1/17/2015

part 2


பசியின் கொடுமை காரணமாகவும், கடினமாக ஏழ்மை காரணமாகவும் அவர்கள் அனுபவித்த துன்பத்தையும் அதில் பொறுமையாக இருந்தது குறித்தும் அவர்களே அறிவிப்பதாவது:
அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள் (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.
பிறகு அபுல்காசிம் (நபி(ஸல்)) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். (என்னைப்) பின்தொடர்ந்து வா! என்று சொல்லி விட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் மனைவியாரிடம்) இந்தப் பால் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார்கள். அவர்கள் இன்ன ஆண் அல்லது பெண் தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுர்! என அழைத்தார்கள். நான் இதோ வந்துவிட்டேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள் என்றார்கள்.
திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. (இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணை வாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்து விட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஹிர் என! அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே! என்றேன். நபி(ஸல்) அவர்கள் இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள் என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு அபூ ஹிர்! என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன் கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே! என்று சொன்னேன். அதற்கவர்கள் நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே) என்று கேட்டார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான் என்றேன். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து (இதைப் பருகுங்கள் என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். இன்னும் பருகுங்கள் என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் பருகுங்கள் என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன். இறுதியில் சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை என்றேன். நபி(ஸல்) அவர்கள் (சரி) அதை எனக்குக் கொடுங்கள் என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள். (நூல் : புகாரி 6452)

அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். (அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), அபூ ஹுரைரா! என்று அழைத்தார்கள். நான், இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே கட்டளையிடுங்கள் என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனக்கேற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக் கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்! என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு மீண்டும் (அருந்துங்கள்) என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாகிவிட்டது.
பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். (என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத் துவிட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும் படி உங்களிடம் கேட்டேன் என்று சொன்னேன். உமர்(ரலி), அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும் என்று கூறினார்கள். (நூல் : புகாரி 5375)
அல்வலீத் பின் அப்தில் மலிக் என்பவர் காலம் வரை திண்ணைத் தோழர்கள் வசித்த அந்தத் திண்ணை அப்படியே இருந்தது. மதீனா பள்ளியை விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக இவர் அதை மாற்றியமைத்து விட்டார். அது தற்போது ‘தக்கத்துல் அக்வாத்’ என அழைக்கப்படுகிறது.
1) பிலால் பின் ரபாஹ்(ரலி) 2) அப் பராச பின் மாலிக்(ரலி) 3) ஸகீஃப் பின் உமர்(ரலி) 4) கயில் பின் சுராக்கா(ரலி) 5) ஹாரிஸா பின் நுஉமான்(ரலி) 6) ஹாஸிம் பின் ஹர்மலா(ரலி) 7) ஹன்ழலா பின் ஆமிர்(ரலி) 8) ஹகம் பின் உமைர்(ரலி) 9) கப்பான் பின் அரத்(ரலி) 10) குனைஸ் பின் ஹீதாஃபா(ரலி) 11) குரைம் பின் ஃபாதிக்(ரலி) 12) அபூ ரஸீன்(ரலி) 13) ஸாலிம் பின் உமைர்(ரலி) 14) இப்பாள் பின் ஸாரியா(ரலி) 15) துக்ஃபாபின் ஸாரியா(ரலி) 16) தல்ஹா பின் அம்ர்(ரலி) 17) தஃபாவி அத் தவ்ஸீ(ரலி) 18) அபூ தர் அல் கிஃபாரீ(ரலி) 19) அபூ ஹுரைரா(ரலி) 20) அப்துல்லாஹ் பின் உம்மி பக்தூம் 21) அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) 22) அப்துல்லாஹ் பின் ஸைத் அல் ஜீஹீனி(ரலி) 23) அப்துல்லாஹ் பின் அல் ஹாரிஸ்(ரலி) 24) அப்பாத் பின் காலித் அல் கிஃபாரீ(ரலி) 25) புளாலா பின் உஸைத் அல் அஸ்ஸாரீ(ரலி) 26) மிஸ்தஹ் பின் அஸாஸா(ரலி) 27) வாபிஸா பின் மஅத் அல் ஜீஹீனி(ரலி) 28) முகீஃராவின் முன்னாள் அடிமையான ஹிலால்(ரலி) இவர்கள் திண்ணைத் தோழர்கள் ஆவார்கள்.
திண்ணைத் தோழர்களுள் எழுபது நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுள் எவருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களுள் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது, (வேறு சிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத்தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும் போது) சிலரது போர்வை கரண்டைக்கால் வரையும் இருக்கும். வேறு சிலரது போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும், தமது மறைவிடங்களைப் பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காகத் தம் கைகளால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) நூல் : புகாரி 442
திண்ணைத் தோழர்கள் யார் யார் என்பதையும் அவர்கள் தொடர்பான செய்திகளும் பல நூல்களில் பல்வேறிடங்களில் பரவிக்கிடக்கின்றன. அந்த அறிவிப்புகள் அனைத்தையும் எழுதினால் அது பெரிய நூலாக ஆகிவிடும். எனவே, அவர்கள் குறித்த சில அவசியமான விஷயங்களை மட்டும் இங்கே கூற விரும்புகிறேன்.
பின்வரும் ஹதீஸ் முஸ்னது அஹ்மது எனும் நூலில் பதிவாகியுள்ளது. நபி(ஸல்) அவர்கள் திண்ணைத் தோழர்கள் மீது எவ்வளவு அக்கரை கொண்டிருந்தார்கள் என்பதை அது விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா(ரலி) அவர்களைத் திருமணம் செய்து கொடுத்த போது, அவர்களுக்குக் கம்பளிப் போர்வை, இலைகள் திணிக்கப்பட்ட தோல் தலையணை, இரண்டு திரிகைகள், தோலினாலான தண்ணீர்ப்பை, இரண்டு கூஜாக்கள் ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள்.
ஒரு நாள் அலீ(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! (பேரீத்தம் மரத்திற்குத்) தண்ணீர் இறைத்ததால், என் நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளது. அல்லாஹ் உன் தந்தைக்குப் போர்க்கைதிகள் சிலரைத் தந்துள்ளான். எனவே நீ சென்று அவர்களிடம் ஒரு உதவியாளரைக் கேள் என்றார்கள். உடனே ஃபாத்திமா(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் கைகள் காய்த்துப் போகும் அளவுக்கு நானும் மாவு திரிக்கிறேன்” என்று கூறினார்கள். எனவே ஃபாத்திமா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ”மகளே! நீ இங்கு வரக் காரணம் என்ன?” என்று (நபியவர்கள்) கேட்டார்கள். ”உங்களுக்கு ‘ஸலாம்’ கூற வந்தேன்” என்று ஃபாத்திமா(ரலி) அவர்கள் கூறினார்கள். (தாம் விரும்பியதை) அவர்களிடம் கேட்க, வெட்கப்பட்டுத் திரும்பிவிட்டார்கள்.
”என்ன செய்தாய்?” என அலீ(ரலி) அவர்கள் (ஃபாத்திமாவிடம்) கேட்டார்கள். ”அவர்களிடம் நான் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன்” என ஃபாத்திமா(ரலி) கூறினார்கள். (அலீயவர்கள் கூறுகின்றார்கள்: இருவரும்) சேர்ந்து அவர்களிடம் சென்றோம்.
அப்போது அலீ(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நெஞ்சு வலிக்கும் அளவுக்கு (பேரீத்த மரத்திற்குத்) தண்ணீர் இறைக்கின்றேன்” என்றார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்கள், ”என் கைகள் காய்த்துப் போகும் அளவுக்கு நான் மாவு அறைக்கின்றேன். உங்களிடம் போர்க் கைதிகளையும் வசதிகளையும் அல்லாஹ் தந்துள்ளான். எனவே எங்களுக்குப் பணியாள் (ஒருவரை) வழங்குங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் இருவருக்கும் நான் தரமாட்டேன். திண்ணைத் தோழர்களுக்குச் செலவு செய்ய எதுவும் கிடைக்காமல், நான் அவர்களை வயிற்றுப் பசியோடு (குப்புறப்படுக்க) விட்டுள்ளேன். எனவே, நான் கைதிகளை விற்று, அதன்மூலம் கிடைக்கும் தொகையைத் திண்ணைத் தோழர்களுக்கே செலவு செய்வேன்’ ‘என்று கூறினார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் திரும்பிவிட்டார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள், அவ்விருவரும் (உறங்குவதற்காக) தம் போர்வையைப் போர்த்திய நேரத்தில் வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போர்வையால் இருவரும் தங்களின் தலைகளை மூடினால், இருவரின் பாதங்களும் வெளிப்படும், பாதங்களை மூடினால், இருவரின் தலைகளும் திறந்து கொள்ளும் அப்போது, இருவரும் அப்படியே இருங்கள்” என்று கூறிவிட்டு, ”என்னிடம் நீங்கள் இருவரும் கேட்டு வந்ததைவிடச் சிறந்ததை உங்களுக்கு நான் கூறட்டுமா?” என்று கேட்டார்கள். ”சரி” என இருவரும் கூறினார்கள்.
ஆகவே, அவர்கள், ”சில சொற்கள் உள்ளன. அவற்றை எனக்கு ஜிப்ரீல்(அலை) கற்றுத் தந்தார்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பத்து தடவை ‘சுப்ஹானல்லாஹ்’ கூறுங்கள், பத்து தடவை ‘அல்ஹம்து லில்லாஹ்’ கூறுங்கள், பத்து தடவை ‘அல்லாஹு அக்பர்’ கூறுங்கள். உங்களின் படுக்கைக்கு நீங்கள் வந்து விட்டால், 33 தடவை ‘சுப்ஹானல்லாஹ்’ கூறுங்கள். 33 தடவை ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறுங்கள். 34 தடவை ‘அல்லாஹு அக்பர்’ கூறுங்கள்” என்று கூறினார்கள்.
”அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவற்றை எனக்குக் கற்றுத் தந்த நாளிலிருந்து அவற்றை நான் விட்டதே இல்லை” என்று அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் இப்னுல் கவ்வாஉ என்பவர், ”ஸிஃப்பீன் போரின் இரவு நேரத்தில் கூட விட்டதில்லையா?” என்று கேட்டார். ”இராக்வாசிகளே! அல்லாஹ் உங்களை நாசமாக்குவானாக! ஆமாம். ஸிஃப்பீன் போரின் இரவிலும் கூட நான் (அவற்றை ஓத) விட்டதில்லை” என அலீ(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : அதாஉ பின் ஸாஇப்(ரஹ்) நூல் : முஸ்னது அஹ்மது 562, 797
மக்களிடம் திண்ணைத் தோழர்கள் குறித்துள்ள தவறான சிந்தனைகளை களைவது முக்கியமாகும். அவர்கள் குறித்த தவறான எண்ணங்களுள் ஒன்று அவர்கள் நாற்பெரும் கலீஃபாக்களான அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ(ரலி) ஆகியோரை விட சிறப்புக்குரியவர்கள். நபி(ஸல்) அவர்களால் சொர்க்கவாசிகள் என நற்செய்தி கூறப்பட்ட (தல்ஹா, ஸுபைர், ஸஅது, அப்துர் ரஹ்மான் பின் அஉஃப், அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ், ஸயீத் பின் ஸைத்) ஆகிய பதின்மரை விடவும், ஏன்! மற்றெல்லா நபித்தோழர்களை விடவும் அவர்கள் சிறப்புக்குரியவர்கள் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
அல்லாஹ் கூறுகின்றான்: அன்றியும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர உரிமை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களிலிருந்து எவரும் சமமாக மாட்டார்கள். (மக்காவின் வெற்றிக் குப்)பின் செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும், அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கிறன்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் 57:10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...