11/17/2009

பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள்

பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள்
ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து..

கடமையான தொழுகைக்குப் பின்..

கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

''எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499

ஸஜ்தாவின் போது...

ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.

''ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 482

இரவின் கடைசி நேரத்தில்...

இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகின்றான். ''என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6321

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரயாணத்தின் போது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908

நோன்பாளி நோன்பு துறக்கும் போது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது. நீதியான அரசன், நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை, பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை விட்டும் உயர்த்துவான். அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 175

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்...

''பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 521

போர்க்களத்தில்...

''பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப் படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 2540

ஜும்ஆ நாளில்...

''வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று அபுல்காஸிம் (நபிலிஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6400

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து பிரார்த்திப்போமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...