நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.
நபி (ஸல்)அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ
சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்)அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்)அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி
திடலில் பெருநாள் தொழுகை
பெரும்பாலும் நபி (ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
பெருநாள்களில் பாங்கு இகாமத் சொல்லப்பட்டதில்லை
ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி
பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தத் தொழுகையும் இல்லை
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி
முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும்
நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா
பெருநாள் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்
வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி, இப்னுமாஜ்ஜா
பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி (ஸல்)அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக