9/30/2014

ஹஜ்ஜுப் பெருநாள்


இஸ்லாமிய மாதங்களில், வருடம் இரண்டு நாட்களை நாம் சங்கை பொருந்திய பெருநாட்களாக கொண்டாடி வருகிறோம். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை நோன்புப் பெருநாளாகவும், துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது பிறையினை ஹஜ்ஜுப் பெருநாளாகவும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
ஹஜ்ஜுப் பெருநாள் என்றதுமே நமக்கு இரண்டு நபிமார்களைப் பற்றி நினைவிற்கு வரும். அல்லாஹ்வின் உற்ற தோழர் என்ற கருத்தில் அழைக்கப்படும் “கலீலுல்லாஹ்” என்ற பெயருக்கு சொந்தக்காரரான நபி இபுறாஹீம் (அலை) அவர்களும், அவர்களின் அருமை மகனார் அருந்தவப் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் நம் நினைவில் நிற்கும் அந்த இரண்டு நபிமார்களாவர். அல்லாஹ்வின் அருள்மறையாம் திருகுர்ஆனை கருத்தூன்றி ஆராயும்போது நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய தியாகவாழ்வு பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய அற்புத வரலாறாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும், துன்ப துயரங்களையெல்லாம் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றி பெற்ற வீர வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை சுருக்கமாக பார்ப்போம்.

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் இளம் பிராயத்திலேயே ஓரிறை கொள்கையான இஸ்லாத்தை எடுத்து சொன்னதின் காரணத்தினால், அவருடைய தந்தையாராலேயே வீட்டைவிட்டும் விரட்டப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 19:46 கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னன் நம்ரூது என்பவனை எதிர்ததினால் நெருப்பு குண்டத்தில் எறியப்பட்ட சோதனை.அல்குர்ஆன் 21:68,69
திருமணமாகி பல்லாண்டு காலம் பிள்ளைப்பேறு இன்றி பரிதவித்த சோதனை. அல்குர்ஆன் 37:100,101
முதிர்ந்த பருவத்தில் உள்ள இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு நபி இஸ்மாயீல் (அலை) பிறக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பின்பு அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் தம் மனைவி ஹாஜிரா அம்மையாரையும், மகன் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தகிக்கும் சுடுமணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிந்த சோதனை. புகார,ி அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தம் அருமை மைந்தரான நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்த சோதனை. அல்குர்ஆன் 37:02,03
ஆக வாழ்நாளில் பல அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்தும்கூட மனம் தளராமல் எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்தனை செய்து பொறுமையுடன் துன்பங்களை சகித்து கொண்டிருந்ததினால் சோதனைகளெல்லாம் சாதனையாக மாறிய சாகஸ வரலாற்றை குர்ஆனில் காணலாம். கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்பாக நடந்த சில நிகழ்ச்சிகளை குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. அந்த பாலைவன சுடுமணலில் அன்னை ஹாஜிரா அவர்கள் ஒவ்வொரு மலைக்குன்றின் அடிவாரத்தில் தண்ணீரை தேடி ஓடிய அந்த நிகழ்ச்சியை நாம் நினைவு படுத்தி கொள்வதற்காகத்தான் இப்போது புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் சபா, மர்வா என்ற மலைக்குன்றுகளிடையே ஓடிவருவதை அல்லாஹ் கடமையாக்கி வைத்திருக்கிறான். அன்றைய தினம் அன்னை ஹாஜிராவும் அவர்தம் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் தாகத்தை தீர்த்து கொள்ள உதவிய அந்த தண்ணீர் தடாகம் தான் இன்றளவும் ஜம் ஜம் என்ற பெயரில் ஹாஜிகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீராக விளங்குகிறது.
நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் புதல்வரை அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் ஒரு ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பகரமாக குர்பானீ கொடுக்க செய்ததுடன், இனி மறுமை நாள் வரை வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானீ கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக நமது உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்களை நபி இபுறாஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர் ஆன் 3:95
நபி இபுறாஹீம் (அலை) அவர்களது செயலை பின்வரும் காலத்தவரும் (மறுமை நாள் வரை) நினைவு கூறுவதை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 37:108
அன்பு சகோதர சகோதரிகளே, ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தின் உயரிய காரணங்களையும் தத்துவார்த்தங்களையும் ஓரளவு சுருக்கமாக புரிந்து கொண்டோம். இன்னும் அதிக விளக்கத்திற்கு திருக்குர் ஆனையும் ஹதீஸ் நூல்களையும் பார்வையிடும்படி கேட்டு கொள்கிறோம்.
நபி இபுறாஹீம் (அலை) அவர்களது வாழ்வில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏற்பட்ட துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் நமக்கு ஒரு மகத்தான படிப்பினை இருக்கிறது. அதுதான் எத்தகைய கடும் சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ்வை பிரார்த்தித்து பொறுமையுடன் ஐவேளை தொழுகையையும் மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்பதே அந்த படிப்பினையாகும்.
ஹஜ்ஜுப்பெருநாள் அன்று பள்ளிவாசலுக்கு சென்று பெருநாள் தொழுகை முடித்ததும் கடமை முடிந்தது என்று நினைக்காமல் ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகளை குறிப்பாக, நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கை பாதையினை நெஞ்சில் நிறுத்தி உறவினர், நண்பர்களிடையே ஒருவருக்கொருவர் உபதேசம் செய்ய வேண்டும். வசதிமிக்கவர்கள் குர்பானீ கொடுக்க வேண்டும். இதை பற்றி விரிவாக குர்பானீ சட்டத்திட்டத்தில் காணலாம். மேலும் ஹஜ்ஜு மாதம்பிறை 9 அதாவது அரஃபா தினம் என்றழைக்கப்ப்டும் நாளில் சுன்னத்தான நோன்பு நோற்கவேண்டும். அதற்கு அரஃபா நோன்பு என்று நபி (ஸல்) அவர்கள் பெயர் சூட்டுகின்றார்கள். உடல் ஆரோக்கியம் நிறைந்த ஆண், பெண் இருபாலாரும் சுன்னத்தான இந்த நோன்பை நோற்பதற்கு முயற்சி செய்யவேண்டும். அரஃபா தினத்தன்று நோற்க வேண்டிய நோன்பு பற்றி கீழ்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது முந்தைய மற்றும் அடுத்த இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவுது, திர்மீதி, இப்னுமாஜா அறிவிப்பவர்:அபூகதாதா (ரலி)
(இந்த நோன்பு ஹஜ்ஜு கடமையாற்றும் ஹாஜிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...