3/26/2010

இஸ்லாத்தின் பெயரால்..

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!

நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!
புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.

உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?
அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?

இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.

இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!
முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.

அது மட்டுமா?
பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி 'பரக்கத்தும் பொருளும்' குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.

ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,

மாயமந்திரங்கள்
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.

இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!

போலிகளிடம் ஏமாறாதீர்!
இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?

இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்
மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.

அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்
அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.

பாட்டுக்கச்சேரியும் நடனமும்
கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!

பக்கவாத்தியங்கள்
இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.

பிறந்த நாள் விழாக்கள்
இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி 'பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா' என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.

இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.

ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்
நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?

விஞ்ஞானயுகத்தில் கற்காலம்
விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?

இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?
1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.

இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !
இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?

முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?
இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
'முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? 'முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?'

'அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.' (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,

'யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!' (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!

இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!

வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,

சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!

இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!

'இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்'

இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

'ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்'
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)

source http://albaqavi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...