1/17/2015

திண்ணைத் தோழர்கள்! - 1


திண்ணைத் தோழர்கள் என்போர் நபி(ஸல்) அவர்களின் ஏழைத் தோழர்கள் ஆவர். இவர்களுக்கு குடும்பம், வீடு, செல்வம் ஏதும் இருக்கவில்லை. மஸ்ஜிதுன் நபவியை ஒட்டிய ஒரிடத்தில் இவர்கள் தங்கி வந்தனர். ஆதரவற்றவர்கள் தங்குவதற்காகவே இந்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தையே ஸுஃப்பா (திண்ணை) என்பர். இவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது கூடும்; குறையும். இவர்களில் திருமணம் செய்து கொண்டவர், இறந்து போனவர், பயணம் சென்றவர் ஆகியோரால் அவ்வப்போது இவர்களின் எண்ணிக்கை குறைவதுண்டு.
நூற்றுக்கும் அதிகமானோர் இவ்வாறு இருந்து வந்ததாக அபூநுஐம்(ரஹ்) அவர்கள் ஹுல்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவரான அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், திண்ணைத் தோழர்களை இஸ்லாத்தின் விருந்தாளிகள் என்று கூறுவார்கள். (காண்க புகாரி ஹதீஸ் எண்.6452) தொழுகைக்கு வருவோரிடம் சொல்லி இவர்களை உணவுக்காக அழைத்துச் செல்லும் படி நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். தாமும் அழைத்துச் செல்வார்கள்.

தர்மப்பொருள்கள் ஏதேனும் வந்தால், அதனை நபி(ஸல்) அவர்கள் சாப்பிடாமல், திண்ணைத் தோழர்களுக்கு அனுப்பி விடுவார்கள். அன்பளிப்பு ஏதேனும் வந்தால், அதைத் திண்ணைத் தோழர்களுடன் சேர்ந்து தாமும் சாப்பிடுவார்கள். (ஃபத்ஹுல் பாரீ)
இந்நாளில் இது ‘தக்கத்துல் அக்வாத்’ என அறியப்படுகிறது. மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த திருமணம் செய்யாத, வசதியற்ற, குடும்பமோ, வீடு வாசல்களோ இல்லாத ஏழைகள் இங்கே தங்கியிருந்தார்கள். இவர்களின் எண்ணிக்கை சிலவேளை அதிகரிக்கும், சிலவேளை குறையும். சில வரலாற்று நூற்களில் 70 முதல் 100, என்றும் 300 மேற்பட்டோர் என்று எழுதப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் தமது பெரும்பாலான நேரங்களில் இவர்களுடன் அமர்ந்திருப்பது வழக்கம். அவர்களோடு அளவளாவுவார்கள். உணவு வீட்டிலிருந்தால் இவர்களை அழைத்து உணவு வழங்குவார்கள். நபித்தோழர்கள் இவர்களுள் ஒரிருவரை தம்மோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவருந்தச் செய்வது உண்டு. பேரீச்சங் குலைகளைக் கொண்டு வந்து இவர்கள் வசிக்கும் திண்ணையில் இவர்களுக்காக சிலர் தொங்கவிடுவதும் உண்டு.
இதைக் கண்ட நயவஞ்சகர்கள் பெருமைக்காக, முகஸ்துதிக்காக தாழ்ந்த வகைப் பேரீச்சங் குலைகளைக் கொண்டு வந்து அதுபோன்று தொங்கவிடுவது உண்டு. இவர்கள் குறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான்
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் 2:268)
திண்ணைத் தோழர்களின் நிலை குறித்து இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 2:273)
இவர்களின் முக்கிய பணி நபி(ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் கற்றுக்கொள்வது, மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொள்வதே ஆகும். அல்லது நபி (ஸல்) அவர்கள் யாரிடம் கற்றுக் கொள்ளும்படி கூறுகிறார்களோ அவர்களிடம் கற்றுக் கொள்வதாகும். போர் வந்து விட்டால், இவர்களுள் சக்தி பெற்றவர்கள் போருக்காகப் புறப்படுவார்கள். இவர்களுள் முக்கியமானவர் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ஆவார்கள்.
இவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நபிமொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். அது குறித்து அவர்களே அறிவிக்கிறார்கள்:
அபூ ஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு ஏழை மனிதன். நான் என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து வந்தேன். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன் என்று அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, நாம் நேர்வழியையும் தெளிவான சான்றுகளையும் அருளி மக்களுக்காக அவற்றை வேதத்தில் நாம் தெளிவாகக் கூறிய பின்னரும் யார் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் தன் அருளுக்கு அருகதையற்றவர்களாக்கி விடுகிறான். மேலும் (தீயோரை) சபிப்ப (வர்களான இறைநம்பிக்கையாளர்களும் வான)வர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ஆயினும் அவர்களில் யார் (தம் குற்றங்களிலிருந்து) மீண்டு, மேலும் (தம்மைச்) சீர் திருத்தி இன்னும் (தாம் மறைத்தவற்றை மக்களுக்குத்) தெளிவுபடுத்தியும் விடுகின்றனரோ அவர்களைத் தவிர. (அவ்வாறு தம்மைத் திருத்திய) அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் மிக்க மன்னிப்பவனும் அருளுவதில் அள வற்றவனுமாவேன் (திருக்குர்ஆன் 02:159-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.
மேலும் தொடர்ந்து மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.
இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு உம்முடைய மேலங்கியை விரியும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக! என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (நூல்கள் : புகாரி 118, 119, முஸ்லிம் : 4905, 4906)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...