10/07/2010

உபரியான வணக்கங்கள்

அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக இந்த மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகின்றான்.

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி (صلى الله عليه وسلم அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள்,"நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை"என்றார்கள்

அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். உடனே அவர்,அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதுல்லாஹ்(ரழி)நூல் : புகாரி

இந்த ஹதீஸில் கடமையைத்தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஒருவரை வெற்றியாளர் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுவதிலிருந்து கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்குப் போதுமானது என்பதை அறிய முடிகின்றது. எனினும் ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வ மூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. [ஏனெனில்] என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹ"ரைரா(ரலி) நூல் : புகாரி

உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹ்தீஸ் விளக்குகின்றது. கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் எற்படலாம். இந்தக் குறை பாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கிவிடக் கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுகின்றார்கள் :

நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி[ரலி] நூல் : தாரமீ

கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி வடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை எற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறை வெற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...