12/26/2014

பெருந்தன்மை


பெருந்தன்மையாளர் தனது மார்க்கக் கட்டளைகளை ஏற்று நடக்கும் உண்மை முஸ்லிம், மனிதர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். எனெனில் இம்மை மறுமையின் நலன்களைக் கொண்டு வருவதில் பெருந்தன்மைக்கு நிகரான பண்பு வேறில்லை. பெருந்தன்மையான, மென்மையான நடத்தை மனிதமனங்களை மிக அழமாக உடுருவிச் செல்லும் என்பது நபி (ஸல்) அவர்களின் போதனையாகும். இப்பண்புகளின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும், மன்னிப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “விற்கும் போதும், வாங்கும்போதும், கடன் வசூலிக்கும்போதும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” (ஸஹீஹுல் புகாரி)
அபூ மஸ்வூத் அல் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் எந்த நன்மையும் இல்லை. எனினும் அவர் மனிதர்களிடம் பழகும் ஒரு செல்வந்தராக இருந்தார். வறியவர் களிடமிருந்து வரவேண்டிய கடன்களை ரத்து செய்து விடுமாறு தனது அடிமைகளுக்கு உத்தரவிடுபவராக இருந்தார். அல்லாஹ்ு தஆலா அவ்வாறு மன்னிப்பதற்கு அவரைவிட நானே மிகத் தகுதியானவன். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
இந்தப் பண்பு மனிதனின் நற்செயல்களை நிறுத்துப் பார்க்கும் தராசில் எவ்வளவு கனமானது! மறுமையின் மிகச் சிரமமான நேரத்தில் இந்த நற்பண்பு மனிதனுக்கு எவ்வளவு அவசியமானது!
மலர்ந்த முகமுடையவர் மென்மையாக, தாராளத்தன்மையுடன் நடந்து கொள்ளும் முஸ்லிம் மக்களிடையே மலர்ந்த முகத்துடன் பழகவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நற்செயல்களில் எதையும் அற்பமாகக் கருதாதே. அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.” (ஸஹீஹ் முஸ்லிம்)
பிரபல ஸஹாபியான ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு என்னை அவர்கள் தடுத்ததில்லை. மேலும் அவர்கள் புன்னகை செய்யாமல் என்னைப் பார்த்ததே இல்லை.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
எந்தச் சமூகம் பெருந்தன்மையையும் நேசத்தையும், மலர்ந்த முகத்தையும் வலியுறுத்துகிறதோ அதுதான் உயர்ந்த, உறுதியான, பரஸ்பர அன்பு கொண்ட மனித சமுதாயமாகத் திகழும். அதில் மனிதர் கெªரவிக்கப்படுவார். உயர் பண்புகள் மதிக்கப்படும். மனிதநேயம் உறுதி அடையும். அதுதான் உறுதியான இஸ்லாமிய சமூக அமைப்பாகும். அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சமூகத்திற்கும், வன்னெஞ்சமுள்ள உலகாதாயத்தையே நோக்கமாகக் கொண்ட சமூகத்திற்குமிடையே மிகப் பெரிய இடைவெளியை நாம் காண்கிறோம். அச்சமூகத்தில் வாழ்பவர் அண்டை வீட்டாரையோ உறவினரையோ இலட்சியம் செய்வதில்லை. நெருங்கிய நண்பரையும் புன்னகையுடன் வரவேற்காமல் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் பொருளைத் தேடி ஒடுவதே வாழ்வின் இலட்சியம் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்.
நகைச்சுவையாளர் பற்றுள்ள முஸ்லிம் சக மனிதர்களிடம் நேச உணர்வுடனும், மென்மையான நகைச்சுவையுடனும் நடந்துகொள்ள வேண்டும். அப்பண்புகள் கடுமையோ வன்மையோ இல்லாமல் பிறரை பாதிக்காத வகையில் முகமலர்ச்சியுடன் அமைய வேண்டும். அந்த நகைச்சுவை உண்மையின் வட்டத்தைத் தாண்டி விடாமல் இஸ்லாம் வகுத்த உண்மையின் எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் நகைச்சுவை உணர்வு கொண்டிருந்தார்கள். திருத்தூதரிடம் அந்தப் பண்பைக் கண்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்துடன், “இறைத்தூதரே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக நடந்து கொள்கிறீர்களே!” என வினவினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வெறெதனையும் கூற மாட்டேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நகைச்சுவை இயல்பைப் பெற்றிருந்தார்கள். ஆஆனால் விளையாட்டாகக் கூட அதில் பொய்யைக் கலந்துவிடாமல் உண்மையையே கூறி வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டில் நபித்தோழர்களும் அந்த இயல்பைக் கொண்டிருந்தார்கள்.
இது குறித்து ஹதீஸ் நூல்களிலும், நபி (ஸல்) அவர்களின் வரலாற்று நூல்களிலும் பல்வேறு நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் தமது தோழரின் மகனான “அபூ உமைர்’ என்ற சிறுவரிடம் விளையாட்டாக நடந்து கொண்டு பரிகாசம் செய்திருக்கிறார்கள். அந்தச் சிறுவர் குருவி ஒன்றை வளர்த்து வந்தார். அது ஒரு நாள் இறந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரைக் கவலை தோய்ந்த முகத்துடன் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “அபூ உமைரே! உன்னைக் கவலையானவராகக் காண்கிறேனே?” என்றார்கள். அங்கிருந்தோர், “அவர் விளையாடிக் கொண்டிருந்த குருவி இறந்து விட்டது அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அதிலிருந்து அவரைக் காணும் போதெல்லாம் நகைச்சுவையாக, “அபூ உமைரே! உமது நுஹைர் (குட்டிக் குருவி) என்னவாயிற்று?” என்று கேட்பார்கள். (ஹ்யாத்துஸ் ஸஹ்ாபா)
ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் பயணிப்பதற்கு ஒரு ஒட்டகம் தாருங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கேலியாக, “நான் உமக்கு ஒரு பெண் ஒட்டகையின் குட்டியைத் தருகிறேன்” என்று கூறினார்கள். அம்மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! குட்டியை வைத்து நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நீர் கேட்கும் ஒட்டகமும் ஒரு பெண் ஒட்டகத்தின் குட்டிதானே…” என்று கூறினார்கள். (அல் அதபுல் முஓப்ரத்)
அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாஹிர் என்ற கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு தனது கிராமத்திலிருந்து அன்பளிப்புகளை எடுத்து வருவார். அவர் திரும்பும்போது நபி (ஸல்) அவர்களும் அவருக்கென பிரயாண தேவைகளைத் தயார் செய்து தருவார்கள். நபி (ஸல்) அவர்கள், ஜாஹிர் நமக்கு கிராமத்துத் தோழர்; நாம் அவருக்கு பட்டணத்துத் தோழர்கள் என்றார்கள். அவரை மிகவும் நேசிப்பார்கள். அவர் அம்மை நோயால் முகம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தனது பொருள்களை விற்றுக்கொண்டிருந்த பொழுது நபி (ஸல்) அவர்கள் பின்னால் வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அவரால் யாரென்று திரும்பிப்பார்க்க முடியவில்லை. அவர், “யாரது? என்னை விடுங்கள்” என்று கூறிவிட்டு, திரும்பிப் பார்த்தபொழுது நபி (ஸல்) அவர்கள் என அறிந்து கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடமிருந்து விலகாமல் அவர்களது நெஞ்சுடன் தனது முதுகைச் சேர்த்துக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், “இந்த அடிமையை வாங்கிக் கொள்பவர் யார்?” என்று கூறத் தொடங்கினார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! விற்பதாக இருந்தால் என்னை மிகவும் விலைமதிப்பு குறைந்தவனாகக் கருதுகிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள், “என்றாலும் நீர் அல்லாஹ்விடம் குறைந்த மதிப்புடையவர் அல்லர்” என்றோ, “எனினும் அல்லாஹ்விடம் நீர் மிகுந்த மதிப்புடையவர்” என்றோ கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
ஒரு வயோதிகப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் சுவனம் செல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் கேலியாக, “இன்னாரின் தாயே! கிழவிகள் சுவனம் புகமாட்டார்கள்” என்றார்கள். அம்மூதாட்டி அழுதவளாக திரும்பிச் சென்றாள். நபி (ஸல்) அவர்கள், “அவள் கிழவியாக இருக்கும் நிலையில் சுவனம் செல்லமாட்டாள் என்பதை அவளிடம் தெரிவித்து விடுங்கள்!” என்று கூறினார்கள். பின்பு பின்வரும் இறைவசனத்தை ஒதிக் காட்டினார்கள்: “நிச்சயமாக நாம் அவர்களைப் புதிதாகவே படைத்திருக்கின்றோம். இன்னும் நாம் அவர்களைக் கன்னியர்களாகவே ஆக்கியிருக்கின்றோம்’ (அல்குர்அன் 56:35,36). (ஸன்னனுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் எளிமையாகவும், நகைச்சுவைப் பண்புடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு எராளமான சான்றுகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றை இமாம் அஹ்மத் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றிருந்தேன். அப்போது நான் உடல் பெருக்காத மெலிந்த பெண்ணாக இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் “முன்னே சென்றுவிடுங்கள்” என்று கூறிவிட்டு, பின்பு என்னிடம் “வா! நாம் ஒட்டப் பந்தயம் வைத்துக் கொள்வோம்” என்றார்கள். அவ்வாறு நாங்கள் ஒடினோம். நபி (ஸல்) அவர்களை நான் முந்திவிட்டேன். அவர்கள் அமைதியாக இருந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சியை நான் மறந்துவிட்டேன். பின்பு நான் உடல் பருத்துவிட்டேன். நபி (ஸல்) அவர்களுடன் இன்னுமொரு பயணத்தில் நானும் சென்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் “முன்னே சென்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு என்னிடம் “வா நாம் ஒடுவோம்” என்றார்கள். நாங்கள் ஒடினோம். ஆனால் அவர்கள் என்னை முந்திவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சிரித்தவர்களாக, “அதற்கு இது (சமமாகி விட்டது)” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
இதனால்தான் நபித்தோழர்கள் இவ்வாறு கேலி செய்வதை தவறாகக் கருதவில்லை. ஏனெனில் அவர்களது வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் கேலி செய்திருக்கிறார்கள். இது முந்திய இஸ்லாமிய சமூகத்தின் உயர்ந்த பண்பையும், சிறந்த நகைச்சுவை உணர்வையும் எடுத்துக்காட்டுகிறது, இன்னும் அவர்களிடத்தில் கடுகடுத்த, இறுக்கமான தன்மை காணப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
“நபித்தோழர்கள் ஒருவருக்கொருவர் தர்பூசணிப் பழத்தைத் தூக்கி எறிந்து விளையாடினார்கள். ஆனால் எதார்த்தம் என்று வந்துவிட்டால் அவர்கள் வீரர்களாகி விடுவார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
இஸ்லாம் அனுமதிக்கும் இந்த நகைச்சுவை உணர்வு நேர்மையானதும் நடுநிலையானதுமாகும். இதைச் செய்பவர் சத்தியத்திலிருந்து பிறழமாட்டார். அது அவரது வீரத்தின் ஜுவாலையை அணைத்து விடாது. அது மனங்களை விசாலப்படுத்தி இதயங்களை உற்சாகப் படுத்துவதாக இருக்கும்.
நபி (ஸல்) அவர்களுக்கு சிரிப்பை எற்படுத்திய ஒரு நிகழ்ச்சியும் வரலாற்றில் நடந்துள்ளது. உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்கர் (ரழி) அவர்கள் புஸ்ரா நகரத்திற்கு வியாபார நிமித்தமாகச் சென்றார்கள். பத்ருப் போரில் பங்கேற்ற “நுஅய்மான்’ மற்றும் “ஸுவைபித் இப்னு ஹர்மலா’ (ரழி) அவர்களையும் உடன் அழைத்துச் சென்றார்கள். அதில் ஸுவைபித் (ரழி) பிரயாண உணவுக்கு பொறுப்பாளராக இருந்தார். அவரிடம் நுஅய்மான் (ரழி) “உணவு கொடுங்கள்” என்றார். அவர் “அபூபக்கர் (ரழி) வரட்டும்” என்று மறுத்துவிட்டார். நுஅய்மான் (ரழி) நகைச்சுவையாளராகவும், கிண்டல் செய்பவராகவும் இருந்தார். அவர் ஒட்டகங்களை இழுத்து வந்து கொண்டிருந்த சில மனிதர்களிடம் சென்று, “என்னிடம் சுறுசுறுப்பான அரபு அடிமை ஒருவர் இருக்கிறார். அவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்கிறீர்களா?” என்றார். அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். நுஅய்மான் (ரழி) கூறினார் “அந்த அடிமை நாவன்மை உடையவர். அவர் தன்னை சுதந்திரமானவன் எனக் கூறலாம். நீங்கள் அதை நம்பி அவரை வாங்க மறுப்பதாக இருந்தால் இப்போதே என்னை விட்டுவிடுங்கள். அவர் விஷயத்தில் எனக்கு இடையூறு செய்யாதீர்கள்” என்றார். அம்மனிதர்கள் இல்லை, அவரை வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். ஸுவைபித் (ரழி) அவர்களை அம்மனிதர்கள் 10 பெண் ஒட்டைகைகளைக் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.
நுஅய்மான் (ரழி) 10 ஒட்டகைகளையும் அம்மனிதர்களையும் அழைத்து வந்து “இதோ இவர்தான் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றார். ஸுவைபித் (ரழி) “இவர் பொய்யர், நான் சுதந்திரமனிதன்; அடிமையில்லை” என்றார். வந்தவர்கள் “உம்மைப் பற்றிய எல்லா விஷயத்தையும் இவர் (நுஅய்மான்) கூறிவிட்டார்” என்று கூறி அவரது கழுத்தில் கயிற்றைப் பிணைத்து அழைத்துச் சென்று விட்டார்கள். அப்போது அபூபக்கர் ஸித்தீக் (ரழி) வந்தார்கள். அவர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறப்பட்டது. அவர்கள் தமது தோழருடன் சென்று அவர்களது ஒட்டகைகளைக் கொடுத்துவிட்டு அவரை மீட்டு வந்தார்கள். பிறகு இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. சுற்றிலும் தோழர்கள் அமர்ந்திருந்த நிலையில் தோழர்களும் நபி (ஸல்) அவர்களும் ஒரு வருடமாக இதைப் பேசி சிரித்துக் கொண்டார்கள். (முஸ்னத் அஹ்மத்)
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். மஸ்ஜிதுக்குள் நுழைந்து அதன் முற்றத்தில் தனது ஒட்டகையை அமரச் செய்தார். சில நபித்தோழர்கள் நுஅய்மான் (ரழி) அவர்களிடம் “நாம் இறைச்சி சாப்பிட்டு வெகுநாட்களாகி விட்டது. மிகவும் ஆவலாக இருக்கிறது. நீர் இதை அறுத்தால் நாம் சாப்பிடலாம், இறுதியில் நபி (ஸல்) அவர்கள் அதற்கான விலையை பொறுப்பேற்றுக் கொள்வார்கள்” என்று கூறினார்கள். அப்போது நுஅய்மான் (ரழி) அதை அறுத்துவிட்டார்.
பின்பு அந்தக் கிராமவாசி தனது ஒட்டகையைப் பார்த்துவிட்டு “முஹ்ம்மதே! அறுத்து விட்டார்களே!” என்று கூச்சலிட்டார். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து “இதைச் செய்தது யார்?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் “நுஅய்மான்” என்று கூறினார்கள். அவர் எங்கே இருக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் தேடிச் சென்றபோது அவர் ளுபாஆ பின்த் ஜுபைர் (ரழி) அவர்களின் வீட்டில் ஒரு குழியினுள் ஒளிந்துக் கொண்டார். அவர் பேரீச்ச மட்டைகளாலும் கீற்றுகளாலும் தன்னை மறைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சப்தமாக “அல்லாஹ்வின் தூதரே! நான் நுஅய்மானைப் பார்க்கவில்லை” என்று கூறியவராக நுஅய்மானின் பக்கம் சைக்கினை செய்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை வெளியேறி வரச் செய்தார்கள். அவர்மீது கிடந்த கட்டைகள் முகத்தில் அழுத்தியதால் அவரது முகம் நிறம்மாறி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவரிடம் “உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியவர் யார்?” என்று கேட்டார்கள். நுஅய்மான் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என்னைப்பற்றி உங்களிடம் கூறினார்களே அவர்கள்தான் என்னைத் தூண்டினார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரது முகத்தை தடவிக் கொடுத்து சிரித்தார்கள். பின்பு அந்த ஒட்டகைக்கான விலையைக் கொடுத்தனுப்பினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)
இவைகளே இஸ்லாம் தனது உறுப்பினர்களிடம் விரும்பும் கேலியும், நகைச்சுவையாகும். இதன்மூலம் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது. இத்தன்மை உடையவர் நேசிக்கும் பண்பைப் பெறுகிறார். மனம் சஞ்சலமடைவதிலிருந்து விடுதலை பெறுகிறார். அல்லாஹ்வின் பாதையில் ஏகத்துவ அழைப்புப்பணி செய்வோருக்கு இது மிக அவசியமான பண்பாகும்.

பெருமானாரின் பொன்மொழிகள்


நபியவர்கள் கூறுகிறார்கள்:- நயவஞ்சகர்களுக்கு மிகச் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் தான். அவற்றின் நன்மைகளை அறிந்திருந்தால் அவர்கள் தவழ்ந்தாவது வந்திருப்பார்கள். அறிவிப்பவர்: அபுஹூரைரா(ர்லி) நூல் : சஹீஹ் முஸ்லிம் (1041) அக்காலத்தில், விளக்கொளி இல்லாத இருட்டு வேளையில் தொழப்படும் இஷா மற்றும் ஃபஜ்ர் இரண்டுக்கும்… யார் யார் பள்ளிக்கு ஜமாஅத் தொழ வந்தார்கள் என்று தெளிவாக தெரியாது..! மற்ற… லுஹர் & அசர் போன்ற பகலில் தொழப்படும் தொழுகைக்கும், மற்றும் ஓரளவு வெளிச்சத்தில் ஆரம்பிக்கப்படும் மஃரிபுக்கும் ஜமாஅத்துக்கு பள்ளிக்கு வருபவர்களை நன்கு தெரிந்து கொள்ள முடியும்..!

12/02/2014

11/21/2014


அரபி மொழி கற்போம்.



அன்பான சகோதரர்களே.. இறைமறையாம் குர் ஆனை கற்றுக்கொள்வதற்காக அடிப்படையில் இருந்து தஜ்வீத் முறையில் பாடங்கள் நடத்துவதற்காக அரபி பாடம் வகுப்புகள் இந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்பு வாரா வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் காலையில் நடைபெறும். சகோதரர்கள் அனைவரும் பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்லாமிய சொற்பொழிவு


நமது மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் காலமும் நேரமும் என்ற தலைப்பில் சகோதரர் அவர்கள் சிறப்பான ஒரு சொற்பொழிவை தந்தார். இதில் நல்ல பல கருத்துக்கள் அண்ணலாரின் பொன்மொழிகள் அழகிய தமிழில் நல்ல ஒரு அமர்வை தந்தது. ஏராளனமான சகோதரர்கள் வந்து பயன்பெற்றனர். எல்லா புகழும் இறைவனுக்கே!


சில பதிவுகள்


ஒரு ஆலோசனை அமர்வுக்குப்பின் இரவு உணவு சகோதரர்களுடன்

10/27/2014

முஹர்ரம் மாதம் நோன்பு


அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்:
"ரமளானுக்குப்பின் நோன்புகளில் மிகச்சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதம் நோன்புதான். கடமையான தொழுகைக்குப்பின் தொழுகையில் மிகச்சிறந்தது, இரவுத் தொழுகை(தஹஜ்ஜத்) தான்" என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
அபூ கதாத (ரழி) அறிவிக்கின்றார்கள்:
ஆஷுரா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் "அந் நாளில் நோன்பு வைப்பது, அதற்கு முன் சென்ற வருடத்தின் பாவங்களை அழிக்கிறது" என்று பதில் கூறினார்கள். (முஸ்லிம்)

10/24/2014

இஸ்லாத்தில் தொழுகையின் நிலை


(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31)
“என்னைத் தொழக் கண்டவாரே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரி, முஸ்லிம்.

மழைக்காலங்களில்


இறைவனின் அருட்கொடை

யா அல்லாஹ் இந்த மழையை பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக!

இஸ்லாமிய புத்தாண்டு


இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான்.
அதுவே உலகம் அழியும்வரை உலக மக்கள் அனைவருக்கும் இறுதிவேதம் என்று பிரகடனப்படுத்தினான். எவற்றை இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இறக்கி கட்டளையிட்டானோ அதாவது நானே உங்களைப் படைத்த இறைவன் எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள் என்னை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். என்னிடமே உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கேளுங்கள் என்ற அதே போதனையைத்தான் வஹீயாக அறிவித்தான். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்க்கும் புரோகிதரர்கள் வழமைப்போல் என்ன செய்தார்கள் தெரியுமா?
இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் செய்த போதனைக்கு நேர்முரணாக அவர்களையும் இன்னும் பல நல்லடியாளர்களையும் சிலைகளாக வடித்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டிய கஃபத்துல்லாஹ்வில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். சிலை வணக்கம்தான் அசலான வணக்க வழிபாடு என்றிருந்த அன்றைய அரபு மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) போதித்த ‘ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் அதுவே வெற்றியைத்தரும் என்ற போதனை அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியது. தங்களின் மூதாதையர்களின் வணக்க வழிபாட்டை கேவலப்படுத்துகிறார், இழிவு படுத்துகிறார் என்று ஆத்திரத்திற்குமேல் ஆத்திரம் கொண்டனர்.
ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற அசலான போதனையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டினார்கள். அதற்குறிய ஒரே வழி இந்தப்போதனை செய்யும் முஹம்மது(ஸல்) அவர்களை கொலை செய்து விடுவதே சரியான தீர்வாகும் என்று, அன்று கஃபதுல்லாஹ்வை தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் முடிவுக்கு வந்தனர். அதற்குறிய எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டனர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது இறுதித் தூதரை அந்த கொலை முயற்ச்சியிலிருந்து காப்பாற்றி அவர்களைக் கொண்டு தனது மார்க்கத்தையும் இறுதி வேதத்தையும் நிறைவு செய்ய நாடிவிட்டான்.
எனவே தனது இறுதி தூதருக்கு தான் பிறந்து வளர்ந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவுக்கு வெளியேறிச் செல்ல உத்தரவு பிறப்பித்தான். அதுமட்டுமல்ல அந்த குரைஷிகளின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து தனது தூதரை அதி அற்புதமாக காப்பாற்றி மதீனா சென்றடயச் செய்தான். அந்த அற்புத நிகழ்ச்சியே “ஹிஜ்ரத்” என்று சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது. அந்த நிகழ்சியை அடிப்படையாக வைத்தே ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டு வறுகிறது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கமும் நமக்கு அந்த மகத்தான நிகழ்ச்சியை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் ஆஷுரா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு முன்பிலிருந்தே சிறப்புக்குறிய நாளாக இருக்கிறது. அன்றுதான் மூஸா(அலை) அவர்களும் அவர்களது சமூகமும் பிர்அவ்னின் கொடுமைகளிலிருந்து மீட்சி பெற்ற நாளாகும். பிர்அவ்னும் அவனது படைகளும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாளாகும். எனவே மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். அதை வைத்து யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களை பின்பற்றுவதற்கு நாங்களே உரிமை உள்ளவர்கள் என்று கூறி தாமும் அந்த நாளில் நோன்பு நோற்றதுடன் முஸ்லிம்களையும் நோன்பு நோற்க ஏவினர்(புகாரி) ரமழான் நோன்பு கடமையாகும் வரை முஸ்லிம்கள் ஆஷுரா நோன்பை அக்கரையுடன் நோன்பு நோற்று வந்தனர்.
ரமழான் நோன்பு கடமையான பின் விரும்பியவர் ஆஷுரா நோன்பு நோற்கும் நிலை இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு முந்திய வருடம் ஆஷுரா தினத்தில் யூதர்களுக்கு மாறு செய்யும் நோக்கத்துடன் அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால் முஹர்ரம் 9லும் 10லும் நோன்பு நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)
ஆனால் அடுத்த ஆஷுரா தினம் வருவதற்கு முன் அல்லாஹ்வின் நாட்டப்படி அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டார்கள். எனவே முஸ்லிம்கள் இப்போது முஹர்ரம் 9 லும் 10 லும் நோன்பு நோற்பது நபிவழியாகும். அடுத்து நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஹுசைன்(ரழி) அவர்கள் சஹீதாக்கப்பட்டது ஹிஜ்ரி 61 இதே முஹர்ரம் 10 நாள் ஆஷுரா தினமாகும். ஆனால் இதைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் முஹர்ரம் 1 லிருந்து 10 வரை சில சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வதற்கும் மார்க்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை. இந்த முஹர்ரம் 1 லிருந்து 10 வரை கடைபிடிக்கும் அனாச்சாரங்கள் ஷியாக்களும் செய்து வரும் அனாச்சாரங்களேயாகும்.
உண்மையில் ஒவ்வொரு ஹிஜ்ரி ஆண்டும் எவ்வளவு பெரிய மகத்தானதொரு தியாகத்தினை நமக்கு நினைவூட்டுகிறது. சத்தியத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும்போது எத்தனை துன்பங்களை சந்திக்க நேரிட்டாலும் அதற்காக சத்திய பிரச்சாரத்தை துறக்கக்கூடாது; அதுவே இறுதி வெற்றியை ஈட்டித்தரும் என்ற படிப்பினையை முஸ்லிம்கள் இந்த ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில் பெறுவோமாக.

9/30/2014

குர்பானியின் சட்டங்கள்


குர்பானீயின் சட்டத்திட்டங்களை சுருக்கமாக பார்ப்போம்.
குர்பானியின் சட்டங்கள்: ஹஜ்ஜுப் பெருநாளன்று பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே குர்பானி என்று சொல்லப்படுகிறது. நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில் இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான்.
உமது இறைவனுக்காகத் தொழுது மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்குர்ஆன் 108:2 ஹஜ் பெருநாள் தினத்தில் அறுத்துப் பலியிடுவதைவிடச் சிறந்த அமலை ஒருவன் செய்துவிட முடியாது. அந்தப் பிராணியிலிருந்து சிந்துகின்ற இரத்தம் அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்த மதிப்பை பெற்றதாகும். அதனைச் சிறந்த முறையில் அறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா நூல் :திர்மீதி
தானே அறுக்க வேண்டும்: குர்பானி யார் கொடுக்கின்றாறோ, அவர் அறுப்பதற்கு ஆட்களைத் தேடி கொண்டிராமல் தானே அறுப்பது சிறந்ததாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தானே அறுத்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் இரு கொம்புகள் உள்ள வெண்மையும், கறுப்பும் கலந்த இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தனர். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவர்கள் தன் கையால் அறுத்தனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல் :புகாரி எப்படி அறுப்பது என்று தெரியாதவராக இருந்தால் அறுக்கின்றபோது, அந்த இடத்தில் நின்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ஃபாத்திமா (ரலி) அவர்களை அவ்வாறு செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். குர்பானி கொடுக்க எண்ணியவர் செய்யக்கூடாதவை: குர்பானி கொடுக்க வேண்டும் என்று எவர் நாடுகிறாறோ அவர் துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை பத்து நாட்களுக்கு நகங்கள், முடிகளை களையக்கூடாது. உங்களில் யாரேனும் குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து (அறுத்து முடியும்வரை பத்து நாட்களுக்குத்) தன் நகங்களையும் முடிகளையும் களையாதிருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) நூல்:முஸ்லிம்
குர்பானி கொடுக்கும் நேரம்: பெருநாள் தொழுகையும் அதன் பின்பு ஓதப்படுகின்ற இரண்டு குத்பாக்களும் முடிவதற்கு முன்னால் குர்பானி கொடுக்கலாகாது. அதற்கு முன்பே ஒருவன் அறுத்துவிட்டால் அது ஏற்கப்படாது. இன்னொன்றை அவன் அறுத்துப்பலியிட வேண்டும். எவன் தொழுகைக்கு முன்னர் அறுக்கின்றானோ அவன் தனக்காக அறுக்கின்றான். (அது வணக்கமாகாது) எவன் தொழுகையும் இரண்டு குத்பாக்களும் முடிந்த பின் அறுக்கின்றானோ அவனே முழுமையாக வணக்கத்தை நிறைவேற்றியவனாவான். முஸ்லிம்களின் சுன்னத்தையும் அவனே செய்தவனாவான் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். நூல்: புகாரி,முஸ்லிம் நபி (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுதேன். தொழுது முடித்த பின் ஆடு ஒன்று அறுக்கப்பட்டுக்கிடப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ, அந்த இடத்தில் வேறொன்றை (தொழுகைக்குப்பின்) அறுக்க வேண்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுந்துப் இப்னு சுஃப்யான் (ரலி) நூல்கள்: புகாரி,முஸ்லிம்.
குர்பானி பிராணிகள்: ஆடு மாடு ஒட்டகம் ஆகிய மூன்றை மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் இம்மூன்றையும் அரபியில் அன்ஆம் என்று கூறுவர் (சூரதுல் ஹஜ் 22:34) இம்மூன்றைத் தவிர மற்ற எந்தப் பிராணியும் குர்பானிக்கு உரியதன்று. மாடு, ஒட்டகத்தை ஏழு பேர்கள் கூட்டாகக் கொடுக்கலாம் ஹூதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட வருடம் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு மாட்டையும், அதுபோல் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தையும், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் குர்பானி கொடுத்தோம் என்று ஜாபர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் ஒற்றைக் கண் குருடு, வியாதியுடையது, நொண்டி, கிழட்டுப் பருவம் அடைந்தது ஆகிய பிராண்ிகள் குர்பானிக்கு ஏற்றவையல்ல என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், இப்னு ஹிப்பான், நஸயீ,திர்மீதி,இப்னுமாஜா
ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணிகளை, குர்பானி கொடுத்துள்ளதாக அபூராபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை அஹ்மது இமாம் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும்: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்துள்ளனர் என்று அபூ அய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: இப்னுமாஜா,திர்மீதி இந்த ஹதீஸின் அடிப்படையில் தனக்கும்,தன் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டைக் கொடுப்பது போதுமானது. கூலியாகக் கொடுக்கக்கூடாது: நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தபோது அதன் இறைச்சியையும் தோலையும் ஏழைகளுக்குக் கொடுக்கும்படியும் உரித்தவர்களுக்குக் கூலியாக இதில் எதனையும் கொடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டனர் என்று அலி (ரலி) அவர்கள் அறிவித்துள்ளனர். நூல்கள்: புகாரி,முஸ்லிம்
பங்கிடும் முறை: குர்பானி கொடுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள் (உறவினர்கள், ஏழைகளுக்கும்) உண்ண கொடுங்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நாம் அதனை உண்ணுவதும், பிறருக்கு உண்ணக் கொடுப்பதும் சுன்னத்தாகும். இவ்வளவுதான் உண்ண வேண்டும் என்று வரம்பு எதுவும் கிடையாது.அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம்.
இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது: (எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்.அல்குர்ஆன் 22:37 இந்த திருவசனத்தில் அல்லாஹ் குர்பானி கொடுப்பதன் மூலம் இறையச்சத்தை நாடுகிறான் என்பதை விளங்க முடிகிறது. ஆகவே இறையச்சம் என்பது உயிறுள்ளவருக்குத்தான் இருக்கும். இறந்தவர்களுக்கு இருக்காது. மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆதமின் மகன் இறந்து விட்டால் மூன்று விஷயத்தை தவிர மற்ற எல்லாத் தொடர்புகளூம் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை (1) நிரந்தர தர்மம் (2) பயன் தரும் கல்வி (3) தன் பெற்றோருக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

ஹஜ்ஜுப் பெருநாள்


இஸ்லாமிய மாதங்களில், வருடம் இரண்டு நாட்களை நாம் சங்கை பொருந்திய பெருநாட்களாக கொண்டாடி வருகிறோம். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை நோன்புப் பெருநாளாகவும், துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது பிறையினை ஹஜ்ஜுப் பெருநாளாகவும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
ஹஜ்ஜுப் பெருநாள் என்றதுமே நமக்கு இரண்டு நபிமார்களைப் பற்றி நினைவிற்கு வரும். அல்லாஹ்வின் உற்ற தோழர் என்ற கருத்தில் அழைக்கப்படும் “கலீலுல்லாஹ்” என்ற பெயருக்கு சொந்தக்காரரான நபி இபுறாஹீம் (அலை) அவர்களும், அவர்களின் அருமை மகனார் அருந்தவப் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் நம் நினைவில் நிற்கும் அந்த இரண்டு நபிமார்களாவர். அல்லாஹ்வின் அருள்மறையாம் திருகுர்ஆனை கருத்தூன்றி ஆராயும்போது நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய தியாகவாழ்வு பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய அற்புத வரலாறாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும், துன்ப துயரங்களையெல்லாம் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றி பெற்ற வீர வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை சுருக்கமாக பார்ப்போம்.

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் இளம் பிராயத்திலேயே ஓரிறை கொள்கையான இஸ்லாத்தை எடுத்து சொன்னதின் காரணத்தினால், அவருடைய தந்தையாராலேயே வீட்டைவிட்டும் விரட்டப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 19:46 கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னன் நம்ரூது என்பவனை எதிர்ததினால் நெருப்பு குண்டத்தில் எறியப்பட்ட சோதனை.அல்குர்ஆன் 21:68,69
திருமணமாகி பல்லாண்டு காலம் பிள்ளைப்பேறு இன்றி பரிதவித்த சோதனை. அல்குர்ஆன் 37:100,101
முதிர்ந்த பருவத்தில் உள்ள இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு நபி இஸ்மாயீல் (அலை) பிறக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பின்பு அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் தம் மனைவி ஹாஜிரா அம்மையாரையும், மகன் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தகிக்கும் சுடுமணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிந்த சோதனை. புகார,ி அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தம் அருமை மைந்தரான நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்த சோதனை. அல்குர்ஆன் 37:02,03
ஆக வாழ்நாளில் பல அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்தும்கூட மனம் தளராமல் எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்தனை செய்து பொறுமையுடன் துன்பங்களை சகித்து கொண்டிருந்ததினால் சோதனைகளெல்லாம் சாதனையாக மாறிய சாகஸ வரலாற்றை குர்ஆனில் காணலாம். கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்பாக நடந்த சில நிகழ்ச்சிகளை குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. அந்த பாலைவன சுடுமணலில் அன்னை ஹாஜிரா அவர்கள் ஒவ்வொரு மலைக்குன்றின் அடிவாரத்தில் தண்ணீரை தேடி ஓடிய அந்த நிகழ்ச்சியை நாம் நினைவு படுத்தி கொள்வதற்காகத்தான் இப்போது புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் சபா, மர்வா என்ற மலைக்குன்றுகளிடையே ஓடிவருவதை அல்லாஹ் கடமையாக்கி வைத்திருக்கிறான். அன்றைய தினம் அன்னை ஹாஜிராவும் அவர்தம் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் தாகத்தை தீர்த்து கொள்ள உதவிய அந்த தண்ணீர் தடாகம் தான் இன்றளவும் ஜம் ஜம் என்ற பெயரில் ஹாஜிகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீராக விளங்குகிறது.
நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் புதல்வரை அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் ஒரு ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பகரமாக குர்பானீ கொடுக்க செய்ததுடன், இனி மறுமை நாள் வரை வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானீ கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக நமது உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்களை நபி இபுறாஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர் ஆன் 3:95
நபி இபுறாஹீம் (அலை) அவர்களது செயலை பின்வரும் காலத்தவரும் (மறுமை நாள் வரை) நினைவு கூறுவதை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 37:108
அன்பு சகோதர சகோதரிகளே, ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தின் உயரிய காரணங்களையும் தத்துவார்த்தங்களையும் ஓரளவு சுருக்கமாக புரிந்து கொண்டோம். இன்னும் அதிக விளக்கத்திற்கு திருக்குர் ஆனையும் ஹதீஸ் நூல்களையும் பார்வையிடும்படி கேட்டு கொள்கிறோம்.
நபி இபுறாஹீம் (அலை) அவர்களது வாழ்வில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏற்பட்ட துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் நமக்கு ஒரு மகத்தான படிப்பினை இருக்கிறது. அதுதான் எத்தகைய கடும் சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ்வை பிரார்த்தித்து பொறுமையுடன் ஐவேளை தொழுகையையும் மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்பதே அந்த படிப்பினையாகும்.
ஹஜ்ஜுப்பெருநாள் அன்று பள்ளிவாசலுக்கு சென்று பெருநாள் தொழுகை முடித்ததும் கடமை முடிந்தது என்று நினைக்காமல் ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகளை குறிப்பாக, நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கை பாதையினை நெஞ்சில் நிறுத்தி உறவினர், நண்பர்களிடையே ஒருவருக்கொருவர் உபதேசம் செய்ய வேண்டும். வசதிமிக்கவர்கள் குர்பானீ கொடுக்க வேண்டும். இதை பற்றி விரிவாக குர்பானீ சட்டத்திட்டத்தில் காணலாம். மேலும் ஹஜ்ஜு மாதம்பிறை 9 அதாவது அரஃபா தினம் என்றழைக்கப்ப்டும் நாளில் சுன்னத்தான நோன்பு நோற்கவேண்டும். அதற்கு அரஃபா நோன்பு என்று நபி (ஸல்) அவர்கள் பெயர் சூட்டுகின்றார்கள். உடல் ஆரோக்கியம் நிறைந்த ஆண், பெண் இருபாலாரும் சுன்னத்தான இந்த நோன்பை நோற்பதற்கு முயற்சி செய்யவேண்டும். அரஃபா தினத்தன்று நோற்க வேண்டிய நோன்பு பற்றி கீழ்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது முந்தைய மற்றும் அடுத்த இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவுது, திர்மீதி, இப்னுமாஜா அறிவிப்பவர்:அபூகதாதா (ரலி)
(இந்த நோன்பு ஹஜ்ஜு கடமையாற்றும் ஹாஜிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க).

9/03/2014

பெண் குழந்தைகள்




அன்றும் இன்றைய நவீன உலகிலும் பெற்றோர் ஆண் குழந்தைகளை விரும்புவது போல் அதிகமாக பெண் பிள்ளைகளை விரும்பவில்லை. வேண்டா வெறுப்புட னேயே பெண் குழந்தை பிறந்த செய்தியை ஏற்கின்றனர். ஆனால் இஸ்லாம் பெண்களின் மூலம் பெற்றோர் அடையும் நன்மைகளை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தம் இரு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவ மெய்தும்வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப் படுத்துகிறாரோ அவர் மறுமை நாளில் வருவார்; அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக் கூறி நபி(ஸல்) தங்கள் விரல்களுக்கு மத்தியில் இணைத்துக் காண்பித்தார்கள். (நூல் :முஸ்லிம்)

அன்னை ஆயிஷா(ரழி) கூறினார்கள்:- என்னிடம் தன் இரு பெண் பிள்ளைகளைச் சுமந்தவளாக ஓர் ஏழைப் பெண்மணி வந்தாள். அவளுக்கு நான் மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். அதனை அப்பெண் தன் இரு பெண் பிள்ளைகளுக்கும் ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு, தான் உண்பதற்காக ஒரு பழத்தை தமது வாயின் பக்கம் உயர்த்தினாள். அதற்குள்ளாக அவ்விரு பெண் பிள்ளைகளும் அப்பழத்தையும் உண்ணக் கேட்டனர். உடனே அப்பெண், தான் உண்ண விரும்பிய அப்பழத்தை இரண்டாகப் பிளந்து அவ்விரு பெண்பிள்ளைகளுக்கும் கொடுத்தாள். அப்பெண்ணின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் இதனை நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், அப் பெண்ணுக்கு இதற்காக சுவனத்தை அல்லாஹ் அவசியமாக்கிவிட்டான்;; நரகை விட்டு அப்பெண்ணை விடுவித்து விட்டான் எனக் கூறினார்கள். (நூல் :- முஸ்லிம் )

அன்று அரேபியாவில் சில பிரிவினர் பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் புதைத்தனர். அதனை இஸ்லாம் முற்றாகத் தடுத்தது. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்;; அவர்களுக்கும் உங்க ளுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கிறோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (அல்குர்ஆன்;:-17 :31)

இன்றும் பல நாடுகளில் பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுவதை நாம் அறிகின்றோம். ஆனால் 1434 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அல்குர்ஆனை அருளியதன் மூலம் இஸ்லாமிய உலகம் இப்பெண் குழந்தைகளின் கொலையை முற்றாக தடுத்து விட்டது. இவ்வாறு பெண்களுக்கு கண்ணியம் வழங்கிய மார்க்கம் அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமான இஸ்லாம் மார்க்கமாகும். இன்று பெண் உரிமை வேண்டும் என ஆபாசத்திற்கும், பெண்களை மானபங்கப்படுத்துவதற்கும் சில ஷைத்தானிய கொள்கைவாதிகள் சில சிலை வணங்கிகளுடன் சேர்ந்து முயற்சித்து வருவதைக் காண்கின்றோம். ஆனால் அவ்வகையான நாடுகளில் எல்லாம் பெண் சிசுக் கொலைகளும், பாலியல் ரீதியான பெண்கள் துன்புறுத்தல்களும் கோடிக்கணக்கில் இடம்பெறுவதைக் காண்கிறோம். இவற்றிலிருந்து நீங்கி பெண்கள் கண்ணியம் அடைவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுவதே ஒரே வழியாகும். இஸ்லாம் பெண்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- பெண்களுக்கு நலவை நாடுங்கள்! நிச்சயமாக பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். விலா எலும்புகளின் மேற்பகுதி, மற்றவைகளைவிட மிக வளைவாக உள்ளது. அந்த எலும்பை நேராக்க நீர் சென்றால் அதனை நீர் முறித்து விடுவீர்! அதனை அப்படியே விட்டு விடுவீரானால் அது வளைவாகவே இருக்கும். (ஆகவே நடுநிலைமையைக் கடைப்பிடியுங்கள்.) (நூல்:புகாரி,முஸ்லிம்.)

அன்று நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் பெண்களின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதற்காக முன் வைத்த சத்தியக் கருத்துகளை, கட்டளைகளை அவதானியுங்கள்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:- ஒரு முஃமினான ஆண்(கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம். அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் அவளிடமுள்ள வேறொரு (நற்)குணத்தைக் கொண்டு பொருந்திக் கொள்வானாக! (நூல்;: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர், அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! உங்களின் மனைவியரிடம் சிறந்தவர்களே, உங்களில் சிறந்தவர்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி நீ செலவ ழிக்கும் ஒவ்வொரு செலவுக்கும் உனக்கு நற்கூலி கொடுக்கப்படாமல் இல்லை; எந்த அளவிற்கென்றால், உன் மனைவியின் வாயில் நீ ஊட்டும் உணவுக் கவளம் வரை. (நூல் :- புகாரி , முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- உலகம் (சிறிது காலம்) சுகம் பெறப்படும் ஒரு பொருளாகும். அவ்வாறு சுகம் பெறப்படும் உலகப் பொருள்களிலே மிகச்சிறந்தது, நல்ல ஸாலிஹான மனைவியாவாள்.

இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள்(ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழையாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்;; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன், (யாவற்றையும்) நன்கறிந்தவன். (அல்குர்ஆன்:-24: 32)

ஆண்களையும் பெண்களையும் சமனாக கருதிப் போதனை செய்யும் மார்க்கம் இஸ்லாம்.
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன் :- 33 : 35 )

8/30/2014


அபூகிலாபா கூறியதாவது : நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பதை மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரழி) எங்களுக்குத் தொழுது காட்டினார்கள். இவ்வாறு அவர்கள் செய்து காட்டியது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை. அவர்கள் நின்றார்கள். நன்கு நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். நன்கு ருகூவு செய்தார்கள். பின்னர் தம் தலையை உயர்த்திச் சிறிது நேரம் மவுனமாக நின்றார்கள்.
பின் நமது பெரியார் அபூபுரைத் தொழுவது போலவே மாலிக் பின் அல்ஹுவைரிஸ் தொழுது காட்டினார்கள். இந்த அபூபுரைத் தொழும்போது (இரண்டாம்) ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்திச் சற்று நேரம் உட்கார்ந்து விட்டு (இரண்டாம் ரக்அத்துக்காக) எழக்கூடியவராக இருந்தார் என்று அய்யூப் குறிப்பிடுகிறார். (புகாரி (ர.அ.) : 802)
கள், சாராயம் குடிப்பதிலும், விபச்சாரம் செய்வதிலும், திருடுவதிலும், நீங்கள் என்ன கருத்துக் கொள்கிறீர்கள் என்று நபி(ஸல்) வினவினார்கள். இவற்றிற்கான தண்டனைகள் (பற்றிய வசனங்கள்) அருளப்படுவதற்கு முன்னர், அல்லாஹ்வும் அவனது தூதரும் தாம் மிக அறிந்தவர்கள் என்று மக்கள் கூறினர். அவை தீய செயல்களாகும். அன்றி அவற்றிற்குத் தண்டனைகளும் உண்டு. மேலும் எவன் தன் தொழுகையைத் திருடுகின்றானோ அவனே மிகத் தீய திருடனாவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். யாரசூலல்லாஹ் அவன் எவ்விதம் தன் தொழுகையைத் திருடுகிறான் என்று மக்கள் கேட்டனர். அதன் ருகூவுகளையும், ஸுஜூதுகளையும் அவன் பூரணமாகச் செய்ய மாட்டான் என்று நபி(ஸல்) கூறினர். நுஹ்மான் இப்னு முர்ரா, முஅத்தா, அல்ஹதீஃத் : 2852

ருகூவும் ஸுஜூதும்


அபூஹுரைரா(ரழி) கூறியதாவது : நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும்போது ஸமிஅல்லாஹுலி மன்ஹமிதா என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா லகல் ஹம்து மற்றோர் அறிவிப்பில் வலகல் ஹம்து என்பார்கள். பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தா செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரகாஅத்துகளிலும் செய்வார்கள். இரண்டாம் ரகாஅத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறுவார்கள். (புகாரி (ர.அ.) : 789)

தொழுகை முறை



அபூஹுரைரா(ரழி) கூறியதாவது : நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை என்றும் கூறினார்கள்.
அந்த மனிதர் முன்பு தொழுதது போலவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்! என்று கேட்டார்.
நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதான மாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்காருவீராக! இவ்வாறே உமது எல்லாத் தொழுகைகளிலும் செய்து வருவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி (ர.அ.): 757,793)

7/29/2014

eid mubarak






EID AL FITR 2014






இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்



அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்..
சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், சிங்கை, மலேசியா, இந்தோனேசியா, புருனை ஆகிய நாடுகளிலும் நேற்று சிறப்பாக பெரு நாள் கொண்டாடப்பட்டது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், ஓமன் போன்ற நாடுகளில் இன்று பெரு நாள் கொண்டாடப்படுகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே! நமது பள்ளியில் காலை சிறப்பாக 7;15 மணிக்கு பெரு நாள் தொழுகை நடந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!

7/10/2014

வெள்ளிக்கிழமை



ரமலானில் முதல் வெள்ளிக்கிழமை குத்பா உரையை நமது பள்ளியில் இமாம் அவர்கள்

7/08/2014

நியுசிலாந்தில் உள்ள அழகிய பள்ளிவாசல்



நியூசிலாந்து தலை நகர் ஆக்லாந்தில் உள்ள மஸ்ஜிதே உமர் பள்ளிவாசலை தான் இங்கே பார்க்கிறோம். ரமலானில் இன்றைய பஜ்ர் தொழுகை நேரம் 6.20 இப்தார் நேரம் 5.33 நிமிடம். உலகின் பல நாடுகளில் வெயில் அதிகமாக இருக்கும் வேளையில் அங்கே இப்போது என்ன தெரியுமா? வெறும் 14 டிகிரி தான். 57°F / 14°C நமது இந்திய நேரத்தில் இருந்து சுமார் 6.30நிமிடங்கள் கூடுதலாக உள்ளது. (GMT + 12:00) எல்லா புகழும் இறைவனுக்கே!

சங்கையான ரமலான் இப்தாரில்...






6/30/2014

சங்கையான இப்தார்


முதல் நாளான இன்று நோன்பு திறப்பு எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் சிறப்பாக நடைபெற்றது.. சுமார் 150க்கும் மேற்பட்டோர் நோன்பு திறக்க வந்தனர்.. எல்லா புகழும் இறைவனுக்கே!


நோன்பு கஞ்சி


சங்கையான ரமலானில் தினமும் நோன்பு கஞ்சி அஸர் தொழுகைக்குப்பின் நமது பள்ளியில் வி நியோகம் செய்யப்படுகிறது. முதல் நாள் நோன்பு கஞ்சி கொடுக்கும்போது... எல்லா புகழும் இறைவனுக்கே!

முதல் நோன்பு துவங்கியது


அன்பான சகோதர சகோதரிகளே நமது பள்ளியில் நேற்று இரவு முதல் இரவுத்தொழுகை துவங்கியது. இரவுத் தொழுகை 8 + 3 11 ரக் அத் கள் தொழுகை நடத்தப்படுகிறது. முதல் நான்கு ரக் அத்கள் முடிந்ததும் சிறிது நேரம் நமது பள்ளி இமாம் சொற்பொழிவு .. அதன் பின்னர் மீன்டும் தொழுகை நடைபெறுகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே!


6/29/2014

Ramadan Kareem


அனைவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்.
நமது சகோதர சகோதரிகள் இந்த ரமலானில் நல் அமல்கள் செய்து இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெறுவோமாக! நம்மிடம் நல்ல ஒற்றுமையை எல்லாம் வல்ல இறைவன் தர அதிகம் அதிகம் பிரார்த்திப்போமாக!
நமது பள்ளியில் இஷாத் தொழுகை இரவு 8;45 மணிக்கும், இரவுத் தொழுகை சரியாக 9;00 மணிக்கும் நடைபெறும்.

தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ


தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ
அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம்,

வத் தவ்fகி லிமா துஹிப்பு ரப்பனா வ தர்ழா ரப்புனா வ ரப்புக்கல்லாஹ்.
தாரீமி 1625 1626.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...