குர்பானியின் சட்டங்கள்: ஹஜ்ஜுப் பெருநாளன்று பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே குர்பானி என்று சொல்லப்படுகிறது. நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில் இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான்.
உமது இறைவனுக்காகத் தொழுது மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்குர்ஆன் 108:2 ஹஜ் பெருநாள் தினத்தில் அறுத்துப் பலியிடுவதைவிடச் சிறந்த அமலை ஒருவன் செய்துவிட முடியாது. அந்தப் பிராணியிலிருந்து சிந்துகின்ற இரத்தம் அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்த மதிப்பை பெற்றதாகும். அதனைச் சிறந்த முறையில் அறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா நூல் :திர்மீதி
தானே அறுக்க வேண்டும்: குர்பானி யார் கொடுக்கின்றாறோ, அவர் அறுப்பதற்கு ஆட்களைத் தேடி கொண்டிராமல் தானே அறுப்பது சிறந்ததாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தானே அறுத்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் இரு கொம்புகள் உள்ள வெண்மையும், கறுப்பும் கலந்த இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தனர். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவர்கள் தன் கையால் அறுத்தனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல் :புகாரி எப்படி அறுப்பது என்று தெரியாதவராக இருந்தால் அறுக்கின்றபோது, அந்த இடத்தில் நின்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ஃபாத்திமா (ரலி) அவர்களை அவ்வாறு செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். குர்பானி கொடுக்க எண்ணியவர் செய்யக்கூடாதவை: குர்பானி கொடுக்க வேண்டும் என்று எவர் நாடுகிறாறோ அவர் துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை பத்து நாட்களுக்கு நகங்கள், முடிகளை களையக்கூடாது. உங்களில் யாரேனும் குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து (அறுத்து முடியும்வரை பத்து நாட்களுக்குத்) தன் நகங்களையும் முடிகளையும் களையாதிருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) நூல்:முஸ்லிம்
குர்பானி கொடுக்கும் நேரம்: பெருநாள் தொழுகையும் அதன் பின்பு ஓதப்படுகின்ற இரண்டு குத்பாக்களும் முடிவதற்கு முன்னால் குர்பானி கொடுக்கலாகாது. அதற்கு முன்பே ஒருவன் அறுத்துவிட்டால் அது ஏற்கப்படாது. இன்னொன்றை அவன் அறுத்துப்பலியிட வேண்டும். எவன் தொழுகைக்கு முன்னர் அறுக்கின்றானோ அவன் தனக்காக அறுக்கின்றான். (அது வணக்கமாகாது) எவன் தொழுகையும் இரண்டு குத்பாக்களும் முடிந்த பின் அறுக்கின்றானோ அவனே முழுமையாக வணக்கத்தை நிறைவேற்றியவனாவான். முஸ்லிம்களின் சுன்னத்தையும் அவனே செய்தவனாவான் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். நூல்: புகாரி,முஸ்லிம் நபி (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுதேன். தொழுது முடித்த பின் ஆடு ஒன்று அறுக்கப்பட்டுக்கிடப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ, அந்த இடத்தில் வேறொன்றை (தொழுகைக்குப்பின்) அறுக்க வேண்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுந்துப் இப்னு சுஃப்யான் (ரலி) நூல்கள்: புகாரி,முஸ்லிம்.
குர்பானி பிராணிகள்: ஆடு மாடு ஒட்டகம் ஆகிய மூன்றை மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் இம்மூன்றையும் அரபியில் அன்ஆம் என்று கூறுவர் (சூரதுல் ஹஜ் 22:34) இம்மூன்றைத் தவிர மற்ற எந்தப் பிராணியும் குர்பானிக்கு உரியதன்று. மாடு, ஒட்டகத்தை ஏழு பேர்கள் கூட்டாகக் கொடுக்கலாம் ஹூதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட வருடம் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு மாட்டையும், அதுபோல் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தையும், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் குர்பானி கொடுத்தோம் என்று ஜாபர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் ஒற்றைக் கண் குருடு, வியாதியுடையது, நொண்டி, கிழட்டுப் பருவம் அடைந்தது ஆகிய பிராண்ிகள் குர்பானிக்கு ஏற்றவையல்ல என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், இப்னு ஹிப்பான், நஸயீ,திர்மீதி,இப்னுமாஜா
ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை, குர்பானி கொடுத்துள்ளதாக அபூராபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை அஹ்மது இமாம் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும்: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்துள்ளனர் என்று அபூ அய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: இப்னுமாஜா,திர்மீதி இந்த ஹதீஸின் அடிப்படையில் தனக்கும்,தன் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டைக் கொடுப்பது போதுமானது. கூலியாகக் கொடுக்கக்கூடாது: நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தபோது அதன் இறைச்சியையும் தோலையும் ஏழைகளுக்குக் கொடுக்கும்படியும் உரித்தவர்களுக்குக் கூலியாக இதில் எதனையும் கொடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டனர் என்று அலி (ரலி) அவர்கள் அறிவித்துள்ளனர். நூல்கள்: புகாரி,முஸ்லிம்
பங்கிடும் முறை: குர்பானி கொடுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள் (உறவினர்கள், ஏழைகளுக்கும்) உண்ண கொடுங்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நாம் அதனை உண்ணுவதும், பிறருக்கு உண்ணக் கொடுப்பதும் சுன்னத்தாகும். இவ்வளவுதான் உண்ண வேண்டும் என்று வரம்பு எதுவும் கிடையாது.அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம்.
இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது: (எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்.அல்குர்ஆன் 22:37 இந்த திருவசனத்தில் அல்லாஹ் குர்பானி கொடுப்பதன் மூலம் இறையச்சத்தை நாடுகிறான் என்பதை விளங்க முடிகிறது. ஆகவே இறையச்சம் என்பது உயிறுள்ளவருக்குத்தான் இருக்கும். இறந்தவர்களுக்கு இருக்காது. மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆதமின் மகன் இறந்து விட்டால் மூன்று விஷயத்தை தவிர மற்ற எல்லாத் தொடர்புகளூம் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை (1) நிரந்தர தர்மம் (2) பயன் தரும் கல்வி (3) தன் பெற்றோருக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்:முஸ்லிம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக