1/17/2015

part -3


தங்களது உடலாலும், பொருளாலும் அறப்போர் புரிந்தோர் அவர்களுக்குப் பின் உள்ளவர்களைவிட சிறப்புக்குரியவர்கள் நம்பிக்கையாளர்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது, மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்று)க் கொண்டான். அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கி அவர்களுக்கு அண்மையிலான வெற்றியையும் அளித்தான். (அல்குர்ஆன் 48:18)
இன்னும், முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (நம்பிக்கை கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை நற்செயலில் பின்தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே, அவர்களை, அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அன்றியும், அவர்களுக்காக சொர்க்கங்களைச் சித்தப்படுத்தியிருக்கின்றனான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அதில் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள், இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9:100)
இந்த வசனங்களில் இஸ்லாத்திற்காக ஆரம்ப காலங்களில் தங்கள் உடலாலும் பொருளாலும் தியாகம் செய்தவர்கள் அவர்களுக்குப் பின்னால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை விட சிறப்புக்குரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இந்தச் சமுதாயத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் சிறந்தவர்கள், அபூபக்ர்(ரலி) அவர்கள் ஆவார். அபூபக்ர்(ரலி) அவர்களுக்குப்பின் சிறந்தவர் உமர்(ரலி) அவர்கள் ஆவார் என அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்னது அஹ்மது 792, 793, 794, 795, 796)
மதீனா வந்த பின்புதான், திண்ணைத் தோழர்கள் எனப் பெயர் வரலாயிற்று. பத்ருப் போரில் கலந்து கொண்டோரின் சிறப்புகளை நாம் அறிந்துள்ளோம். அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம்(ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத்(ரலி) ஆகியோரையும், நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடத்திற்குச் செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகப் பல்லக்கில் ஒரு பெண் இருக்கிறாள், அவளிடம் ஒரு கடிதம் இருக்கும், அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியனுப்பினார்கள்.
அவ்வாறே நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்து சென்றன. (அந்த இடத்தை அடைந்தோம்) அங்கு அந்தப் பெண் இருந்தாள். நாங்கள் அவளிடம் ”அந்தக் கடிதத்தை வெளியே எடு” என்று சொன்னோம். அவள் ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று சொன்னாள். நாங்கள், ”நீயாகக் கடிதத்தை எடுத்துக் கொடுத்து)விடு; இல்லாவிட்டால் (சோதனைக்காக) உன் ஆடையை நீ அவிழ்க்க வேண்டியதிருக்கும்” என்று கூறினோம்.
உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையிலிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அந்தக் கடிதத்தை அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தோம். அதில், ஹாத்திப் பின் அபீபல்த் தஆ(ரலி) அவர்கள், மக்காவாசிகளான இணைவைப்பாளர்களுள் சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் (போர்) விவகாரம் குறித்து சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்தார். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ”ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார்கள்.
ஹாத்திப்(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள், நான் குறைஷியரைச் சார்ந்து வாழ்பவனாகவே இருந்து வந்தேன். (அதாவது குறைஷியரின் நட்புக் குலத்தாராகவே அவர் இருந்துவந்தார். குறைஷிக் குலத்தில் ஒருவராக இருக்கவில்லை என சுஃப்யான் பின் உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்) தங்களுடன் இருந்துவந்த முஹாஜிர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தாரைப் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர் பலர் இருந்தனர்.
எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் எவரும் இல்லாததால் (இணைவைப்பாளர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து, அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள) என் (பலவீனமான) உறவினரைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால்தான் இணைவைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இத்தகவல்களைத் தெரிவித்தேன்) நான் என் மார்க்கமான இஸ்லாத்தை விட்டு வேறு மதத்தை ஏற்பதற்காகவோ, இறைமறுப்பாலோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இப்படிச் செய்யவில்லை” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ”இவர் சொல்வது உண்மையே! என்றார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். உமக்கென்ன தெரியும்? பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களை நோக்கி, நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களை மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறி விட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ் ”இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரைப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.” (60:1) எனும் வசனத்தை அருளினான். (நூல் : முஸ்லிம் 4907)
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டார். ”அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்” என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்; நீ தவறாகச் சொல்கிறாய் அவர் (நகரத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப் போரிலும் ஹுதைபியாவிலும் கலந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். (நூல் : முஸ்லிம் 4908)
பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களுள் திண்ணைத் தோழர்களும் உண்டு. அவர்கள் அல்லாதோரும் உண்டு. சொர்க்கத்துக்கு நற்செய்தி கூறப்பட்டோரும் உண்டு. அவர்கள் அல்லாதோரும் உண்டு.
திண்ணைத் தோழர்கள் பற்றிய தவறான அபிப்பிராயங்களுள் மற்றொன்று, அவர்கள் தான் ஸுஃபிய்யாக்களுக்கு முன்னோடிகள் என்பதாகும். ஸுஃபிய்யாக்களுக்கு முன்னோடிகள் என்ற கருத்தும் சமுதாயத்தில் மக்களிடையே நிலவுகிறது. திண்ணைத் தோழர்களுக்கும் ஸுஃபிய்யாக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே வரலாறு கூறும் உண்மை. ஸுஃபி என்பது ஸஃபா எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அதாவது உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளல் என்பது இதன் பொருளாகும். ஸுஃபிய்யாக்கள் இரண்டாம் நூற்றாண்டில் தான் தோன்றினர். திண்ணைத் தோழர்களோ நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே உள்ளனர். திண்ணைத் தோழர்களைக் குறிக்கும்.
ஸுஃப்ஃபா எனும் சொல்லுக்கும் ஸுஃபி எனும் சொல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஸுஃப்ஃபா என்பது திண்ணை என்று பொருள். இதை அதனோடு சம்பந்தப்படுத்தும் எல்லா கருத்துகளும் தவறானவையும் பலவீனமானவையும் ஆகும். ஸுஃபிகள் இறை நினவுக்காகத் தனித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு ‘கல்வத்’ என்றும் கூறுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகையில் தங்கியிருந்ததையும் திண்ணைத் தோழர்கள் தனித்திருந்ததையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகையில் தனித்திருந்தது அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தி (‘வஹி’) இறங்குவதற்கான முன்னேற்பாடாகும். திண்ணைத் தோழர்கள் திண்ணையில் குழுமியிருந்தது அவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்திலாகும். நபி(ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வஹி இறங்கிய பின்பு ஹிரா குகைக்குச் சென்றதில்லை. நபித்துவம் பெற்ற பின்பு நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகை அமைந்துள்ள ‘ஜபல் நூர்’ எனும் அந்த மலைப் பக்கமே சென்றதில்லை என வரலாறு கூறுகிறது. திண்ணைத் தோழர்கள் வசதி வாய்ப்பு பெற்றபின் அங்கிருந்து சென்று விட்டனர். திண்ணைத் தோழர்களுள் பிற்காலத்தில் ஆளுநர்களாக இருந்தவர்களும் உள்ளனர்.
நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற பின் மக்களோடு சேர்ந்து வாழ்ந்தனர். மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்தனர். மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள். இஸ்லாத்தைப் பரப்பவும் தற்காப்புப் போர்களை மேற்கொண்டனர். உலகின் பெரும் மன்னர்களுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு கடிதம் எழுதினார்கள். இவை அனைத்தும் ஸுஃபிய்யாக்களின் செயல்களுக்கு எதிரானதாகும். மக்களுடன் கலந்து நடவாமல் தனித்திருப்பதும், நல்லவற்றில் ஈடுபடுதல், திருமணம் போன்ற அனுமதிக்கப்பட்ட ஆசைகளை விட்டொழிப்பதும், இஸ்லாமிய நடை முறையன்று. ஆனால் ஸுஃபிகள் என்போர் இவற்றை கடைப்பிடிக்க வேண்டுமெனக் கூறுகின்றனர்.
அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு) ”முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ”(இனிமேல்) நான் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன்” என்றார். இன்னொருவர், ”நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ”நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, ”இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன். தொழுகவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மண முடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 5063, முஸ்லிம் 2714)

இது தான் நபி(ஸல்) அவர்கள் சுன்னத் வழிமுறையாகும். இதை விடுத்து ஸுஃபிகள் என்று கூறிக் கொண்டு துறவி போல் வாழ்தல் இஸ்லாத்திற்கு முரணானதாகும்.
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம். அவ்வாறே மர்யமின் குமாரர் ஈஸாவை (தூதராக அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம். அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம். ஆனால், அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவறத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டு பண்ணிக்கொண்டார்கள்) ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப்பேணவில்லை. அப்பால், அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலியை நாம் வழங்கினோம். எனினும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்5 7:27)
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டது போன்று எத்தனையோ துறவிகள் தமது துறவறத்தைச் சரியாகப் பேணாமல் திருமணமும் செய்யாமல், அந்நியப் பெண்களோடு சல்லாபித்து தமது துறவறத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளதை நாம் கேட்டும், படித்தும் இருக்கிறோம். துறவறம் மேற் கொள்வதாக நடித்து, அதைப் பேண முடியாமல் அவமானப்படுவதை விட துறவறம் பூணாமல் இருப்பதே சிறந்தது.
மனிதன் ஆசாபாசங்களுடன் தான் படைக்கப்பட்டுள்ளான். எனவே, அவனது ஆசைகளுக்கு அணை போடும் போது அது எல்லை மீறி பின்னர் வாய்ப்புக் கிடைக்கும் போது தவறு செய்யத் தூண்டிவிடுகிறது. அனுமதிக்கப்பட்ட உலக இன்பங்களில் மூழ்குவதுடன் அந்த இன்பங்களைக் கட்டுப்படுத்தி இறைவனை வணங்குவது தான் அதிக நற்கூலியைப் பெற்றுத்தரும் அறமாகும் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.
திண்ணைத் தோழர்கள் குறித்த மற்றொரு தவறான தகவல் நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்னரே திண்ணைத்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர் என்பதாகும். இதுவும் மாபெரும் தவறாகும். திண்ணைத் தோழர்கள் என்பது வரலாற்று ஆசிரியர்களாலும் ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படுதல் கிப்லா மாற்றம் ஏற்பட்ட பின்னரேயாகும். கிப்லா மாற்றம் நபி(ஸல்) அவர்களின் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்ற (ஹிஜ்ரத்துக்குப்) பின்பே ஏற்பட்டது. திண்ணைத் தோழர்கள் என்பது அதன் பின்பே வரலாற்று ஆசிரியர் களால் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறிருக்க அவர்கள் எப்படி நபி(ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றிருக்க முடியும்?
திண்ணைத் தோழர்கள் பற்றிய மற்றொரு தவறான தகவல் வருமாறு: நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் சென்றிருந்த போது அல்லாஹ் அவர்களுக்கு பல இரகசியங்களைக் கூறினான். அதை மனிதர்களில் யாரிடமும் கூறக் கூடாது என்றும் சொல்லி இருந்தான். இவ்வாறிருக்க நபி(ஸல்) அவர்கள் வானிலிருந்து பூமிக்கு வந்த பின், அல்லாஹ் நபி(ஸல்) அவர்களிடம் இரகசியமாகத் தெரிவித்திருந்தவற்றை திண்ணைத் தோழர்கள் தங்களுக்கிடையே பேசிக்கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நீ என்னிடம் கூறிய இரகசியத்தை நான் யாரிடமும் கூறவில்லையே. இவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டார்களாம். அதற்கு அல்லாஹ், அங்கே எனக்கும் உங்களுக்கும் இடையே அப்போது திண்ணைத் தோழர்கள் இருந்தார்கள்’ என்று கூறியதாக சிலர் தவறான தகவல் பரப்புகின்றனர். இது அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். இவ்வாறு நம்புபவர் நபி(ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் கூறிய குற்றத்திற்கு ஆளாகி நரகம் செல்வார்.
மிஃராஜ் நடந்தது மக்காவில், நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்வதற்கு முன்பு நடந்தது. திண்ணைத் தோழர்கள் என்ற பெயரே நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்பு தான் ஏற்பட்டது என்பதை மேலே குறிப் பிட்டுள்ளோம். இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் இந்த மேற்கண்ட தவறான தகவல்கள் குறித்து தமது ஃபதாவா இப்னு தைமிய்யா எனும் நூலில் விரிவாக எழுதியுள்ளார்கள்.
திண்ணைத் தோழர்கள் குறித்த மற்றொரு தவறான கண்ணோட்டம் வருமாறு: அவர்களுக்கு மக்களிடம் யாசிப்பது தவிர வேறு தொழில் ஏதும் கிடையாது என்று திண்ணைத் தோழர்கள் குறித்துக் கூறுகின்றனர் சிலர். ஆனால் இது தவறான செய்தியாகும். திருக்குர்ஆனையும் அவர்களுள் சிலரது வாழ்வையும், நபிமொழிகளையும் நன்கு புரிந்தோர் அவர்கள் குறித்து இவ்வாறு கூறமாட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: பூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு, அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக்கொள்கிறான். அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள். (இத்தகையோருக்காக) நல்லதிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான். (அல்குர்ஆன் 2:273)
இந்த வசனம், அல்லாஹ்வுக்காகவும், அவனது தூதருக்காகவும், தங்களது மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறிய முஹாஜிர் (மக்கா முஸ்லிம்)களைக் குறித்து அருளப்பட்டதாகும். இவர்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளைப் பெற்றிருக்கவில்லை. வாழ்வாதாரத் தேவைகளை ஈட்டுவதற்காகப் பயணம் மேற்கொள்ளவும் இயலாதவர்கள்.
அவர்கள் யாசிக்கும் தகுதி பெற்றிருந்தும் கூட தன்னடக்கத்தோடு நடந்து கொள்வார்கள். நடை, உடை, சொல், செயல்களால் செல்வந்தர்களைப் போன்று தன்னடக்கத்துடன் நடந்து கொள்வதால் அவர்களைக் காணுவோர் அவர்கள் பெரும் செல்வந்தர்கள் என எண்ணிவிடுவர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஒரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன், ஏழை யாரெனில் அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான், நீங்கள் விரும்பினால், ”அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்” எனும் (2:273வது) இறை வசனத்தை ஓதிக்கொள். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி 4539, முஸ்லிம் 1880.)
‘முஸைனா’ குடும்பத்தைச் சேர்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார்: என்தாய் என்னிடம், ”மக்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (உதவி) பெறுவது போன்று நீயும் அவர்களிடம் கேட்க வேண்டியது தானே” என்று கூறினார். அவ்வாறே நானும் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்கச் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (மக்களுக்கு) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அந்த சொற்பொழிவில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது: யார் (பிறரிடம் யாசிக்காமல்) தன்மானத்துடன் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானம் உள்ளவராகவே ஆக்குவான். யார் (பிறரிடம்) தேவையற்றவராக இருக்கிறாரோ அவரை அல்லாஹ் (பிறரிடம்) தேவையற்றவராகவே ஆக்குவான். ஐந்து ஊக்கியா அளவு உணவுப் பொருளைப் பெற்றவர் மக்களிடம் யாசித்தால் அவர் மக்களிடம் வற்புறுத்தி யாசித்தவர் போன்று ஆகி விடுகிறார்.
இதைக் கேட்ட நான் என் மனத்திற்குள், ஐந்து ஊக்கியா அளவை விட அதிக மதிப்புள்ள ஒட்டகம் ஒன்று நம்மிடம் உள்ளதே! நம் அடிமையிடமும் ஐந்து ஊக்கியா அளவு மதிப்பை விட அதிக மதிப்புள்ள ஒட்டகம் ஒன்று உள்ளதே! என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்காமலேயே திரும்பி விட்டேன். (நூல் : முஸ்னது அஹ்மத் 16601) (ஓர் ஊக்கியா என்பது இன்றைய 126.8 கிராம் மதிப்புள்ள வெள்ளியாகும். 5 ஊக்கியா 634 கிராம் வெள்ளி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...