூன்றாவது வேளையில் செல்வோர் ஒரு கொம்புள்ள ஆட்டை அறுத்துப்பலியிட்டவராவார். நான்காவது வேளையில் செல்வோர் ஒரு கோழியை அறுத்துப்பலியிட்டவராவார். ஐந்தாவது வேளையில் செல்வோர் ஒரு முட்டையை கொடுத்தவராவார்.
இமாம் குத்பா ஓதுவதற்காக புறப்பட்டு வந்துவிட்டால் (நன்மைகளை பதிவு செய்யும்) வானவர்கள் (தங்கள் பதிவேடுகளை) மூடிவிட்டு இமாம் நிகழ்த்தும் குத்பா உரையைக் கேட்பதற்காக (பள்ளிக்கு) ஆஜராகிவிடுவார்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: இப்னுமாஜா, நஸயீ, புகாரி, முஸ்லிம்)
உங்கள் பெயர்களை பதிவு செய்யுங்கள் முஸ்லிம்களின் (ஈத்) பெருநாளாக விளங்கும் ஜும்ஆத் தொழுகைக்கு முன்னரே சென்று வானவர்களின் பதிவேட்டில் நமது பெயர்களைப் பதிவு செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவதற்கு முனைப்போடு இருந்து வரவேண்டும்.

துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் மூன்று நேரங்களை அல்லாஹ் தன்னிடம் மறைத்து வைத்துள்ளான். கியாமத்நாள் எப்போது நிகழும் என்பதையும், லைலத்துல் கத்ர் என்னும் மாண்பார் இரவு ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் என்று வரும் என்பதையும், ஜும்ஆவின் துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் எது என்பதையும் மறைத்து வைத்துள்ளான்.
சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள் ஜும்ஆவின் நாளாகும். அன்றுதான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அன்று தான் சுவனத்திலிருந்து (பூமிக்கு) இறக்கி வைக்கப்பட்டார்கள். அந்த நாளில் ஒரு நேரமுண்டு. அதில் முஸ்லிமான அடியார் தொழுதுவிட்டு கேட்கும் எதையும் அல்லாஹ் மறுப்பதில்லை. என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா)
அந்த நேரம் எதுவென இரு நபிமொழிகள் தெரிவிக்கின்றன. ஒன்று இமாம் மிம்பரில் ஏறியது முதல் தொழுகை முடியும் வரை என்றும் பிறிதொன்று அஸர் முதல் மஃக்ரிப் தொழுகை வரை என்றும் உள்ளன.
துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் இமாம் எழுந்து மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரையாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்;: இப்னு உமர் (ரலி) )
நான் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)யிடம் அந்த நேரத்தைப் பற்றி கேட்ட போது அவர்கள் ஜும்ஆ நாளின் அஸருக்குப்பின் தொடங்கி சூரியன் மறைவது வரையாகும் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்;: இப்னுமாஜா )
இந்த இரு ஹதீஸ்களிலிருந்து அந்த நேரம் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் சூரியன் மறையும் வரையாகும் என்பதையும் அதில் நம் தேவைகள் அனைத்தையும் அல்லாஹ்விடம் கேட்டுப் பெறுவதில் முனைப்பாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
ஜும்ஆவின் முன் ஸுன்னத்து தொழுகை உண்டா? ஜும்ஆ நாளில் நபி(ஸல்) குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் நுழைந்தார். நீர் தொழுது விட்டீரா என்று நபி(ஸல்) கேட்க, அவர் இல்லை என்றார். (அப்போது) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என நபி(ஸல்) அவரிடம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது)
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்பானி என்பவர் வந்து உட்கார்ந்து விட்டார். ஸுலைக் இரண்டு ரகஅத்கள் சுருக்கமாகத் தொழுவீராக! என்று நபி(ஸல்) அவரிடம் கூறிவிட்டு, இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது யாரேனும் வந்தால் சுருக்கமாக அவர் இரண்டு ரகஅத்கள் தொழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்)
இந்த உத்தரவுக்கு மாற்றமாக தாமதமாக வருபவர் குத்பா வேளையில் தொழாமல் உட்காருவதையும் தொழுபவரை தடுப்பவர்களையும் இன்று காண முடிகிறது. இது நபி வழிக்கு மாற்றமாகும்.
ஜும்ஆ தொழுகைக்கு முன் ஸுன்னத்து தொழுகை கிடையாது. ஆனால் பள்ளிவாசலுக்குரிய தஹிய்யத்துல் மஸ்ஜித் இரு ரகஅத்துகளையே நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். சிலர் இது காணிக்கை தொழுகை இல்லை. முன் ஸுன்னத் தொழுகையெனக் கூறுகின்றனர். அவ்வாறெனில் நபி(ஸல்) அவர்கள் அங்கிருந்தவர்களில் முன் ஸுன்னத் தொழாதவர்களை தொழவேண்டுமென கட்டளையிட்டிருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து நேராக பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி குத்பா உரையை துவங்கி விடுவதால் இது முன் ஸுன்னத் அல்ல என்பது தெளிவாகிறது.

ஜும்ஆவின் பின் ஸுன்னத்து தொழுகை உங்களில் எவரேனும் ஜும்ஆ தொழுதால் அதன் பின் நான்கு ரகஅத்கள் தொழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: முஸ்லி;ம், திர்மிதீ, அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது) நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவின் பின் வீட்டிற்குச் சென்று இரு ரகஅத்கள் தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்.)
ஓதவேண்டிய அத்தியாயங்கள் 1.நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் ஜும்;ஆ என்ற (62ஆவது) அத்தியாயத்தையும், முனாஃபிக்கீன் என்ற (63ஆவது) அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்:முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ
2. நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் அல் அஃலா என்ற (ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்னும்87ஆவது) அத்தியாயத்தையும், அல் காஷியா எனற ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா என்னும் 88ஆவது) அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: ஸமுரா (ரலி), நூற்கள்:அஹ்மது, அபூதாவூது, நஸயீ )

பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை பெண்களுக்கு ஏனையத் தொழுகையைப் போன்றே ஜும்ஆ தொழுகைக்கும் நபி(ஸல்) அவர்கள் தொழ அனுமதித்துள்ளார்கள். பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழ அனுமதி கேட்டால் அவர்களின் (அந்த) உரிமைகளை நீங்கள் தடுக்க வேண்டாம் என நபி(ஸல்) கூறியுள்ளனர். (நூல்: முஸ்லிம்)
பள்ளி வாசலுக்குத் தொழவரும் உங்கள் பெண்களை நீங்கள் தடை செய்யாதீர்கள். எனினும் (தொழுவதற்கு) அவர்களுடைய வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( நூற்கள்: அபூதாவூத், மிஷ்காத்-1062.)

ஜும்ஆவை தவற விட்டவர் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரகஅத்தைப் பெற்றுக் கொண்டவர் ஜும்ஆவைப் பெற்றுக் கொண்டவராவார் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: நஸயீ
ஜும்ஆவின் இரண்டு ரகஅத்துகளும் ஒருவருக்குத் தவறிவிட்டால் அவர் நான்கு ரகஅத்துகள் தொழவும் என நபி(ஸல்)கூறினார்கள். நூல்: அல் தப்ரானீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...